Published:Updated:

``எப்படிப் பார்க்கணும்னு நினைச்சாங்களோ, அப்படியே வந்தார் இந்த வி.ஐ.பி!'' - #5YearsOfVIP

வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி

படம் வெளியான நாளிலிருந்தே தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்தது. அந்தப் படத்தில் அப்படிக் கூட்டம் கூட என்னதான் இருந்தது?

சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் என்பது கலைஞர்களுக்கு சகஜம். தனுஷின் சினிமா கரியர் சறுக்கலைச் சந்திக்க ஆரம்பித்த சமயம் அது. 'தனுஷ் அவ்வளவுதான்' என்ற பேச்சுகள் வேறு கிளம்ப ஆரம்பித்தன. அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி மீண்டும் களத்துக்கு வந்தார். அந்த கம்பேக் படத்தின் பெயர், 'வேலையில்லா பட்டதாரி'. தனுஷுக்கு இது 25-வது படம். 'வேலையில்லா பட்டதாரி' ரிலீஸாகி, இன்றுடன் 5 வருடங்கள் ஆகின்றன.

வி.ஐ.பி
வி.ஐ.பி

படம் வெளியான நாளிலிருந்தே தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்தது. அந்தப் படத்தில் அப்படிக் கூட்டம் கூட என்னதான் இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்ததுதான் காரணம். நம்மில் ஒருவராக தனுஷ், சென்டிமென்ட் அம்மாவாக சரண்யா, கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி, அனிருத்தின் துள்ளல் இசை, பட்டதாரி இளைஞர்களின் நிலை, முதல் பாதி வரைக்கும் யதார்த்தமாக நகரும் கதைக்களம், இளைஞர்களைக் கவரும் வசனங்கள், தனுஷின் மாஸ் சீன்கள்... எனப் பல அம்சங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தன.

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், தனுஷ். அதேபோல முதன்முதலில் இயக்குநராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் வெற்றி பெறவேண்டும். இதற்காகப் பார்த்துப் பார்த்து கேரக்டர்களைத் தேர்வு செய்திருந்தார். '3' படத்தில் மாஸ் காட்டிய தனுஷ் - அனிருத் கூட்டணி 'நாங்க எதுக்கும் சலைத்தவங்க இல்லை' எனப் பக்கா மாஸ் காட்டியது. 'வாட் எ கருவாடு’, 'வேலையில்லா பட்டதாரி’ பீட்கள் தியேட்டரைத் தடதடக்க வைத்தன. இளமைத் துள்ளல் பாட்டு ஒரு பக்கம் என்றால், 'அம்மா அம்மா' பாடலின் தாக்கம் மறுபக்கம். நீண்ட நாள்களுக்குப் பிறகு எஸ்.ஜானகி பாடிய இந்தப் பாடலின் 'எங்கே போனாலும்... நானும் வருவேன்' வரிகள் அம்மா, மகன் பாசத்தின் உச்சத்தைக் காட்டியது. இப்படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் மிகப்பெரிய பலம் என்றால் அது மிகையல்ல.

தனுஷ்
தனுஷ்

ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்க, அவருடைய தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் தனுஷை அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்குக் குடிவரும் அமலா பாலுடன் பழகி, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். இந்த நேரத்தில் அம்மா சரண்யா திடீரென இறந்துவிடுகிறார். அதற்கு தனுஷும் காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின் இறந்துபோன சரண்யாவின் நுரையீரல் தானம் கொடுக்கப்படுகிறது. தானம் பெறும் பெண்ணின் அப்பா மூலமாக அவருடைய கம்பெனியிலேயே தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் கட்டும் அரசாங்கத் திட்டத்திற்கு டெண்டர் எடுத்து, தானே பொறுப்பேற்கிறார், தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் ஒன்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, தன் குடும்பத்தினரின் அன்பைச் சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ரசிகர்கள் தன்னை எப்படிப் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்தனரோ, அப்படியே வந்தார் தனுஷ். வேலை கிடைக்காத விரக்தி, காதல், அம்மாவின் மறைவு, வேலை கிடைத்த பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிப்பது... என ஒவ்வொரு கட்டத்திலும் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டிருப்பார், தனுஷ். 'தனுஷ் 25 சினிமா’ என்பதைவிட, இது முழுக்கவே தனுஷ் சினிமா!

தனுஷ்
தனுஷ்

'இன்டர்வியூல வந்து பாருங்க... நாலு வார்த்தை சேர்ந்தாப்ல இங்கிலீஷ் பேச எவ்ளோ கஷ்டப்படுறோம்னு’ என்று அப்பாவிடம் பொருமுவதும், 'என் தம்பிக்கு ஹீரோ பேரு... கார்த்திக். எனக்கு வில்லன் பேரு... ரகுவரன்’ என்று அங்கலாய்ப்பதும், ரவுடிகளிடம் அடி வாங்கிவிட்டு, 'ஏம்மா... அப்பா வீட்ல இல்லைனு முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே!’ என்று பொங்குவதும்... தனுஷ் பேக் டு தி ஃபார்ம் கொடுத்த படம் இது. ஒரு மொட்டை மாடி, ஒரு சின்ன மொபட், சின்சியர் தம்பி, பக்கத்து வீட்டு ஏஞ்சல்... என மிகச் சில மெட்டீரியல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆக்ஷன், ரியாக்ஷன் என்று அத்தனையிலும் அதகளப்படுத்தியிருந்தார்கள். அதிலும் ஒரே டேக்கில், இன்ஜினீயர் ஆவதற்கான நடை முறைகளை, வேதனையை மூச்சுமுட்டச் சொல்லும் இடம்... மாஸ். மொத்தத்தில் தன்னுடயை அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

'இவ்ளோ பெரிய கேரிபேக்லயா குடியிருக்கீங்க’, 'இது வண்டியா' என்று நக்கலும், 'இவனுங்களைப் பார்த்தா நல்லவனுங்க மாதிரி தெரியலையே’ என்று மைண்ட் வாய்ஸ் போங்குமாக விவேக்கிடம் இருந்து சைலன்ட் ஸ்மைலிஸ். அதேநேரத்தில் சீரியஸான பார்வையிலும் விவேக்கின் கண்கள் சீரியஸ்னெஸ் காட்டத் தவறவில்லை. 2014-ஆம் வருடம் எந்த ஒரு விழா நடந்தாலும், நிச்சயமாகக் குறைந்தது இரண்டு விருதுகளை இந்தப் படம் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

`அண்ணன் செல்வராகவனின் `என்.ஜி.கே' படம் பத்தி நேர்மையான ஒப்பீனியன் என்ன?'  தனுஷ் பதில்

பெரும்பாலும், உச்ச நடிகர்களின் லேண்ட்மார்க் (25, 50, 100-வது படங்கள்) படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றதில்லை. இந்த சென்டிமென்டை உடைத்த 'வேலையில்லா பட்டதாரி' படம் தனுஷுக்கு தனி முத்திரைதான்.

பின் செல்ல