சமஸ்
##~## |


இந்தியா, உள்நாட்டுத் தயாரிப்பான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை ராணுவத்தில் சேர்த்து இருக்கிறது. சீனா, ஒரு படி மேலே போய், எதிரி நாட்டு ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத சூப்பர்சானிக் போர் விமானங்களைச் சொந்தமாகவே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழி மறித்து அழிக்கும் ஏவுகணையை ஆறாவது முறையாகச் சோதனை செய்து பார்த்திருக்கிறது இந்தியா. சீனாவோ அடுத்தகட்டமாக, லேசர் ஆயுத ஆராய்ச்சியில் இறங்கிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியரு போட்டி ஊக்குவிக்கப்படுகிறது.
உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்கலாம். நீண்ட காலமாக இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து பெருமை கொள்வோம். நமது ராணுவ நடவடிக்கைகள்கூட பாகிஸ் தானின் அணுகுமுறையைப் பொறுத்தே அமையும். இப்போது சில வருடங்களாக எங்கே இருந்து முளைத்தது சீனா?
ஒரு காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா பனிப் போர் உருவான மாதிரி, இப்போது இந்தியா - சீனா பனிப் போர் ஊதி ஊதி உருவாக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்த ஊதிப் பெருக்கல் 2007-ல் திட்டமிடப்பட்டது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் சர்வதேச ஆயுதச் சந்தை 9 சதவிகித இழப்பைச் சந்தித்தது. இராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்கா படைகளைப் படிப்படி யாகக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்தபோது, அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் சற்றே ஆட்டம் காணத் தொடங்கின. அங்கே ஆரம்பித்தது ஆயுத அரசியல்!
உலகில் பாதுகாப்புக்காகச் செலவிடும் நாடுகளில் அமெரிக்கா முன்னணி வகிக்கிறது. ஏறத்தாழ

75 லட்சம் கோடி மதிப்புள்ள சர்வதேச ஆயுதச் சந்தையில், 41.5 சதவிகித ஆயுதங்களை அமெரிக்கா வாங்கிக் குவிக்கிறது. சுமார் 20 சதவிகித ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகள் பங்கு. 7.5 சதவிகித ஆயுதங்களை வாங்குகின்றன மத்தியக் கிழக்கு நாடுகள். அடுத்த இடத்தில் இருக்கும் சீனா (5.8 சதவிகிதம்), இந்தியா (2 சதவிகிதம்) இடையே ஒரு பனிப் போர் உருவானால், ஆயுதங்களை ஆடித் தள்ளு படியில் ஆஃபர் போட்டு விற்கலாமே?
இப்படித்தான் இந்த போர் ஆட்டம் தொடங்கியது. விளைவு? 2008-ல் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளில்

41,000 கோடிக்கு அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டு இருக்கிறோம். கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையின்போது, மேலும்

15,000 கோடிக்கு '10 சி - 17 குளோப் மாஸ்டர்’ விமானங்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. இப்போது இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத விநியோகஸ்தர் அமெரிக்காதான்!
ஆயுத நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். ஏறத்தாழ 1.5 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) பணம் புரளும் ஆயுதத் தயாரிப்புத் துறையின் உயிர் ஆதாரமே... நாடுகளுக்கு இடையேயான பகை தான்! எல்லா நாடுகளும் அண்ணன் தம்பி யாகப் பழகிவிட்டால், ஆயுதங்களை எப்படி விற்பது? யுத்தம் மூண்டால்தானே அவர்கள் நித்தம் லாபம் சம்பாதிக்க முடியும்?! இதற்காக ஒவ்வொரு நாட்டைச் சுற்றியும் பதற்றமான சூழல்களையும் ஆயுதங்கள் வாங்குவதற்கான தேவையையும் உருவாக்குவதற்காக அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் பில்லியன்களில் முதலீடு செய்கின்றன.
அமெரிக்கா - சோவியத் பனிப் போர் இருந்த காலகட்டத்தில், ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் உச்சத்தில் இருந்தன. சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் ஆயுத நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அன்றைய விற்பனை உயரத்தை இன்று வரை அவர்களால் தொட முடியவில்லை. இப்போது இந்தியா - சீனாவை வைத்து சேல்ஸ் ரேட்டை ஏற்ற முயற்சிக்கிறார்கள்.
உலகப் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து முன்னணி அமெரிக்க ஆயுத நிறுவனமான 'நார்த்ராப் க்ரூமேன்’ தன்னுடைய ஆயுத விற்பனைக்கு ஆள் பிடிக்க 20.6 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது. அமெரிக்க அரசு 'எஃப் 22’ ரக விமானங்கள் பயனற்றவை எனக் கருதி அவற்றின் கொள்முதலை நிறுத்த முயன்றபோது, 'லாஹூட் மார்டின்’ ஆயுத நிறுவனம் தன்னுடைய 'செல்வாக்கு’ மூலம் அதைத் தடுத்து நிறுத்தியது.
சரி, இந்தியாவுக்கு இந்தப் போட்டி தேவைதானா? இந்தியாவில் 60 கோடி மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 50 கோடி மக்கள்

100 கூட சம்பாதிக்க முடியாதவர்களாக வாழ்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவால் கல்வித் துறைக்காக அதிகபட்சம்

52,057 கோடிக்கு மேல் ஒதுக்க முடியவில்லை. இவ்வளவு குறைகளோடு, இவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவிக்க வேண்டுமா?
வெளிநாட்டு ஆபத்துகளைச் சுட்டிக் காட்டி இந்தச் செலவை நியாயப்படுத்தலாம். போரினால் ஏற்படும் பொருளாதார இழப்பு, பாதிப்படையும் வர்த்தக சூழல், அணு ஆயுதப் பாதுகாப்பு சூழல் ஆகியவற்றால் இந்தியா மீது போர் தொடுக்க எந்த நாடும் ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கும். இப்போது இந்தியாவுக்கு இருக்கும் ஒரே போர் அபாயம்.. உள்நாட்டுப் போர்தான்!
வறுமையும், வேலைவாய்ப்பு இன்மையும், விரக்தியும் சூழ்ந்த பின்னணியில் மாவோயிஸ்ட்டுகளில் ஆரம்பித்து, பல தரப்புகளில் இருந்தும் உள்நாட்டுப் போர் உருவாவதற்கான சூழல் இந்தியாவுக்குள் இருக்கிறது.
சொந்த நாட்டை வளப்படுத்தாமல், இன்னொரு நாட்டை எதிரியாகக் காட்டிக் கொண்டு, ராணுவ பலத்தை மட்டுமே பெருக்கி னால், அந்த நாட்டின் நிலை என்னவாகும்? பாகிஸ்தான் அதற்கு உதாரணம். கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை, தொழில்நுட்பம் என எந்த விஷயத்திலும் முன்னேற முடியாமல், தினம் குண்டுவெடிப்புகளுக்கு இடையில் அல்லாடும் பாகிஸ்தான்தான் நமது ரோல் மாடலா?
இப்போது நாம் சீனாவாகப் போட்டி போடுகிறோமா... இல்லை பாகிஸ்தானாகப் போட்டியிடுகிறோமா?