இர.ப்ரீத்தி
'முதல் முறை வாக்களித்த அனுபவம் சொல்லுங்கள்!’ என்று இவர்களிடம் கேட்டபோது...
கார்த்தி, நடிகர்.

''நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு இருந்தப்போ வந்த தேர்தலில் முதல் முறை எனக்கு ஓட்டுப் போட சான்ஸ் வந்தது. ஆனா, என் பேரை லிஸ்ட்ல செக் பண்ணா, அதில் இல்லை! அலைஞ்சு திரிஞ்சு பேரை லிஸ்ட்ல சேர்க்கிறதுக்குள்ள அந்தத் தேர்தலே முடிஞ்சுபோச்சு. அடுத்த தேர்தலில் ஓட்டுப் போட நான் தனியாப் போயிருந்தேன். அப்ப என்னை யாருக்கும் தெரியாது. பெரிய க்யூ. பக்கத்து வீட்டுக்காரங்க, ஏரியா ஃப்ரெண்ட்ஸ்னு அரட்டை அடிச்சுட்டே போய் ஓட்டுப் போட்டேன். இப்போ இந்த எலெக்ஷன் லயும் அப்படி ஏரியா மக்களோட அரட்டை அடிக்கலாம்னு ஐடியா. வோட்டர்ஸ் ஐ.டி-யைத் தேடி எடுத்துவைக்கணுங்க. ஞாபகப் படுத்தினதுக்கு தேங்க்ஸ்!''
ஜோதிமணி, அரசியல்வாதி.

''96-ம் வருஷ எலெக்ஷனில்தான் நான் முதலில் வாக்களிச்சேன். அதே தேர்தலில் நான் ஆலங்குறிச்சி தொகுதியின் பூத் காங்கிரஸ் ஏஜென்ட்டும்கூட. அதனால், அந்தத் தேர்தல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். காலையில் இருந்தே பயங்கர பரபரப்பா இருந்தேன். வேலைக்கு நடுவுல ஓட்டமா ஓடிப் போய் என் வாக்கைப் பதிவு பண்ணிட்டு, மறுபடி தொகுதி வாக்காளர்களுக்கு உதவ ஆரம்பிச்சிட்டேன். கையில் இருந்த மையை ரொம்ப நாள் அழியவிடாம நிறைய பேர்கிட்ட பெருமையா காமிச்சுட்டே இருந்தேன்!''
தேஜஸ்வினி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

''என்னோட 18-வது பிறந்த நாள் அன்னிக்கு 'ஹை ஜாலி... நானும் இனிமே ஓட்டு போடலாம்’னு வீட்ல கத்திக் கூப்பாடு போட்டவள் நான். அந்த அளவுக்கு 'எப்படா ஓட்டு போடுவோம்?’னு காத்துட்டு இருந்தேன். தேர்தல் தேதி அறிவிச்சதுமே, ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து யாருக்கு வோட் பண்ணலாம்னு ஒரு மீட்டிங்கே போட்டோம். நல்லா மேக்கப் பண்ணிட்டு பளிச் காஸ்ட்யூமில் போய் பூத் க்யூவில் நின்னோம். ஏதோ கேம்பஸ் இன்டர்வியூவுக்குப் போற மாதிரி ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு கடைசி நேரத்திலும் வேட்பாளர்களின் தகுதிகளை அலசிட்டு இருந்தோம். வரிசையில் நிறைய பேர் வயசானவங்க. உடனே, 'இந்த நாட்டின் தலை எழுத்தை நம்மளைப்போல யங்ஸ்டர்ஸ்தான் காப்பாத்தணும்’னு பயங்கரமா சவுண்ட் விட்டுட்டு இருந்தோம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, பொங்கி எழுந்துட்டார் ஒரு தாத்தா. காச்மூச்னு கத்தித் தீர்த்துட்டார். அப்புறம் எங்க பேர் சொல்லக்கூட வாய் திறக்காம போய் பட்டன் பிரஸ் பண்ணிட்டு வந்தோம். நான் பட்டன் அமுக்கினதும்... பீப் சத்தம் கேட்டப்போ... மனசுக்குள்ளே ஒரே ஊலலல்லா!''
இளவழகி, கேரம் சாம்பியன்.

''2003 தேர்தலில்தான் முதல் வாக்களித்தேன். தேர்தலுக்கு இரண்டு மாசம் முன்னாடிதான் அமெரிக்க கேரம் சாம்பியன்ஷிப்ல ஜெயிச்சதுக்காக நம்ம அரசாங்கம் கொடுத்த பரிசுல சுடிதார் இருந்தது. சென்டிமென்ட்டா அந்த சுடிதார் போட்டுக்கிட்டு அம்மாகூட வாக்குச்சாவடிக்குப் போயிருந்தேன். மெஷின்ல எப்படி வாக்களிக் கணும்னு அதிகாரிகள் பொறுமையா சொல்லித் தந்தாங்க. ஆனாலும், அம்மாவைப் பக்கத்துல நிக்கவெச்சுக்கிட்டு அவங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்குப் பின்னாடி காத்துட்டு இருந்தவங்க, பொறுமை இழந்து திட்டாத குறையா என்னைத்துரத்தி விட்டாங்க. இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது. ஆனா, அவ்வளவு அசிங்கப்பட்டாலும் என் சக்சஸ் சென்ட்டிமென்ட்படி நான் ஓட்டு போட்டவங்கதான் அந்தத் தேர்தல்ல ஜெயிச்சாங்க!''
மதன் கார்க்கி, கவிஞர்.

''18 வயசுல நான் ஆஸ்திரேலியாவில் படிச்சுட்டு இருந்தேன். போன்ல பேசுறப்ப, 'இன்னிக்கு எலெக்ஷன். எல்லோரும் ஓட்டு போடப் போயிருந்தோம்’னு வீட்ல சொன்னப்போ, எனக்கு ஏக்கமா இருந்தது. போன எலெக்ஷன்லதான் குடும்பத்தோடு போய் ஓட்டு போட்டேன். காலையிலேயே போயிட்டதால், பூத்ல அன்னிக்கு செம கூட்டம். 'ஏ வைரமுத்து சார்டா’னு சொல்லி, அப்பாவையும் எங்களையும் நேரடியா உள்ளே அழைச்சிட்டுப் போயிட்டாங்க. பட்டன் அழுத்தும் வரை 'எங்கே தப்பான பட்டன் அழுத்திடுவோமோ?’ன்னு பதற்றமா இருந்துச்சு. நாங்க வெளியே வந்ததும், வெயிலில் வரிசையில் நின்னுட்டு இருந்தவங்க எங்களைத் திட்டினதும் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு!''
ஆண்ட்ரியா, நடிகை.

''காலேஜ் படிக்கிறப்பவே எனக்கு வோட்டர்ஸ் ஐ.டி வந்திருச்சு. ஆனாலும், போன எலெக்ஷன்லதான் வோட் பண்ணேன். ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வாக்களிக்கிற நடைமுறைகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதால, எந்தப் பதற்றமும் இல்லாம போய் பட்டன் பிரஸ் பண்ணிட்டு வந்தேன். நான் பூத்துக்குப் போனப்போ, கூட்டமே இல்லை. என்னை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே ரிசீவ் பண்ணாங்க. 'அச்சச்சோ.... ஆட்டோகிராஃப் எதுவும் கேட்டுருவாங்களோ’ன்னு நான் பயந்துட்டே இருந்தேன். ஆனா, நம்ம அதிகாரிகள் செம சின்சியர். அந்த ஓப்பனிங் ஸ்மைல் தவிர, எந்த ஸ்பெஷல் சலுகைகளும் இல்லாம என்னை ட்ரீட் பண்ணாங்க!''