தலைவர்களின் சம்மர் வெகேஷன்ப.திருமாவேலன், ஓவியங்கள் : ஹரன்
##~## |
தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் தலைவர்களின் முகங்கள் எப்படி இருக்கும்?
'பொது வாழ்க்கைக்கு வந்தவனுக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான்!’ என்று சொல்லும் கருணாநிதியாக இருந்தாலும், 'ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி’ என்று சொல்லிக்கொள்ளும் வடிவேலுவாக இருந்தாலும், முகம் இருண்டுதான் போயிருக்கும்.
மனமாற்றம் வேண்டி, கொடநாடு மலைக்கு ஜெயலலிதாவே ஓடிப் போயிருக்கிறார். மே 13-ம் தேதி காலை 9.10-க்கு டி.வி-யில் முன்னிலை நிலவரம் ஓடும் வரை, இவர்கள் விழி பிதுங்கியே இருப்பார்கள். இந்தக் காத்திருப்பு கால நிலவரம் பார்ப்போமா?
மு.க. முன்னால் 'முன்னாள்’கள்!

சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்யும் காலத்தைக் கடந்துவிட்டார் கருணாநிதி. ஒரு சில கூட்டங்களில் சுருக்கமாகப் பேசி முடித்துக்கொண்டார். தனக்காக திருவாரூரிலும், மகனுக்காக கொளத்தூரிலும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் சுழன்றதுதான் அவரின் அதிகப்படியான அலைச்சல். நல்லவேளை, அவரைத் தொகுதி தொகுதியாக அழைத்துத் தொந்தரவு செய்யாமல்விட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்!
பிரசாரம் முடித்து வந்ததும், 'பொன்னர் சங்கர்’ ப்ரிவியூ போட்டுக் காட்டுவதில் பிஸி ஆனார் கருணாநிதி. படம் பார்த்தவர்களின் பாராட்டுக்களைக் கேட்டுப் பெறுவதைச் சுகமான பொழுதுபோக்காகக்கொண்டார். எப்போதுமே கூட்டத்தோடு இருப்பதையே கருணாநிதி விரும்புவார். முதல் இரண்டு நாட்கள் தனிமை அவரை வேதனைப்படுத்தியதால், 'வேட்பாளர்களை எல்லாம் வரச் சொல்’ என்றார். வெற்றி நிலவரம் அறிவதற்கான சந்திப்பாக அதை மாற்றிக் கொண்டார். நெல்லையில் இருந்து ஆவுடையப்பன் முதல்... சேலத்தில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் வரை வரிசையாக வந்து குவிந்தார்கள். அவர்களும் வரும்போது பத்துப் பன்னிரண்டு பேரை அழைத்து வர... அவர்களின் முகங்கள் பார்த்து மகிழ்ந்தார். இவர்களும் தங்கள் படம் 'முரசொலி’யில் வருவதால் குளிர்ந்துபோனார்கள். வேட்பாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு, முன்னாள் துணை வேந்தர் குழந்தைச்சாமி முதல் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் வரை 'முன்னாள்’களுக்கு நேரம் ஒதுக்கி அரட்டை தொடங்கினார். கருணாநிதியைச் சந்திக்கக் காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் தொகை இன்னும் ஏகம். வெற்றிக்கு முந்தியே வாழ்த்துக்கள் வாங்குகிறாரா?
கொடநாடு போனது ஏன்?

என்னதான் தேரில் உட்கார்ந்து வந்தாலும் உடல் வலி இருக்கத்தானே செய்யும். ஜெயலலிதா நிலைமை இதுதான். சுவிட்ச் போட்டதும் சீட் மேலே உயர்ந்து... காத்துக் கருப்பு அண்டாமல்... ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து பேசினாலும் ஜெ. உடலில் சுணக்கம் ஏற்பட்டது. எடை அதிகமானதுகூட ஒரு காரணம். கொடநாடு எஸ்டேட்டில் வாக்கிங் போக வசதிகள் அதிகம். ஓர் ஆண்டுக்கு முன்பு அங்கே தங்கி சுமார் 7 கிலோ வரைக்கும் எடை குறைத்தார் ஜெயலலிதா.
இரண்டொரு யாகங்கள் இப்போது நடக்க இருப்பதாகவும் சொல் கிறார்கள். 'ஜெயலலிதாதான் ஆட்சிக்கு வரப்போகிறார்’ என்று நினைக்கும் அதிகாரிகள் வரிசை கட்டி போயஸ் கார்டனுக்குத் தூது அனுப்புவதும்... நேரில் சந்திக்க முயற்சிப்பதும் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவைதான். ஆனால், இவருக்கு அது விருப்பம் இல்லாதது மாதிரி 'பிகு’ பண்ணவும் போயஸ் கார்டனை விட்டுப் புறப்பட்டுப் போய் இருக்கிறார். மந்திரிகள் எவர், அதிகாரி களாக யார் யாரைப் போடலாம் என்று பட்டியல் தயாரிப்பும் நடக்கிறதாம். ஆசைக்குத் தடை போட நாம் யார்?
கேப்டன் டிரெஸ்!

சாதாரண டி-ஷர்ட், கட்டம் போட்ட லுங்கியில்தான் வீட்டில் எப்போதும் இருப்பார் விஜயகாந்த். பூப்பந்து துண்டு ஒன்றை நன்றாக முறுக்கிக் கையில் வைத்திருப்பார். வெளியில் எங்கும் போகவில்லை. வீட்டுக்குள்ளேயே முழு ரெஸ்ட் கேப்டனுக்கு!
தேர்தல் பிரசாரம் கிளம்பிய இரண்டாவது நாளே தொண்டை கட்டிப் புண் ஆகிவிட்டது. வெந்நீரில் உப்புப் போட்டுக் கொப்பளித்தபடியே, கருணாநிதியைக் கொந்தளிக்கவைத்தார். இந்தத் தேர்தலில் அதிகப்படியான கூட்டங்கள் பேசியதும்... கூடுதலான மனிதர்களைச் சந்தித்ததும் இவராகத்தான் இருக்க முடியும். கறுப்பு உடலை வெயில் இன்னும் கறுப்பாக்க... அலைச்சலும் தூக்கம் இன்மையும் சேர்ந்தது. பழைய படங்களுக்கு மனதைப் பறி கொடுத்தும்,கேப்டன் டி.வி-க்கு ஆலோசனைகளை எடுத்துவிட்டும் விஜயகாந்த்துக்கு நேரம் நகர்ந்துகொண்டு இருக்கிறது!
மூன்று முத்துக்கள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, மு.க.ஸ்டாலின் இம்முறை பாதி அளவுதான் அலைந்தார். நாள் இல்லாதது முதல் காரணம் என்றால், கொளத்தூர் பயமுறுத்தியது இரண்டாவது காரணம். இவருக்குப் பயணமும் பிரசாரமும் புதிது அல்ல. அதனால், எந்த உடல் உபாதை பாதிப்புகளும் இல்லை. மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது, ஸ்டாலின் எடையையே இரண்டு கிலோ கூட்டியது. இப்போது உதயநிதி - கிருத்திகா மூலம் இன்னொரு வாரிசு. இந்த மூன்று முத்துக்களுடன் மாமல்லபுரம் கடற்கரை ஓரம் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் இருந்து தன்னுடைய களைப்பைக் கழித்தார் ஸ்டாலின். 7,000 கி.மீ, 600 கூட்டங்கள் அலைந்த களைப்பு, தி.மு.க. வெற்றிச் செய்தி வந்தால்தான் நீங்கும்!
கலக்கத்தில் கைப்புள்ள!

கன்னியாகுமரியில் முதல் கூட்டம் பார்த்ததுமே, 'தலைவர்கிட்ட கேட்டு நம்ம ஆட்களை 25 இடத்துல நிறுத்தியிருக்கலாமோ!’ என்று நினைக்க ஆரம்பித்தார் வடிவேலு. 'தி.மு.க. லீடர்’ என்.வடிவேலு என்று தேர்தல் கமிஷன் பாஸ் கொடுத்து, இரண்டு பி.எஸ்.ஓ-க்கள், ஒரு எஸ்கார்ட் போலீஸ் பாதுகாப்பு அளித்தது. ஆனாலும் கமுதியில் செருப்பு, விராலி மலையில் தக்காளி, திருக்கோவிலூரில் கல்... என்று வீசியதில் மிரண்டு போனார். தேர்தல் முடிந்த மறுநாளே, எஸ்கார்டை வாபஸ் வாங்கிவிட்டார்கள். சென்னையில் இருந்து மதுரைக்கு ஓய்வுக்குக் கிளம்பியவர், பாதுகாப்புக்கு போலீஸ் வராததால், பதறிப்போனார். எவ்வளவோ முயற்சித்தும் லீடருக்கு போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கவில்லை.
'இனிமே ஷூட்டிங்குக்கு வெளியூருக்குப் போகணும்னாலும் திக்குதிக்குனு இருக்கேப்பா!’ என்று கலங்க ஆரம்பித்துள்ளார் கைப்புள்ள!
குஷ்பு குபீர் டூர்!

மதுரையில் தொடங்கி புதுச்சேரியில் முடித்தார் குஷ்பு. 19 நாட்கள், 80 தொகுதிகள் வலம் வந்தது அவரது வாழ்க்கையில் புதுசு. இரண்டாவது நாளே குரல் இழுக்க ஆரம்பித்தது. தொண்டை வறண்டது. குரலை அதிகப்படுத்தாமல் மெதுவாகப் பேசி சமாளித்துக்கொண்டார். இடையில் ஒரே ஒருநாள் சென்னை வந்து பிள்ளைகள் இருவரையும் பார்த்துவிட்டுப் போனார். 'அம்மா பேசுறதைப் பார்க்கணும்’ என்று அவர்கள் சொல்ல... புதுச்சேரிக்கு அழைத்துப்போனார். வாக்களித்த மறுநாளே துபாய்... பாங்காக் போய்விட்டுத் திரும்பியவர், மே 15-ம் தேதிக்குப் பிறகு, மூன்று வாரங்கள் சென்னையில் இல்லை. மகள்களுடன் வெளிநாடு பயணம். தேதியைக் கவனியுங்கள்... மே 15. ஜெயித்தாலும் தோற்றாலும் சிக்கல் இல்லாத தேதி. உஷார் குஷ்பு!
காங்கிரஸ் வாசனை!

கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதிக்குள்ளேயே சுருண்டு போனதால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் போய் காங்கிரஸ் வாசனையைப் பரப்பியவர் ஜி.கே.வாசன் மட்டும்தான்! 13 நாட்களில் 5,900 கி.மீ. தூரம் அவரது டாடா சியாரா ஓடி இருக்கிறது. மத்திய மந்திரிகளுக்குத் தேர்தல் கமிஷன் நெருக்கடி கள் எதுவும் இல்லாததால், டெல்லி வேலைகள் அழைத்தன. ஃபைல்களோடு அல்லாடினார். கடந்த ஞாயிறு அன்று மொரீஷியஸ் சென்ற ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் செல்லும் குழுவில் இவர் பெயரும் இடம் பெற, ஒரு வார சுற்றுப் பயணம் மொரீஷிய ஸில் தொடர்கிறது. அங்கே ஒழுங்கான சாப்பாடு உண்டு. மைக்கில் கத்திப் பேச வேண்டியது இல்லை. மிக முக்கியமாக, தங்கபாலு தொந்தரவும் இல்லை!
வயலும் வயல் சார்ந்தும்...

டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் அதிகாலை எழுவார். தோட்டத்துச் செடி கொடிகளோடு பேசுவார். தண்ணீர் பாய்ச்சுவார். இயற்கை உணவையே காலையில் எடுப்பார். சிறிது நேரம் பொதுமக்கள், தொண்டர்களைச் சந்திப்பார். மதிய உணவு, சிறிது தூக்கம். மாலையில் சந்திப்பு, இரவு உணவு எனத் தடங்கல் இல்லாமல் எல்லாம் நடக்கும். பிரசாரம் முடிந்து மீண்டும் அதே தைலாபுர வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார் ராமதாஸ்.
தினமும் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுக்குத் தொலைபேசியில் வெற்றி தோல்வி நிலவரங்கள் கேட்டு வரும் ராமதாஸ், உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தையும் தொடந்து நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் இடம் இல்லாமல் போன நிலையில், சட்டமன்ற பலத்தை வைத்தே பா.ம.க. எழுந்து வர வேண்டிய பதற்றம் டாக்டரிடம்!
சிகிச்சையில் சிறுத்தை!

அதிகப்படியான அலைச்சல்கொண்டவர் என்பதால், தொல்.திருமாவளவனுக்குக் கூடுதலான உடல் உபாதைகளும் உண்டு. மூச்சுத் தொந்தரவு, சளிக்காகச் சில சிகிச்சைகள் செய்து வந்தார். கூடுதல் கார் பயணங்கள் முதுகு மற்றும் தோள்பட்டை வலியையும் கொடுத்தன. ராமச்சந்திரா மருத்துவமனையில் பிசியோதெரபி எடுத்து வந்தார். இந்தத் தேர்தல் சுற்றுப் பயணத்துக்குப் பிறகு டெல்லிக்குச் சென்று, அங்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறார். சென்னையில் இருந்தால் தம்பிகள் தொந்தரவைத் தவிர்க்க முடியாது என்பதால்தான் டெல்லி வாசம்.
டெல்லியில், அவருக்குத் தரப்பட்டுள்ள பழைய வீட்டில் இருந்து புது வீட்டுக்கு மாறுகிறார். அந்த முன்னேற்பாடு வேலைகளுக்காகவும் டெல்லியில் தங்கி இருக்கிறார் திருமா!
ஓய்வுக்கும் புறக்கணிப்பு!

தேர்தலைப் புறக்கணித்தாலும் அலைச்சலைப் புறக்கணிக்க முடியவில்லை வைகோவால்! ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மீனவர் உடல் பார்த்துக் கதறினார். விளாத்திக்குளத்தில் தீக்குளித்த கிருஷ்ணமூர்த்தியின் உடல் பார்த்துச் சீறினார். நிர்வாகிகள் மத்தியில் கலந்துரையாடல் செய்ய ஈரோடு வாருங்கள் என்று கணேசமூர்த்தி அழைத்தார்... என்று வைகோவின் கார் ஓடிக்கொண்டே இருந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தைப் பார்வையிட மத்திய ஆய்வாளர்கள் வந்தபோது, ஏழு நாட்களும் அவர்களோடு வலம் வந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்தாறு கிலோ மீட்டர் தூரம் ஸ்டெர்லைட் டுக்குள் முகமூடி அணிந்து வலம் வந்தார். ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் கொடுத்த கூல்டிரிங்ஸைக் குடிக்க இவர் மறுக்க, மத்திய ஆய்வாளர்களும் மறுத்தார்கள். 'உங்கள் கருத்தை எங்களுக்குச் சொல்லுங்கள்!’ என்று அவர்கள் கேட்க, 'உங்களிடம் பேச நான் தயார் இல்லை!’ என்று இவர் மறுத்திருக்கிறார். தூத்துக்குடியில் ஒரு தேர்தல் நடந்த மாதிரிதான் இருந்திருக்கிறது!