மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சினிமா வெறியின் 40 ஆண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்

ஷாஜி ஓவியங்கள் : ரவி

தேவாதி தேவரெல்லாம்

தெண்டனிடும் வேந்தனடா

வாளேந்தும் மன்னனடா

வாலிபத்தில் கண்ணனடா...

என்று மலேசியா வாசுதேவன் பாடிய பாடலுக்கு வாயசைத்துக்கொண்டு கூத்து, நாடகம், கதாகாலட்சேபம், அந்தர் பல்டியெல்லாம் கலந்த புதுவகைக் கலையை மேடையில் நிகழ்த்தி, ஊரின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார் ராஜா எனும் ரஜினிகாந்த். அந்தப் பட்டிக்காட்டில் ஓர் ஏழையாகப் பிறந்தார் என்பது மட்டுமே அவர் செய்த தவறு. மதராஸ் மாநகரில் ஒருமுறை கால் பதித்தால்போதும், அடுத்த கணமே உலகறியும் சினிமா நட்சத்திரமாவார் அவர் என்பதில் அவருக்கோ ஊராருக்கோ சந்தேகமில்லை. இறுதியில் ஒருநாள் மதராஸுக்கு வந்து இறங்கவே செய்கிறார். ‘விஜயா வாகினி’ ஸ்டூடியோவின் உள்ளே நுழைய முயன்ற அவரை காவலாளி வசைபாடித் துரத்துகிறார். ‘ஏ.வி.எம்’ ஸ்டூடியோ காவலாளியிடம், முதலாளியின் சொந்தக்காரன் என்று பொய் சொல்லி உள்ளே நுழைகிறார். அங்கே ஓர் இயக்குநர் இவருக்கு உடனடியாகவே கதாநாயகன் வேடம் தருவதாக உறுதியளிக்கிறார். சம்பளம் ஒன்று இரண்டு அல்ல, மூன்று லட்சம் ரூபாய்! இவர் இயக்குநருக்குத் தரவேண்டும்!

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஏ.வி.எம், பிரசாத், பரணி போன்ற சென்னையின் மாபெரும் ஸ்டூடியோக்களை முதன்முதலில் பார்த்தபோது, பலகாலம் முன்பு மூணார் பங்கஜம் கொட்டகையில் பார்த்த ராஜா சின்ன ரோஜா படத்தின் இந்தக் காட்சிதான் என் மனதில் ஓடியது. கிராமங்களிலிருந்தோ தூரத்து ஊர்களிலிருந்தோ சினிமாவில் சாதிக்கவேண்டு மென்று சென்னையில் வந்திறங்கிய பெரும்பாலானோரின் வாழ்க்கையிலும் வேறுவேறு வடிவங்களில் இது நிகழ்ந்திருக்கும். ரஜினிகாந்த், மலேசியா வாசுதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் எனப் பெரும்புகழை அடைந்தவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்லர்.

பெயர்பெற்ற இசைத் தயாரிப்பு நிறுவனத்தின் மேல்நிலை நிர்வாகி என்பதால், எந்த ஸ்டூடியோவுக்குள்ளும் நுழைய எனக்குத் தடையிருக்கவில்லை. இசைப்பதிவிற்கான மாபெரும் வசதிகள் அந்த ஸ்டூடியோக்களுக்குள் இருந்தன.

ஏ.வி.எம்மிற்குள்ளே நான்கு ஒலிப்பதிவுக் கூடங்கள். விஜயாவில் இரண்டு. இவை மட்டுமல்லாது சாரதா, சத்யா, சங்கீதா, அரவிந்த், கோதண்டபாணி... எல்லா இடமும் நான் சென்றுவந்தேன். அப்போதெல்லாம் அங்கே பல இடங்களில் படப்பிடிப்புகள் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கே சென்று அவற்றை உற்றுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவேன், ஆனால் கௌரவப் பிரச்னை. செய்யும் வேலையின் செல்வாக்கும் மதிப்பும் என்னை அங்கே போகவிடாமல் தடுத்தன. ஏ.வி.எம்மிலுள்ள செட்டியார் பங்களாவின் முன்னால் செல்லும்போது, இளவயதில் பார்த்த எத்தனையோ படங்களின் நினைவுகள் வரும். எண்ணற்ற தமிழ் மலையாளப் படங்களில் நாயகனின், நாயகியின், வில்லனின், வசியக்காரியின் வீடும் பூந்தோட்டமுமாக நடித்த இடம். அக்காலத்து ரசிகர்களுக்கு ஒரே இடத்தைப் பல படங்களில் மீண்டும் மீண்டும் பார்ப்பதில் எந்தவொரு சிக்கலும் இருக்கவில்லை. விமர்சனங்கள் ஏதும் இல்லாமல், சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்தே அவர்கள் சந்தோஷப்பட்டனர்.

ஞாலிப் பூவன் வாழைப்பூ போல

வேலைக்குச் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்க வங்கிக்குச் சென்றபோதுதான் தெரியவந்தது, எனது சம்பளம் இன்னும் கணக்கில் வரவில்லை என்று. அலுவலகத்திலிருந்து பணம் வங்கியில் செலுத்திப் பல நாள்கள் ஆகிவிட்டன! வங்கி மேலாளரை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்க வேண்டும். கண்ணாடி வழியாக மேலாளரின் அறையை எட்டிப் பார்த்தேன். மூக்குக் கண்ணாடி அணிந்த மெலிந்த மேலாளர், எதிரே அமர்ந்திருந்த பெண்மணியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். வாழைப்பூ வண்ணத்தில் சேலை உடுத்திய அப்பெண்ணின் முகம் பார்க்க முடியவில்லை. “அந்தம்மா உள்ளே போய் ரொம்ப நேரமாச்சு. நீங்க கதவத் தட்டிட்டு உள்ளே போலாம்” கணக்காளர் சொன்னார். கண்ணாடிக் கதவைத் தட்டியதும் “உள்ளே வாங்க” என்று மேலாளர் சைகை செய்தார். அவரிடம் புகாரைச் சொல்வதற்கிடையே ஓரக்கண்ணால் நான் அந்த வாழைப்பூ சேலைக்காரியைப் பார்த்தேன். ஒருகணம் எனது உடல் உறைந்தே போனது. அந்த இருக்கையில் மலர்ந்த முகத்துடன் இதோ அமர்ந்திருக்கிறார் சாக்ஷாத் ஜெயபாரதி.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஞாலிப்பூவன் வாழைப் பூபோல

ஞாற்றுவேலைக் குளிர் போல

நான் இன்றொரு நாட்டுப் பெண்ணின்

நாணம் முற்றிய சிரிப்பைக் கண்டேன்… ஆ….. ஆ….. ஆ….. ஆ…..

‘கரகாணாக் கடல்’ படத்தில் ஜெயபாரதி நடித்த பாடல், 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஏதோ கிராமத்துப் பாதையிலிருந்து எனது காதில் சன்னமாக ஒலித்தது. காலத்தினூடாகப் பாய்ந்தோடும் ஒரு ரயில்வண்டியின் மின்னிமாயும் அறைகளைப்போல் ஜெயபாரதி கதாநாயகியாக நடித்த நூற்றுக்கணக்கான மலையாளப் படங்களின் காட்சிகள் எனது கண்முன் ஓடின. துளியளவும் மிகையில்லாமல் காதல் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் இவ்வளவு துல்லியமாக நடித்து வெளிப்படுத்திய வேறு எந்த நடிகை இருந்தார்?

காதலனை நோக்கி மலரும் அந்த அழகுக் கண்களால், பூப்போன்று ஒளிரும் அந்தப் புன்சிரிப்பால் தனது இதயத்தையே எடுத்துக் கொடுப்பது போல்தானே அவர் நடித்திருக்கிறார். ‘இவ்வளவு அழகாய், ஆழமாய் என்னையும் ஒரு பெண் காதலித்திருந்தால், அது எவ்வளவு உணர்ச்சிமிக்கதாக இருந்திருக்கும்!’ என்று ஆசைப்படாத மலையாளி இளைஞன் அக்காலத்தில் இருந்திருப்பானா? நினைவுகளின் பாதி மயக்கத்தில் என்னையே மறந்து நான் நின்றுகொண்டி ருக்கும்போது, ஜெயபாரதி எழுந்து ஓர் இளம் காற்றாக வெளியே சென்றார். அவர் நடந்துபோன வழியில் காதலின் நறுமணம் பரந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. மதிமயக்கும் அந்தப் புன்னகையை நேரில் பார்க்கவோ அந்த விரல்களைத் தொட்டு ஒருமுறை கைகுலுக்கவோ முடியவில்லையே என்ற வருத்தத்துடன் நின்றுகொண்டிருந்த என்னிடம் மேலாளர் அமரச் சொன்னர். ஜெயபாரதி அமர்ந்திருந்த அதே இருக்கையில் நான் அமர்ந்தேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

அந்த வங்கியின் ஒரு முக்கிய வாடிக்கையாளராக இருந்தவர் இசையமைப்பாளர் கே.ஜே.ஜாய். ஒளிர் பச்சை நிறத்திலான அபூர்வ ரக பென்ஸ் காரில் அடிக்கடி அங்கே வந்திறங்கும் கே.ஜே.ஜாயை பலமுறை பார்த்திருக்கிறேன். மலையாளத்தின் ஆர்.டி.பர்மன் என்றோ இளையராஜா என்றோ அழைக்குமளவில் எனது பதின்பருவ இசை ஆதர்சங்களில் ஒருவராக இருந்தவர். இதயம் தொட்ட எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர். மலையாளத்திற்குப் பழக்கமாகிப்போன இசையமைப்புப் பாணிகளைத் துறந்து,

எம்.எஸ்.விஸ்வநாதனும், சங்கர் ஜெய்கிஷனும், சலீல் சௌத்ரியும் லக்‌ஷ்மி காந்த் பியாரேலாலும் உருவாக்கிய இசையினால் உந்தப்பட்டு, தனக்கென்று தனித்துவமான ஓர் இடத்தை அமைத்தவர் ஜாய். அதனூடாக மலையாளத் திரையிசையின் முகத்தையே மாற்றிய மேதை. ஒரு திரைப்படக் கதாநாயகனைப் போன்று அழகனான ஜாய், ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆஜானுபாகுவாக, கறாரானவராகத் தோற்றமளித்தார். அவர்மேல் எனக்கிருந்த மிகுந்த மரியாதை தந்த அச்சத்தினால் அவரிடம் பேசவோ நெருங்கவோ என்னால் முடியவில்லை.

‘என்போன்ற சினிமாப் பிரபலங்களைப் பகைத்தால் உங்கள் கதி இதுதான்டா’ என்று அவர் சொல்லாமல் சொன்னார்

ஜாயைவிடவும் அதிகமாக அறியப்படும் பல சினிமா பிரபலங்கள், நுங்கம்பாக்கம் நெடும்பாதையிலிருந்த எங்கள் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்தனர். ஆனால் அவர்களைச் சற்றே தள்ளி நின்று பார்க்க மட்டும்தான் என்னால் முடிந்தது. பயிற்சிக் காலத்தில் யாருடனும் பேசவோ பழகவோ நமக்கு அனுமதியில்லை. முன் காலங்களில் நமது ஆதர்சங்களாக நினைத்த சிலர், நமது கண்முன்னே வந்து நிற்கிறார்கள். ஆனால், அவர்களுடன் கைகுலுக்கவோ உரையாடவோ நமக்கு அனுமதியில்லை! பிரபலங்களுடன் பழகக் கூடாது. ஆனால், தற்காலத்தில் இசைத்துறைக்கு அறிமுகமான ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன், சரத், அனுராதா ஸ்ரீராம் போன்ற புதுப் பாடகர்களுடன் பழகுவதில் தடையிருக்கவில்லை.

ஒருநாள் ஆறடி உயரத்தில் தடித்துக் கறுத்த ஒருவர் அங்கே வருவதைக் கண்டேன். முட்டி வரைக்கும் நீட்டமான தளர்ந்து அசைந்த சந்தன வண்ணக் குர்தாவும் இருள் வண்ண பேன்ட்டும் அணிந்திருந்தார். இசையமைப்பாளர் ரவீந்திரன்தான் அவர் என்று அறிந்ததும் ‘தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி…’, ‘ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீதான்…’ என்றெல்லாம் என் மனம் முணுமுணுக்கத் தொடங்கியது. இருக்கையிலிருந்து என்னையறியாமல் எழுந்து வேகமாக அவரிடம் சென்றேன். “நீங்கள் இசையமைப்பாளர் ரவீந்திரன்தானே?” என்று அவரோடு கைகுலுக்கக் கை நீட்டினேன். “ஆமா, நான் ரவீந்திரன். நீங்க?” என்று அவர் கேட்டு முடிக்கும் முன் பின்னாலிருந்து “ஷாஜீ... ஒய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர்? கோ அண்ட் டூ யுவர் ஒர்க்” என்று ஓர் இடிமுழக்கம். எனது மேலதிகாரி. அவர் ரவீந்திரனைக் கைகுலுக்கி உள்ளே அழைத்துச் செல்வதைப் பார்த்து வாடிப்போய் நின்றேன்.

மிஸ்டர் கல் ராஜ்

எனது பயிற்சிக்காலம் முடியும் தறுவாயில், ஆஜானுபாகுவான மற்றொரு மனிதர் எமது அலுவலகத்திற்கு வந்தார். தமிழர்தான். எங்கேயோ பார்த்த முகம். அவர் நேரடியாக என்னை நோக்கி வருகிறார்! “மச்சா என்னத் தெரியலயாடா?” பலகாலமாக நெருக்கமாகத் தெரிந்த ஒருவருடன் பேசும் லாகவத்துடன் அவர் எனது தோளில் தட்டினார். கை அழுத்தமாகக் குலுக்கினார். பின்னர் தமிழ் கலந்த மலையாளத்திற்குப் பேச்சை மாற்றி “டாய் சாஜீ, நான் ராஜுடா... பாம்பனார் ராஜு…” என்றார். ஐயோ! இது நம்ம கல் ராஜு இல்லையா? ஊரில் உப்புமா இசைக் கச்சேரிகளைக் குத்தகைக்கு எடுத்து அவற்றில் என்னையும் பாடவைத்து ஊரான்களின் அடிகளை எனக்கும் வாங்கித் தந்தவன்!

கேரளத்தின் இடுக்கி பாம்பனார் தேயிலைத் தோட்டத்திலுள்ள வரிசை வீட்டிலிருந்து இவன் எப்படி இங்கே வந்தான்?

ஆரம்பத்தில் அபசுருதியில் மட்டுமே கிட்டார் வாசிப்பதால், கல் ராஜு என்று பெயர்பெற்ற அவன் இரவுபகலாகப் பாடுபட்டு கிட்டார் வாசிப்பை வசமாக்கினான். பின்னர் குமுளி கம்பம் வழியாகத் தமிழ்நாட்டில் இறங்கி, இங்குள்ள பெந்தகோஸ்தே பாட்டுக் குழுக்களில் வாத்தியக்காரனானான். அடுத்தபடியாக பெந்தகோஸ்தே சபையில் சேர்ந்து, கிறிஸ்தவப் பாடகரும் போதகருமான சீர்காழி இயேசுப் பிரகாசத்தின் தங்கையைத் திருமணம் செய்துகொண்டான். சென்னையில் குடியேறினான். கர்னாடக இசைப் பாணியிலான கிறிஸ்தவப் பாடல்களை அற்புதமாகப் பாடக்கூடிய பெயர்பெற்ற பாடகரின் மைத்துனரான ஸ்டீஃபன் ராஜ் எனும் ராஜு இப்போது ஒரு கிறிஸ்தவ இசையமைப்பாளர்!

ஸ்ரீவித்யாவைத் தொலைபேசியில் அழைத்தபோது, மறுமுனையில் “ஹலோ ஹூ ஈஸ் திஸ்?” என்று அவரது குரல் கேட்டதும் எனக்குப் பேச்சு திணறியது.

தனது இசையமைப்பில் தயாராகிவரும் தமிழ் கிறிஸ்தவப் பக்திப்பாடல் ஒலிநாடாவை வெளியிடுவதற்காக எங்கள் நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருக்கிறான். அதற்காக வந்தபோது தற்செயலாக என்னைப் பார்த்து அடையாளம் கண்டதுதான். இளையராஜாவின் சில பாடல்களுக்கே தான் கிட்டார் வாசித்திருப்பதாக ராஜு சொன்னான். “டேய்... நீ அவ்வளவு பெரிய கிட்டாரிஸ்ட் ஆயாச்சா?” என்று நான் கேட்க, “அதல்ல மச்சா... ராஜா சாரும் என்னப்போல ஒரு கிறிஸ்தவரா இருந்தவருதானே. டேனியல் ராசய்யான்னுதானே அவரோட பழைய பேரு. அந்தப் பாசத்துல கூப்பிட்டது தான்டா…” தொன்றுதொட்டே அல்லறை சில்லறைப் பொய் சொல்லத் தயங்காதவன் ராஜு. ஆனால், இப்போது வாழ்க்கையில் முன்னேறிவிட்டவன். அதனால், அவன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று குழம்பிப்போனேன்.

பாடியவர் ஸ்ரீவித்யா

சினிமாப் பிரபலங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வருவது அன்றாட நிகழ்வாக இருந்தது. ‘கேப்டன் பிரபாகரன்’, ‘செம்பருத்தி’ போன்ற பெருவெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான வில்லனாக நடித்துப் புகழுடனிருந்த மன்சூர் அலி கான், ஒருநாள் உதவியாளர் களுடன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார். அவர் நாயகனாக நடித்துப் பாடல்கள் எழுதி, இசையமைத்து, சில பாடல்களையும் பாடிய ‘ராஜாதி ராஜா ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ எனும் படத்தின் பாடல் ஒலிநாடாவை எங்களது நிறுவனம் வெளியிடவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. பணிவுடன் அவரை வரவேற்றாலும் படத்தின் மிகவும் நீண்ட விநோதமான பெயரையும் பாடல்களின் தரத்தையும் கருத்தில்கொண்டு அவ்வொலிநாடாவை வெளியிடமுடியாது என்று எங்கள் நிர்வாகம் மறுத்ததை மன்சூர் அலி கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடும் சினத்துடன் வெளியே போகும் வழியில், வாசல் கதவை அவர் வேகமாக ஓங்கி இழுத்து அடைத்ததில் அதன் தாழ்ப்பாளும் கொண்டியும் அலங்காரக் கண்ணாடியும் உடைந்து சிதிலமாகிக் கீழே விழுந்தன. அவரோ சென்றுவிட்டார். யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை. ‘என்போன்ற சினிமாப் பிரபலங்களைப் பகைத்தால் உங்கள் கதி இதுதான்டா’ என்று அவர் சொல்லாமல் சொன்னார் என்றே நினைத்தேன். ஆனால், அந்தச் சம்பவம் எனக்குள் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டியது. ஓரளவுக்குப் பாடும் திறமையிருக்கும் திரை நடிகர்களைப் பாடவைத்து அவற்றைத் தனியார் இசைத்தொகுப்புகளாக ஏன் வெளியிடக் கூடாது?

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

முதலில் என் நினைவுக்கு வந்தவர் ஸ்ரீவித்யா. ஏனெனில், எனது பயிற்சிக் காலத்தில் ஒருநாள் அவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதை மின்னிமாய்வதுபோல் ஒரு கணம் பார்த்திருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் மின்னும் தாரகையாகச் சோபித்த பேரழகியான திரைநடிகை மட்டுமல்ல ஸ்ரீவித்யா. பெயர்பெற்ற கர்னாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளான அவருக்குப் பாட்டிலும் பெரும் நாட்டமிருப்பது எனக்குத் தெரிந்த விஷயம். முன்பு ஓரிரு மலையாளத் திரைப்பாடல்கள் பாடியிருக்கும் அவர், ‘அமரன்’ எனும் தமிழ்ப் படத்தில் ‘ட்ரிங் ட்ரிங் ட்ரிங்’ என்று ஒரு டப்பாங்குத்து நடனப்பாடலை பாடிய காலமது. அனைத்துப் பாடல்களையும் அவரே பாடும் ஓர் ஒலிநாடாவைத் தமிழிலும் மலையாளத்திலும் கொண்டுவரத் திட்டமிட்டேன். இரண்டு மொழிகளிலும் பெரும்புகழ் பெற்ற ஒரு நடிகை பாடிய இசைத் தொகுப்பு வெளிவந்தால், அதற்கு நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று எண்ணினேன். அத்துடன் இளவயதில் நான் மனதார ஆராதித்த ஸ்ரீவித்யாவுடன் பணியாற்ற எனக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அது அமையும்.

பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி… புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி…” என்னையறியாமலே நான் முணுமுணுத்தேன். “யாருடா அவன்?” என்று கேட்டவாறு எம்.எஸ்.வி என் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

எஸ்.பி.வெங்கடேஷ் அப்போது மலையாளத்தில் முதல் இடத்திலிருந்த இசையமைப்பாளர். தமிழரான அவர், சங்கீதராஜன் எனும் பெயரில் ‘பூவுக்குள் பூகம்பம்’ போன்ற படங்கள் வழியாகத் தமிழிலும் ஓரளவுக்குப் புகழ்பெற்றிருந்தவர். தமிழில் புலமைப்பித்தனையும் மலையாளத்தில் புத்தஞ்சேரி கிரீஷையும் பாடல்கள் எழுதவைக்கலாம் என்று திட்டமிட்டேன். அத்தொகுப்பைப் பற்றிப் பேசும்பொருட்டு முதன்முதலில் ஸ்ரீவித்யாவைத் தொலைபேசியில் அழைத்தபோது, மறுமுனையில் “ஹலோ ஹூ ஈஸ் திஸ்?” என்று அவரது குரல் கேட்டதும் எனக்குப் பேச்சு திணறியது. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழப்பமாகவே சில நிமிடங்கள் கடந்தன. பின்னர் ஒருவழியாக விஷயத்தைச் சொன்னேன். ‘பண்ணலாமே’ என்றுதான் சொன்னார். ஆனால் ஊதியம், ஒலிப்பதிவுக்கான தேதி என எதையும் அவர் உறுதி செய்யவில்லை. சில நாள்களுக்குப் பிறகு, அனைத்தையும் நேரடியாகப் பேசி உறுதிசெய்வோம் என்று அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார்.

அபிராமபுரம் பகுதியிலுள்ள அவ்வீட்டின் ஒளிமங்கிய வரவேற்பறையில், இனம்புரியாத பதற்றத்துடன் அமர்ந்திருந்தேன். நான் நினைத்ததைவிடக் குறைவான உயரமும் சற்று அதிகமாகவே தடித்த உடலும்கொண்ட ஸ்ரீவித்யா எதிரே வந்து அமர்ந்தபோது ‘அப்பாடா... இந்த அம்மாவின் முகத்திற்கு இப்போதும் என்னவொரு அழகு!’ என்றுதான் உள்ளுக்குள் நினைத்தேன். “என்ன வச்சி இப்படி ஒரு ஆல்பம் பண்ணணும் அப்டீன்னு உங்களுக்கு என்ன ‘இவ்வ்வ்ளொ’ ஆர்வம்?” திடீரென்று நக்கலான தொனியில் ஸ்ரீவித்யா கேட்டார்! நான் சற்றுமே எதிர்பாராத கேள்வி. எனக்கு ஏதோ உள்நோக்கு இருக்கிறது என்றல்லவா இவர் சொல்கிறார்! இடிந்துபோனேன். மனம் சோர்வுற்றது. திரைநடிகர்களை வைத்து வெளியிடும் இசைத்தொகுப்பு எனும் திட்டத்தின்மேலேயே எனக்கு ஆர்வமிழந்தது. “இது என்னோட வேலை மேடம். ஒவ்வொரு மாதமும் அஞ்சு ஆல்பங்கள் நான் கொண்டுவந்தே ஆகணும். அதுல ஒண்ணுதான் இதுவுமே. உங்களுக்கு வேறெதாவது சந்தேகம் வந்திருந்தா என்ன மன்னிச்சிடுங்க. உங்கள சிரமப்பட வெச்சதுக்கு சாரி” என்று சொல்லி வேகமாக அங்கிருந்து கிளம்பினேன். ஸ்ரீவித்யா எனும் மகாநடிகையை முதலும் முடிவுமாக நான் நேரில் சந்தித்தது இப்படித்தான்.

‘ஏ… முத்துமுத்தா மொட்டுவிட்ட வாசமுல்லே…’ விளக்கமுடியாத ஏதேதோ உணர்வுகளுக்குள் என்னை ஆழ்த்திய அந்தக் கூம்புவடிவ ஒலிபெருக்கிப் பாடல், மீண்டும் காதுகளில் ஒலித்தது.

நடிகை நடிகர்களை வைத்தான இசைத்தொகுப்புத் திட்டம் கருக்கலைந்து போனாலும் அதன் இசையமைப்பாளராகத் தீர்மானித்திருந்த எஸ்.பி வெங்கடேஷுடனும் பாடலாசிரியர் கிரீஷ் புத்தஞ்சேரியுடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்பாக அது எனக்கு அமைந்தது. ஒருமுறை ஓர் ஐயப்ப பக்திப் பாடல் தொகுப்பின் ஒலிப்பதிவு வேலைகளுக்கு இடையே, மீன் உணவிற்கும் பதுங்கலாக நடத்தப்படும் மதுபானத்திற்கும் பெயர்பெற்ற ஓர் உணவகத்தின் குளிரூட்டப்பட்ட சிறு அறையில் அமர்ந்து, நாங்கள் மூவரும் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கொலைப்பசி. சுவையான உணவு. திடீரென்று அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டி, புகையும் தீப்பொறிகளும் பறக்க வெடித்தது.

எஸ்.பி.வெங்கடேஷ் பதறியெழுந்து எங்களையும் இழுத்துக்கொண்டு வெளியே இறங்கி ஓடினார். “ஏ.சி இல்லின்னா என்ன பிரச்சின அண்ணே? ஃபானிருக்கே. சாப்பிட்டு முடிச்சு கெளம்புவோமே” என்று நான் சொன்னேன். “இல்ல இல்ல… சாப்பிடக் கூடாது. பெரிய அபசகுனம் நடந்திருக்கு. இனிமே அந்தச் சாப்பாடு வெசம். தொடவே கூடாது...” என்று சொல்லி எங்களது உணவையும் அவர் முடக்கினார். எஸ்.பி.வெங்கடேஷின் இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசும்போது, சில நாள்களுக்கு முன்பு ஒரு சினிமா இயக்குநரின் அறையில் அவர் நிகழ்த்திய விசித்திரச் சம்பவத்தை கிரீஷ் எனக்குச் சொன்னார்.

ஒரு படத்திற்கான பாடல் மெட்டுகளை இயக்குநருக்குப் பாடிக்காட்டிக்கொண்டிருந்தார். அவற்றுக்கு இயக்குநரின் ஒப்புதல் கிடைத்தால்தான் படம் ஒப்பந்தமாகும். ஹார்மோனியம் வாசித்தவண்ணம் பல மெட்டுகளைப் பாடிக்காட்டினார். ஆனால், எல்லாவற்றையும் இயக்குநர் நிராகரிக்கிறார். இறுதியில் பொறுமையிழந்த வெங்கடேஷ், ஹார்மோனியத்துடன் எழுந்து அறையின் மூலைக்குச் சென்று வேறொரு திசையைநோக்கி அமர்ந்தார். “தப்பான இடத்துல ஒக்காந்திட்டி ருந்தேன். இப்பதான் வாஸ்து சரியாச்சு” என்று சொல்லிய வண்ணம் கண்களை மூடிக்கொண்டு ஒரு மெட்டை உருக்கமாகப் பாடினார். இயக்குநர் கருத்தைச் சொல்ல வாய் திறக்கும்முன்னே மேலே பார்த்து “முருகா... இவ்வளவு அருமையான ஒரு மெட்டை எனக்கு நீ அருள்புரிந்தாயே பெருமானே…” என்று உரக்க ஜபித்த வண்ணம் தரையில் விழுந்து கும்பிட்டார். அந்த மெட்டை ஏற்றுக்கொள்வதைத் தவிர இயக்குநருக்கு வேறென்ன வழி?

“அன்னிக்குத் தள்ளிப்போன ட்யூனையெல்லாம் ஒங்க ஐயப்பக் கேசட்டுல ஏத்திவிட்டிருக்காரு அண்ணாச்சி” கிரீஷ் உரக்கச் சிரித்த வண்ணம் சொன்னர். அந்த ஐயப்பப் பாடல்கள், பின்னர் தமிழிலும் கன்னடத்திலும் வெளிவந்து வெற்றிபெற்றன. கன்னட சினிமாவின் ஆகச் சிறந்த உச்ச நட்சத்திரமும் அசாத்தியப் பாடகருமாகயிருந்த ராஜ்குமார், அந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்து கன்னடத்தில் அவற்றைப் பாட ஒப்புக்கொண்டார். பெங்களூருவின் பிரபாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்த அதன் பதிவிற்கிடையே, அவரை நேரில் சந்தித்துப் பேசி அவருடன் சற்றுநேரம் செலவிடவும் என்னால் முடிந்தது. தமிழில் அழகாகப் பேசினார். எளிமையின், பணிவின் மனித உருவம் ராஜ்குமார். வாழ்க்கையில் துளியளவும் நடிப்பு கிடையாது.

மற்றொரு ஐயப்ப பக்திப்பாடல் ஒலிநாடாவின் வேலைகளுக்கு இடையே

தான் மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதனை முதன்முதலில் சந்தித்தேன். இளவயதி

லிருந்தே ஓர் இசைக்கடவுளாக நான் வணங்கிவந்த அவருக்கு முன்னால் சென்று நிற்கத் துணிவில்லாமல், ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அது மலையாளத்

தில் வரப்போகும் ஒலிநாடா. “பூ மரமில்லாத்த பூங்காவனம்…” ஹார்மோனியம் இசைத்துக்கொண்டு

எம்.எஸ்.வி பாடகனுக்குப் பாடிக் காட்டுகிறார். இந்தப் பாடலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேனே! அடுத்த கணமே அதன் அசல் பாடல் என் நினைவிற்கு வந்துவிட்டது. 1967-ல் வந்த ‘நெஞ்சிருக்கும் வரை’ தமிழ்ப் படத்தில்

டி.எம்.எஸ் பாடி சிவாஜி கணேசன் நடித்த பாடல்.

அண்ணன் தங்கை பாசத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்திய அப்பாடலை, 30 ஆண்டுகள் கழித்து ஓர் ஐயப்பப் பக்திப்பாடலாக மாற்றியமைத்து மலையாளத்திற்குக் கொண்டுவருகிறார், ஒருபோதும் காலாவதியாகாத இசைக்கோலங்களை உருவாக்கிய ஒப்பிலா இசைஞன். ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி… புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி…” என்னையறியாமலே நான் முணுமுணுத்தேன். “யாருடா அவன்?” என்று கேட்டவாறு

எம்.எஸ்.வி என் பக்கம் திரும்பிப் பார்த்தார். என்னைப் பக்கத்தில் அழைத்து “நீ பயங்கரமான ஆளுடா... அதே பாட்டுதான்டா… பூ முடிப்பாளேதான்…” என்று சொல்லிச் சிரித்தார். என்னுடன் பணியாற்றுகிறவர்கள் என்னை

எம்.எஸ்.வி-க்கு அறிமுகம் செய்தனர். “ஓ... மேக்னா கம்பெனியில புதுவரவா நீ..? நல்லது நல்லது...” என்று அவர் என் கையைக் குலுக்கினார். நிரம்பி வழியும் இதயத்துடன் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.வி-யைச் சந்திப்பதைப்போல் பாடகர்களில்

ஏ.எம்.ராஜாவை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. ஆனால், நான் சென்னைக்கு வருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கோரமான ஒரு ரயில் விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் அசாத்தியப் பாடகியுமாகயிருந்த ஜிக்கியைப் பலமுறை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். ஏ.எம்.ராஜாவின் இசை குறித்தும் வாழ்க்கை குறித்தும் ஜிக்கியம்மா விரிவாக என்னிடம் பேசியிருக்கிறார். ஜிக்கியம்மா மறையும் வரை அவ்வப்போது அவரைச் சந்தித்து பழைய இசைக்காலங்களில் அவருடன் நடந்துசென்றது ஒருபோதும் மறக்க முடியாத நினைவு.

ஏ.எம் ராஜாவின் மேல் எனக்கிருந்த தீவிர அபிமானத்தால், அவரது மகன் சந்திரசேகரை ராஜாவின் புகழ்பெற்ற சில தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்து ‘என்றும் புதிது’ எனும் தொகுப்பு வழியாக வெளியிட்டேன். ஏ.எம்.ராஜா என்பதுபோல் ஏ.எம்.சந்த்ரா என்று சந்திரசேகரின் பெயரை மாற்றினேன். அப்பாவின் குரல் அதேபோல் கிடைத்தும் ஒரு பாடகனாக சோபிக்க சந்திரசேகரால் முடியாமல்போனது.

‘என்றும் புதிது’ தொகுப்பின் ஒலிப்பதிவின்போதுதான் மலேசியா வாசுதேவனை முதன்முதலில் சந்தித்தேன். மிகவும் பிரபலமான சில பழைய தமிழ்த் திரைப்பாடல்களை நவீன இசை மற்றும் ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தில் மீண்டும் பதிவுசெய்தோம். டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களை மலேசியா வாசுதேவன்தான் பாடினார். ‘சுருதிலயா’ ஒலிப்பதிவுக் கூடத்தில் அனைவரும் அவருக்காகக் காத்துநின்றோம். வரும் வழியிலேயே எனது அபிமானப் பாடகரைச் சந்திக்க வேண்டுமென்று எல்லோருக்கும் முன்னால் சென்று நின்றேன். நான் தலைகுனிந்து வணங்கினாலும், அதைக் கவனிக்காமல் முன்னமே தனக்கு அறிமுகமுள்ளவர்களின் வணக்கங்களை ஏற்றுக்கொண்டு அவர் உள்ளே சென்றார்.

நேரம் கடந்து வந்தமையால், வந்தவுடன் பாட்டுச் சாவடிக்குள்ளே சென்று காதில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பாடத் தொடங்கினார். ‘நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…’ பால்யத்தின் மலைப்பகுதிகளில் எனது காதில் விழுந்த அதே கணீர்க்குரல்! ஒருகணம் நான் பழைய அந்தப் 16 வயதுப் பையனாக இரட்டையார் ‘பிந்து’ கொட்டகையின் முன்னால் சென்றேன். ‘ஏ… முத்துமுத்தா மொட்டுவிட்ட வாசமுல்லே…’ விளக்கமுடியாத ஏதேதோ உணர்வுகளுக்குள் என்னை ஆழ்த்திய அந்தக் கூம்புவடிவ ஒலிபெருக்கிப் பாடல், மீண்டும் காதுகளில் ஒலித்தது. அன்றைக்கு அந்த ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து அறிமுகமானதோடு ஆரம்பித்த வாசு அண்ணாவுக்கும் எனக்குமான உறவு,

66-வது வயதில் அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

மூன்றாயிரத்துக்கும் மேலான பாடல்களைப் பாடிய, எண்பதுக்கும் மேலான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வாசு அண்ணா, நான் இன்று வரைப் பார்த்தவர்களில் மிகவும் தூய்மையான ஒரு மனிதர். அதனால்தானே எண்ணற்ற கஷ்டங்களில் உழன்று அவர் இவ்வுலகை விட்டுச்செல்ல நேர்ந்தது. வாசு அண்ணாவின் இறுதி நாள்களில், அவருக்குச் சிறு ஆறுதலாக அவருடன் இருக்க முடிந்தது இவ்வாழ்வில் நான் பெற்ற பெரும் பாக்கியம். முதன்முதலில் வாசு அண்ணாவைச் சந்தித்த அதே காலத்தில்தான் இந்தியத் திரையிசையின் இணையற்ற இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனையும் சந்தித்தேன். அச்சந்திப்போ கண்ணீரில் நனைந்துபோன ஒரு நினைவு.

(தொடரும்…)