என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் மேடை - அப்துல்கலாம்

விகடன் மேடை - அப்துல்கலாம்

##~##

''நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும். 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல்கலாம்

எஸ்.சங்கரன், காரைக்குடி.

''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த். அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

விகடன் மேடை - அப்துல்கலாம்

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும். முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார். அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''

விகடன் மேடை - அப்துல்கலாம்

ஆ.சங்கர், திருப்பூர்.

''உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

''விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''

விகடன் மேடை - அப்துல்கலாம்

எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

விகடன் மேடை - அப்துல்கலாம்

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!''  

-அடுத்த வாரம்....

 ''ஜனாதிபதி பதவிக் காலத்தில், தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொருபுறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

- கலாம் பதில்கள் தொடர்கின்றன...