இர.ப்ரீத்தி
##~## |
''ஹாய்... ஸாரி... இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா... சின்சியரா பிராக்டீஸ்ல இறங்கி இருக்கேன். ஸாரி... ரொம்ப மூச்சு வாங்குது''- ஏராளப் பெருமூச்சுகளுக்கு இடையே அலைபேசியில் ஒலிக்கிறது சாய்னா நெஹ்வாலின் குரல்! அவரிடம் அலைபேசி, மெயில், எஸ்.எம்.எஸ் எனத் துரத்தித் துரத்தி எடுத்த பேட்டியில் இருந்து...
''உங்களைப் போட்டிகளில் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சே?''
''கணுக்கால் வலி. கொஞ்ச நாள் நடக்கக்கூட முடியலை. அதான் பிராக்டீஸ்கூடப் பண்ணலை. இப்போ டெல்லி ஓப்பன்ல கலந்துக்கணும்னு முடிவு பண்ணி, ட்ரீட்ªமன்ட் எடுத்துக்கிட்டே பயிற்சியும் ஆரம்பிச்சுட்டேன். என் கோச் ஒவ்வொரு நாளும் திட்டம் போட்டு என்னை தயார் பன்ணிட்டே இருக்கார். கண்டிப்பா அதன் பலன் டெல்லி போட்டியில் தெரியும்!''

''அர்ப்பணிப்போடு விளையாடுறீங்க... கடுமையா பயிற்சி எடுக்குறீங்க... போட்டிகளைத் தவிர, வேற எதிலும் கவனம் சிதறவிடுறது இல்லை. ஆனாலும், உங்களால் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு வர முடியலையே... ஏன்?''
''ரொம்பக் கடினமா பயிற்சி எடுத்ததாலதான் கணுக்கால் காயமே வந்தது. அதனாலதான் சூப்பர் சீரிஸ், மலேசியன் சூப்பர் சீரிஸ், ஹைதராபாத் போட்டின்னு எதிலும் கலந்துக்க முடியலை. அந்தப் போட்டிகளில் விளையாடி இருந்தா, கண்டிப்பா முதல் ரேங்க் தொட்டிருப்பேன். ஆனா, இனிமே அதைப்பத்திக் கவலைப்படுறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை. சீக்கிரமே நல்லது நடக்கும்!''
''இனிமேல் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிந்துதான் பேட்மிட்டன் விளையாடணும்னு உலக பேட்மிட்டன் சம்மேளனம் அறிக்கை விட்டிருக்கே... இதுல உங்க ஸ்டாண்ட் என்ன?''
''நான் ஷார்ட்ஸ் அணிந்துதான் பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் பழக்கத்திலேயே போட்டிகளிலும் ஷார்ட்ஸ் போட ஆரம்பிச்சிட்டேன். அந்த அறிவிப்புக்குப் பிறகு, மினி ஸ்கர்ட் அணிந்து பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். சீக்கிரமே போட்டிகளிலும் என்னை ஸ்கர்ட்டில் பார்க்கலாம். ஒவ்வொரு பிளேயருக்கும் எந்த ஆடை வசதியோ அதை அணிய அனுமதிக்கலாம். மத்தபடி இதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ எதுவும் இல்லை!''
''ஏகப்பட்ட விளம்பரங்களில் நடிக்கிறீங்க. ஆனால், அதிலும் பேட்மிட்டன் பிளேயராவே வர்றீங்களே? உங்களுக்கு அதுதான் பிடிச்சிருக்கா?''
''அச்சோ... எனக்கு ஒரு மாடல் மாதிரி ஃப்ரீ ஹேர், லிப்ஸ்டிக், மாடர்ன் டிரெஸ்லாம் போட்டுட்டு விளம்பரத்தில் நடிக்கணும்னுதான் ஆசை. ஆனா, என்னை விளம்பரங்களில் கமிட் பண்றவங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. ரசிகர்கள் என்னை ஒரு நடிகை வடிவில் பார்க்காமல், புரொஃபஷனல் பிளேயராகப் பார்க்க மட்டுமே விரும்புறாங்கன்னு சொன்னாங்க. பெருமையான விஷயம்தான். ஐ லவ் இட்!''

''உங்க கேரியர் கிராஃப் கிட்டத்தட்ட உச்சத்தில் இருக்கு. பெர்சனல் லைஃப் பத்திலாம் எதுவும் பிளான் இருக்கா?''
''ஹா...ஹா... காதல் பத்திதானே கேட்குறீங்க. எனக்கு அரேஞ்சுடு மேரேஜைவிட, லவ் மேரேஜ்தான் பெஸ்ட்னு தோணுது. போட்டி, பயிற்சின்னு ஓடிட்டே இருக்குறதால யாரையும் காதலிக்க நேரம் இல்லை. அதுக்கான நேரம் வர்றப்போ கண்டிப்பா நான் காதலிப்பேன். அப்போ நிச்சயம் உங்களுக்கே முதல் தகவல் சொல்றேன். ஓ.கே-வா?'' ஸ்மைலி சிரிப்புகளோடு முடிந்திருக்கிறது மெயிலில் வந்த அந்த ரிப்ளை!