விகடன் டீம்
ஜான் மாரிமுத்து!

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்ய, கடலூர் சிறையில் சரண் அடைந்திருக்கிறார் ஜான். 'ஆஸ்திரேலியாவில் பாதிரியாராக இருக்கிறார்... மலைக் கிராமம் ஒன்றில் பதுங்கி இருக்கிறார்’ என்று பரவிய வதந்திகளுக்கு மத்தியில், தலைநகர் சென்னையிலேயே 'ஜான் மாரிமுத்து’ என்ற பெயரில் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்துகொண்டு இருந்திருக்கிறார் ஜான் டேவிட்.
'முந்தியே அவனை விடுதலை செய்யாம இருந்திருந்தால், இந்நேரம் தண்டனைக் காலத்துல பெரும் பகுதி முடிஞ்சிருக்கும். இனி எப்போ வெளியே வருவானோ?’ என்று ஜானின் உறவினர் கள் ஒரு பக்கம் வருந்த, 'ஜெயில்லயாச்சும் உங்க மகன் பத்திரமா இருக்கானேன்னு நீங்க ஆறுதல் அடைஞ்சுக்கலாம். ஆனா, நாவரசுவைப் பெத்தவங்களுக்கு...’ என்று எதிர்த் தரப்பு எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன?
இனி என்ன ஆகும் கோபாலபுரம் இல்லம்?

'எனக்குப் பின்னால் இந்தக் கோபாலபுரம் வீடு ஏழை மக்களுக் கான மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இதற்கு அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகிய தன் மூன்று மகன்களின் ஒப்புதல் கையெழுத்துக்களையும்
பெற்றார். இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான வா.செ. குழந்தைசாமி, கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், 'உலகளவில் முக்கியமான தலைவர்கள் வாழ்ந்த வீடுகள் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு உள்ளன. கோபாலபுரம் வீடும் அவ்வாறு மாற்றப்பட வேண்டும்!’ என்று கோரி இருக்கிறார். அந்தக் கடிதத்தை முரசொலியில் வெளியிட்டுள்ள கருணாநிதி, 'என்ன செய்யலாம்’ என்ற தீவிர யோசனையில் உள்ளாராம்!
இப்போதே ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்ரீரங்கம்!

தேர்தலுக்கு முன்பு வரை சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருந்தது. தேர்தலுக்குப் பிறகு சென்னையிலும் தினம் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வந்து 'சமநிலை சமுதாயம்’ அமைக்கப்பட்டது. ஆனால், ஆச்சர்யமாக ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் மின்வெட்டே இல்லையாம். 'ஒருவேளை 'அம்மா’ முதல்வர் ஆயிட்டா, எதுக்கு வம்பு?’ என்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகச் செயல்படுகிறார்களாம் ஸ்ரீரங்கம் தொகுதி மின்சார பார்ட்டிகள்!
ராஜாஜி ஹாலில் 'முதல்வர்’ பதவியேற்பு?!

'நான் முதல்வரானால், புனித ஜார்ஜ் கோட்டையில்தான் பணிபுரிவேன். கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேன்’ என்று வீராவேசமாகப் பேசினார் ஜெயலலிதா. 'முன்னாள்’ சட்டமன்றமான புனித ஜார்ஜ் கோட்டை செம்மொழி நூலகமாக மாறிவிட்டதால், உடனடியாக அதனை சட்டமன்றமாகப் பயன்படுத்த முடியாது. அ.தி.மு.க வென்றால், ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவிஏற்றுக்கொண்ட பிறகு, ஒரு வார காலத்துக் குள் மேற்கொள்ளப்பட வேண்டிய எம்.எல்.ஏ -க்கள் பதவிப் பிரமாண நிகழ்வுக்கு, வாஸ்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, புதிய தலைமைச் செயலகம் அருகிலேயே உள்ள ராஜாஜி ஹாலைத் தற்காலிக சட்டமன்றமாக டிக் அடித்திருக்கிறார்களாம் ர...ரக்கள்!
கனிமொழி வைக்கும் வெடி!
ஸ்பெக்ட்ரம் கூடுதல் குற்றப்பத்திரிகையில் தனது பெயர் சேர்க்கப்பட்ட தகவல் தெரிந்த பிறகும் கனிமொழி முகத்தில் பதற்றம் இல்லை. 'இப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்!’ என கேஷ§வலாகச் சொன்னவர், கூடவே, 'ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நான் மனம் திறந்து பேச வேண்டியது நிறைய இருக்கு. சீக்கிரமே பேசுவேன்!’ என்று பொடி வைத்திருக்கிறார். எங்கெல்லாம் வெடி வெடிக்கப்போகிறதோ!
இதைப் படிக்காதீங்க!
• கொடுக்கல் வாங்கலில் சிக்கித் தவிக்கும் தடாலடி வாரிசு, 'மாண்புமிகு’க்களுக்கு போனைச் சுழற்றுகிறாராம். 'தேர்தல் முடிவுக்குள் திரட்டினால்தான் சரிப்படும்’ என்பது அவர் ஐடியா. ஆனால், அமைச்சர்கள் பலரும் 'இந்தா அந்தா’வென தாக்காட்டுகிறார்களாம்!
• 'காங்கிரஸைக் காட்டிலும் பா.ம.க அதிக தொகுதிகளை வெல்லும்!’ என தன்னைச் சந்தித்த மருத்துவரிடம் ஓப்பன் கமென்ட் அடித்திருக்கிறார் பெரியவர். இது தெரிந்ததும் காங்கிரஸ் தரப்பில் ஏக கர்புர். 'தோற்கடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி!’ என வழக்கம்போல் டெல்லி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டனர்!
• 'தேர்தல் முடிவு வரை பதவிக்கு நான் கியாரன்ட்டி. ஆனால், கட்சி 10 சீட்டுக்கும் குறைவாக வென்றால், தலைவர் பதவியில் நிச்சயம் மாற்றம் இருக்கும்!’ என சொல்லி இருக்கிறாராம் சலாம் குலாம் தலைவர். அதனால், உள்ளூர் எதிரிகளைச் சரிகட்டும் முயற்சியாக வாசனையானவருக்குத் தூது அனுப்பிக் காத்திருக்கிறார் பளபள தலைவர்!
• முடிவுகளில் இழுபறி வந்தால் 'இழு... பறி...’ திட்டத்தை அரங்கேற்ற ஆளும் கட்சி தயார். சினிமாக்காரர் கட்சியில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்குப் பெரிய தொகையை இப்போதே அச்சாரமாகப் பேசி இருக்கிறார்களாம். இடது சாரிகளும் இழுப்பு லிஸ்ட்டில் இருப்பது அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்!