வேதனையான விஷ சுழற்சிஇரா.சரவணன், படங்கள்:என்.விவேக்
##~## |
மூத்த அரசியல் தலைவரும் உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் நம் விரல் பிடிக்கிறார்...

வேதனையான விஷ சுழற்சி!
''வேட்பாளர்களின் தகுதி, திறமைகளை வாக்காளர்கள் ஆராய வேண்டும். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் சாதியை வைத்தும், மதத்தை வைத்தும் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். சிலர் குடும்பரீதியாக வேட்பாளர் களை அறிவிக்கிறார்கள். இது ஜனநாயகத் தீங்கு. எத்தகைய தகுதியையும் கருத்தில்கொள்ளாமல், பணத்தை வைத்தே பதவியைக் கைப்பற்றுவதும், பின்னர் பதவியை வைத்தே பணத்தைப் பெருக்குவதும் வேதனையான விஷ சுழற்சி. பணத்தை மட்டும் அல்ல... எக்கச்சக்க வாக்குறுதிகளும், கவர்ச்சித் திட்ட அறிவிப்புகளும் அப்படிப்பட்டவைதான். கட்சியின் கொள்கைகள் மீதோ, திட்டங்கள் மீதோ நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
கொள்கையும் கோட்பாடும் புதைகுழியில் தள்ளப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்யத் தயங்காத மூர்க்கம் இன்றைய அரசியலுக்கு முளைத்துவிட்டது. சக்தி மிகுந்த வாக்கை, கையில் வைத்திருக்கும் வாக்காளன் இனியும் இத்தகைய போக்குக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது!''
சபைக்கு வந்த சந்தர்ப்பவாதம்!

''நேற்று வரை ஒரு கூட்டணியில் இருந்த கட்சி, இன்றைக்கு இடம் மாறி இன்னொரு கூட்டணிக்குப் போகிறது. அடுத்தடுத்துத் தாவ இன்றைக்கு அரசியல் கட்சிகள் தயங்குவதே இல்லை. மக்கள் என்ன நினைப்பார்கள் என ஒருகணமேனும் கூச்சப்படுவதும் இல்லை.
1967-ல் காங்கிரஸைத் தோற்கடிக்க ஒன்றுக்கொன்று முரணான கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் கூட்டணி அமைத்தன. தி.மு.க அன்றைக்கு உருவாக்கிய அந்த சந்தர்ப்பவாதம் வெற்றி பெற்றது. அதன் பிறகான அத்தனை தேர்தல்களிலும் சந்தர்ப்பவாதத்தின் பலி பீடத்தில் ஜனநாயகம் கிடத்தப்பட்டு இருக்கிறது. பொருந்தாக் கூட்டணியையும் சந்தர்ப்பவாதத்தையும் புரிந்துகொள்ளும் வாக்காளர்களால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்!''
தேர்தல் புறக்கணிப்பு தீர்வாகுமா?
''100 சதவிகித வாக்குப் பதிவு எங்கேயுமே நிகழ்வது இல்லை. காரணம், 40 சதவிகித வாக்காளர்கள் கட்சிகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். அதனால், நாம் வாக்களிப்பதால் என்ன மாற்றம் உருவாகிவிடப் போகிறது என்கிற தயக்கம் பலருக்கும் இருக்கிறது. உண்மையாகச் சொன்னால், பதிவாகும் 60 சதவிகித வாக்குகளில் 20 சதவிகிதம் கள்ள வாக்குகள்தான். அதையும் கணக்கிட்டால் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
இது ஆரோக்கியமான நிலை இல்லை. மக்கள் ஜனநாய வழிகளின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்பது ஆபத்தானது. எகிப்து, லிபியாவில் நடந்தது போன்ற மக்கள் போராட்டத்துக்கே அது வழி வகுக்கும்.
அதனால், 100 சதவிகித வாக்குப்பதிவைச் சாத்தியமாக்க அரசியல் தலைவர்கள் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் வாக்களிப்பது கட்டாயம் என சட்டம் இயற்றப்பட வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையுமே பிடிக்காவிட்டால், '49 ஓ’ மூலமாக, நமது புறக்கணிப்பையும் பதிவு செய்யலாம். இதில், எதையுமே செய்யாமல், 'வாக்களிக்க மாட்டேன்’ என தேர்தலைப் புறக்கணிப்பது, நாம் உண்ணும் உணவை விஷமிட்டுச் சமைப்பதற்கு ஒப்பானதாகும்!''
சாதியா சாதிக்கும்?

''சாதி ஒழிப்பைத் தாரக மந்திரமாகக் கொண்ட திராவிடக் கட்சிகள்தான் வேட்பாளர் அறிவிப்பு தொடங்கி, அமைச்சரவை வரை சாதியைக் கெட்டியாகப் பிடித்திருக்கின்றன. அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகிய நால்வருமே சாதி அடிப்படையில் பெரும்பான்மை பெற்றவர்கள் இல்லை. தங்களின் சாதி பலத்தில் முதல்வர் நாற்காலி யில் இவர்கள் அமரவில்லை.
ஆனால், பதவிக்கு வந்த பிறகு வெற்றிக்கு எது காரணம் என்பதை மறந்து, அமைச்சரவையில் சாதியைப் புகுத்தினார்கள். அதுதான் பின்னால் ஏற்பட்ட பெருந் தவறுகளுக்குக் காரணமானது.
ஆனாலும், இதற்கு நடுவே ஒரு நம்பிக்கைக் கீற்று புலப்படுகிறது. கடந்த சில தேர்தல்களில் பல சாதிக் கட்சிகள் புதிதாக உருவெடுத்தன. ஆனால், அத்தகைய கட்சிகள் வெற்றி பெறவில்லை. பெரும்பாலான மக்கள் சாதிகளைக் கடந்து அரசியல்ரீதியாக ஆராய்ந்து வாக்களிக்கும் ஆரோக்கிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் கள். 'சாதியால் எதையும் சாதிக்க முடியாது’ என்கிற பேரறிவு வாக்கா ளர்களிடத்தில் மேலும் பெருகினால், சாதி அரசியல் அடியோடு அகற்றப்பட்டுவிடும்!''
சீரழிக்கும் சினிமா கவர்ச்சி!
''மற்ற நாடுகளில் மக்கள் நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால், நாமோ நடிகர் களை 'நாளைய தலைவர்’களாகப் பார்க்கி றோம். இந்தியாவின் பிற மாநிலங்களில்கூட இந்தப் போக்கு இல்லை. அமிதாப் பச்சனைவிட ஒரு பெரிய நடிகர் உண்டா? அவரே, அரசியலில் முட்டி மோதி தோற்றுத் திரும்பினார். கேரளத்தில் நடிகர் பிரேம் நசீர் தனிக் கட்சி ஆரம்பித்தார். ஒரே தேர்தலோடு காலியானார். கர்நாடகத்தில் பெரும் செல்வாக்குகொண்ட நடிகர் ராஜ்குமார் அரசியல் களத்துக்கே வர வில்லை. ஆந்திராவில் மட்டும் நடிகர் என்.டி.ஆர். அபரிமித வெற்றி பெற்றார். அதுவும் காங்கிரஸ் மீதான கோபத்தில் விளைந்த வெற்றி. அதுவும் சில காலம்தான். பின்னர் அவரும் தோற்க வேண்டிய நிலை!
ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சினிமா கவர்ச்சியைக் காட்டியே ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற நிலை உருவாகி, இன்றளவும் தொடர்கிறது. இது தமிழகத்தின் சாபக்கேடு.
வாக்குகளின் வல்லமையை உணர்ந்தவர்கள் யாரும் இத்தகைய கவர்ச்சிக்கு வசப்பட மாட்டார் கள்!''
யார் கையில் ஆட்சி?
''இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றிப் பாதையில் நடத்தியவர் வின்ஸ்டன் சர்ச்சில். போர் முடிந்து 1946-ல் பிரிட்டன் பிரதமருக்கான தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டார். வெற்றி வீரரான அவர்தான் அமோக வெற்றியை அந்தத் தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிரிட்டன் மக்களோ

சோஷலிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த அட்லியைப் பிரதமர் ஆக்கினார்கள். காரணம், சர்ச்சில் போர்க் காலத்துக்கு ஏற்ற பிரதமர் என்பதும் அட்லி போரால் ஏற்பட்ட பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியவர் என்பதும் பிரிட்டன் மக்களால் தெளிவாக அறியப்பட்டு இருந்தது.
'நமக்கு யார் தேவை?’ என ஆராய்கிற பக்குவம் ஒவ்வொரு வாக்காளருக்கும் அமைய வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என நீர் ஆதார சோகங்கள் மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளைத் தத்தளிக்கவைத்து இருக்கின்றன. ஆற்று மணல், கிரானைட், இரும்புத் தாது என இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.
கல்வி வணிகமானதும் மீனவப் படுகொலைகளால் கடலே ரத்தமானதும் யாரால் நிகழ்ந்தன? வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது இந்த நிஜங்கள் நம் நெஞ்சை அறைந்தால், நிச்சயம் நம் வாக்கு நேர்மையானதாக இருக்கும்!''