என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

##~##

இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது

ஒன்பது மாடி கோபுரம்
சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது

எனவே பெரிய விஷயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை

அதனால்தான் பெரிய விஷயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

- சீன ஞானி லாவோ ட்சு எழுதிய வரிகள் இவை. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் அவருடைய 'தாவே தே ஜிங்’. 2,500 ஆண்டுகளைக் கடந்து இன்றும் முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படும் 'தாவே தே ஜிங்’ சொல்லும் முக்கியமான செய்தி: சின்னதில் இருந்து தொடங்குங்கள்!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

உலகில் பலருடைய வாழ்வில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய புத்தகம் 'ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’. பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநரான ஷூமேக்கர் எழுதியது. வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சூழலியல் நலன் சார்ந்த பின்னணியில் அலசி எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சொல்லும் ஒரே செய்தி... சின்னதே அழகு!

நம் தேசப் பிதா காந்தியும் இதைத்தான் சொன்னார்: ''இந்தியாவுக்குத் தேவை பெரிய அளவிலான உற்பத்தி அல்ல. அதிக மக்கள் பங்கேற்கும் உற்பத்தியே நம்முடைய தேவை!''

இன்றைய உலகை ஆளும் உலகமயமாக்கல் கொள்கையின் அடிநாதமான 'பிரமாண்ட உற்பத்தி, பிரமாண்ட விற்பனை, பிரமாண்ட வாழ்க்கை’ தத்துவத்துக்கு நேர் எதிரான தத்துவம் இது!

இது என்ன விளைவை ஏற்படுத்தும்?

சுருக்கமான பதில்: உலகமயமாக்கல் என்ன விளைவுகளை எல்லாம் உருவாக்கி இருக்கிறதோ, அவற்றுக்கு நேர் எதிரான விளைவுகளை உருவாக்கும்!

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், ராலேகான் சித்தி. அண்ணா ஹஜாரேவிடம் இன்றைய இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விஷயம், எதையும் சின்னதில் இருந்து தொடங்கும் அவருடைய எளிமை யான பாங்கு!

ராணுவத்தில் இருந்து ஹஜாரே விருப்ப ஓய்வு பெற்றுத் திரும்புவதற்கு முன்பே, சமூக நலன் சார்ந்த பணிகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்வது என்கிற முடிவை எடுத்துவிட்டார். என்ன பணியில் ஈடுபடுவது என்கிற கேள்வி எழுந்தபோது, ஏராளமான வாய்ப்புகள் அவருக்கு இருந்தன. ராணுவத்தில் இருந்து அளிக்கப்பட்ட கணிசமான தொகையும் அவர் வசம் இருந்தது. அந்த நாட்களில் அவருடைய நண்பர்கள் பலர் பம்பாயில் இருந்தார்கள். அவர்கள் அவருக்குச் சொன்ன யோசனை, எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் பம்பாயில் இருந்து தொடங்கலாம் என்பதுதான். அப்போதுதான் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்றார்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என்றுகூட அழைத்தவர் கள் உண்டு. ஆனால், ஹஜாரேவுக்கோ 'பெரிய’ என்கிற வார்த்தையில் எப்போதுமே நம்பிக்கை இருந்தது இல்லை. யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய சின்ன கிராமத்தில் இருந்தே தன்னுடைய பணிகளைத் தொடங்கினார்.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குறைந்த செலவில் அதிக பலன் தரக் கூடிய ஒரு திட்டம் என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அதற்கு ஷூமேக்கர் முன்வைத்த திட்டம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஆளுக்கு ஐந்து மரக்கன்றுகள் வைத்து ஐந்து ஆண்டுகள் வளர்ப்பது. ''இந்த ஐந்து ஆண்டுத் திட்டம் உங்களுடைய எந்த ஐந்து ஆண்டுத் திட்டத்தைவிடவும் செலவு குறைந்தது. மிக அதிகப் பலன் தரக் கூடியது!'' என்றார் ஷூமேக்கர்.

அண்ணா ஹஜாரே 'ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’ புத்தகத்தைப் படித்தவரோ, ஷூமேக்கரைப் பற்றி அறிந்தவரோ அல்ல. ஆனால், ராலேகான் சித்தியின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவர் செயல்படுத்திய முதல் திட்டம் அதுதான்!

அன்று தொடங்கி இன்று வரை அண்ணா ஹஜாரேவின் எல்லாப் பணிகளிலுமே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் இதுதான். எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய, எல்லோராலும் பங்களிக்கக் கூடிய சின்ன அளவிலான திட்டங்கள் அவருடையவை. ராலேகான் சித்தியில் ஹஜாரே உருவாக்கி இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், பாசனக் குளங்கள், வாய்க்கால்கள், சிறு அணைகளில் தொடங்கி, அவருடைய போராட்டங்கள் வரை அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தச் சின்ன - எளிய தத்துவத்தைப் பார்க்க முடியும். அதேபோல, பெரிய அளவிலான திட்டங்களை எப்போதுமே எதிர்த்து இருக்கிறார் ஹஜாரே!

சரி, இப்படிச் சின்னதாகச் சிந்திப்பதில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

இயற்கை வேளாண்மை மீது உலகின் பார்வையை மீண்டும் திருப்பிய மசானபு ஃபுகோகோ சொல்கிறார்: ''நீடித்து நிலைக்கும் மகத்தான மாற்றங்களுக்கு, எளிமையான சின்னத் திட்டமிடல்களே அடிப்படை!''  

இந்தியாவை இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்க காந்தி திட்டமிட்டார். ஆனால், இந்தியாவோ அதற்கு நேர் எதிராகவே உருவானது!

- தொடர்வோம்...

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா