விகடன் டீம்
பார்த்த படம்
ரோஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

'' 'மஹதீரா’ தெலுங்குப் படம் பார்த்து அசந்து போயிட்டேன். ராம்சரண் தேஜா அட்டகாசமாக நடித்திருக்கிறார். 400 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதலர்கள் இந்த ஜென்மத்தில் இணையும் கதை. பிரமாண்டமான சினிமா. இந்தப் படத்தை இன்னும் தமிழில் ரீ-மேக் பண்ணாமல் இருக்கிறார்களே என்று ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது நான் ராம்சரண் தேஜாவின் ஃபேன்!''
கலந்துகொண்ட நிகழ்ச்சி
வேல்முருகன், கிராமிய இசைக் கலைஞர்.

''திரை இசைக் கலைஞர்களின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை மணி நேர நிகழ்ச்சி செய்தேன். தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய ஜேம்ஸ் வசந்தன் வரையிலான இசைத் துறை வல்லுநர்கள், பாடகர்களின் பெயர்களையும் அவர்களின் மாஸ்டர் பீஸ் பாடல் வரிகளையும்கொண்ட ஒரு பாடல் பாடினேன். இடையிடையே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி என்று ஆட்டங்களும் உண்டு. இசைக் கலைஞர்கள் அனைவரும் பாராட்டினார்கள். பலரைச் சந்தோஷப்படுத்தும் இசைக் கலைஞர்களை நான் கொஞ்ச நேரம் சந்தோஷப்படுத்திய திருப்தி!''
சந்தித்த நபர்
சாரு நிவேதிதா, எழுத்தாளர்.

''ராஜாமணி என்று ஒரு பத்திரிகையாளர். நடுத்தர வயதில் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். சோவின் நெருங்கிய நண்பர். அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவு முழுவதையும் சோ ஏற்றுக் கொண்டார் என்றாள் என் மனைவி. இப்போது ராஜாமணியின் புதல்வர் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். சோவை அடிக்கடி ராயர் கஃபேயில் பார்த்திருக்கிறேன். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பார். ஆனாலும், பேச மாட்டேன். ராஜாமணி பற்றிய செய்தி கேள்விப்பட்டதும் சமீபத்தில் சோவை அங்கு சந்தித்தேன். 'முகமது பின் துக்ளக்’கில் காலை மடக்கி மடக்கி நடப்பாரே, அந்தக் கிண்டல் அப்படியே இருந்தது. சோவின் மனிதாபிமானம், நேர்மை, எளிமை ஆகிய குணங்கள் மீது மதிப்பு இன்னும் அதிகரித்தது!''
சென்ற இடம்
சங்கர், 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’.

'' 'லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்’. இது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி அடைபவர்கள் பயிற்சி பெறும் அகாடமி. முசௌரியில் உள்ளது. நான் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறாததால், அந்த அகாடமிக்குச் செல்லும் வாய்ப்பு கைகூடாமலே இருந்தது. ஐ.பி.எஸ். தேர்வு தேறி, அங்கு பயிற்சி பெறும் என் தங்கை பிருந்தாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்றேன். அங்கு பயிற்சியில் இருந்த 240 பேரில் என் மாணவர்கள் 16 பேர். அகாடமி முழுக்க என்னைச் சுற்றிக் காட்டினார்கள். அங்கிருந்து கிளம்பும்போது என் தங்கை மீது லேசான பொறாமைகூட எட்டிப் பார்த்தது!''
பாதித்த சம்பவம்
பாலாஜி சக்திவேல், இயக்குநர்.

''சமீப காலமாக இளைஞர்கள் மது அருந்திவிட்டுச் செய்யும் சட்ட விரோதச் செயல்கள் கடுங்கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகின்றன. மது அருந்துவது அந்தஸ்து என்கிற மாயையை நம் திரைப்படங்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், மதுவால் ஏற்படும் பாதிப்புகளை எந்தப் படங்களும் பதிவு செய்வது இல்லை. கோவையில் ஓர் இளைஞன், போதையில் ஒரு சிறுமியையும் கல்லூரி மாணவியையும் கற்பழித்துக் கொன்றதாக வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன். நாய் குதறிய அந்தக் குழந்தையின் படத்தை இப்போது நினைத்துப்பார்த்தாலும் மனம் பதறுகிறது. அந்த இளைஞனைத் தவறு செய்யத் தூண்டியதில் மதுவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்!''
படித்த புத்தகம்
பிரபஞ்சன், எழுத்தாளர்.

''ராபர்ட்டோ கலாஸ்ஸோ என்ற இத்தாலிய எழுத்தாளர் எழுதி, தமிழ் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் நாவல் 'க’. மொழிபெயர்த்தவர்கள் ஆனந்த் மற்றும் குவளைக்கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதும் ரவிக்குமார். இந்திய புராண பாத்திரங்களான இந்திரன், பிரஜாபதி போன்றவர்கள் 'நான் யார்?’, 'வாழ்வு என்பது என்ன?’ என்று பல கேள்விகளை எழுப்பி அர்த்தத்தையும் சாராம்சத்தை யும் தேடும் புத்தகம். ஓர் இத்தாலிய எழுத்தாளர் இந்திய தொன்மம் ஒன்றை மையமாகவைத்து எழுதிய நாவல் என்பதும் புராணப் பாத்திரங் களில் மனிதத் தன்மையைப் புகுத்திய படைப்பு என்பதும் குறிப்பிடத்தகுந்தது!''
கேட்ட இசை
ஷைனி வில்சன், விளையாட்டு வீராங்கனை.

''பொதுவாக நான், மலையாளப் படங்களின் இசைத் தட்டுகளையும் ஆல்பங்களையும் விரும்பிக் கேட்பேன். தமிழிலும் அவ்வப்போது கேட்பேன். அப்படி சமீபத்தில் நான் கேட்டு ரசித்தது 'ஆடுகளம்’ படத்தின் பாடல்களை. ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் நம்மைக் கவராது. ஆனால், இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் என்னை வசீகரித்தன. ஜி.வி.பிரகாஷின் இசையில் அத்தனை ரம்மியம்!''
வாங்கிய பொருள்
வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர்.

''நாஞ்சில் நாடனின் எழுத்துகள் மூலம் முனைவர் கு.சீனிவாசன் எழுதிய 'சங்க இலக்கியத் தாவரங்கள்’ என்கிற புத்தகம் குறித்துஅறிந்து கொண்டதில் இருந்தே, அதை எப்படியேனும் வாங்கிவிட வேண்டும் என்று மாதக்கணக்கில் தேடி அலைந்தேன். ஆனால், கிடைக்கவே இல்லை. சமீபத்தில் தஞ்சாவூர் வந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரனிடம் அந்தப் புத்தகம் கிடைக்காத ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எங்கிருந்தோ தேடிப்பிடித்து அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார். எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்!''