என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

கவின் மலர்படங்கள் : என்.விவேக்

##~##

புனித பாண்டியன் - மாற்றுச் சிந்தனையாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்குமான இதழாகவும், புதிய வாசகர்களுக்கான ஒரு விழிப்பு உணர்வு இதழாகவும் விளங்கி வரும் 'தலித் முரசு’ இதழின் ஆசிரியர். 15 ஆண்டுகளாகக் கடும் போராட்டங்களுக்கு இடையில், அந்த இதழை நடத்தி வருபவருடன் தமிழகத்தில் தலித்துகளின் வாழ்வியல் சூழல் குறித்து உரையாடியதில் இருந்து...

 ''குழந்தைப் பருவம் ஒரு தலித்துக்கும் மற்ற சாதியினருக்கும் ஒன்றாக அமைவது இல்லை.  உங்கள் குழந்தைப் பருவம் எப்படிப்பட்டதாக  இருந்தது?''

''நான் பிறந்து வளர்ந்தது ஆம்பூரின் கஸ்பாவில். எல்லா ஊர்களுமே ஊரும் சேரியுமாக இரண்டாகப் பிரிந்துதானே இருக்கின்றன. எங்கள் ஊரும் அப்படித்தான். என் சேரிக்குப் பெயர் கஸ்பா-ஙி. கஸ்பா என்பது அரபு வார்த்தை. மலம் அள்ளும் தொழிலாளிகள் மலத்தைக் கொட்டிவைக்கும் ஊரின் எல்லை அது. இதனாலேயே எங்கள் ஊரின் பெயரை 'ஙி-கஸ்பா’ என்பதற்குப் பதிலாக 'பீ கஸ்பா’ என்று கிண்டல் செய்வார்கள். பள்ளிக்கு வருவதற்கு எங்கள் சேரி வழியாக வந்தால், மிகவும் சுலபமாக வந்துவிடலாம். ஆனால், சில கி.மீ சுற்றிக் கொண்டுதான் வருவார்கள். இதற்கெல்லாம் மலக் கிடங்கு எங்கள் ஊரில் இருப்பதுதான் காரணம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இதற்கு சாதிய ஏற்றத்தாழ்வுதான் காரணம் என்று பத்தாம் வகுப்பு வந்த பின் தான் எனக்கு விளங்கியது. இன்னமும் அந்த நிலைமை எங்கள் குழந்தைகளிடம் இருந்து விலகாமல் இருக்கிறது!''

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

''எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் தங்கள் விடுதிக்காக நடத்திய போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. தொடர்ந்து இவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?''

''காலங்காலமாக சேரியைச் சேர்ந்த மனிதனுக்கு ஊருக்குள் என்ன மதிப்பு வழங் கப்படுகிறதோ, அதுவே தலித் மாணவர்களுக்கான அரசு விடுதிகளிலும் பிரதிபலிக்கிறது. ஒரு சிறைக் கைதிக்கு அன்றாடம்

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

60, காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு அன்றாடம்

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

60 எனச் சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்குகிறது அரசு.ஆனால், ஒரு தலித் மாணவருக்கு

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

20. எங்கே இருந்து வருகிறது இந்த பாரபட்சம்? உத்தபுரத்தில் சுவரை இடித்தால், இன்னோர் இடத்தில் தீண்டாமைச் சுவர் முளைக்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் எல்லாம் பிரிந்துபோவதற்கான போராட்டங்கள் மட்டும்தான் நடக்கும். இந்தியாவில் மட்டும்தான் இத்தனை வன்கொடுமைகளை அனுபவித்த பின்னரும் ஆதிக்கம் செய்பவரைத் திருத்தி, சமூக மாற்றத்துக்கு வித்திட்டு, ஒரு புதிய உலகை உருவாக்குவதற்காக 'நாங்கள் உங்களோடு சேர்ந்து வாழ விரும்புகிறோம்!’ என்று சேர்ந்து வாழ்வதற்கான போராட்டத்தை தலித்துகள் நடத்தும் நிலை இருக்கிறது. எல்லா விதமான சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சாதியே காரணமாக இருக்கையில், சமூக அமைப்பை மாற்றாமல் ஒவ்வொரு விஷயத்துக்காகவும் போராடினால், தற்காலிகமாக மட்டுமே தீர்வு கிடைக்கும். நிரந்தரமானதொரு தீர்வுக்கு சமூக மாற்றம் அவசியமாகிறது.

சுதந்திரப் போராட்டத்தின்போது அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள், 'அதிகாரம் மட்டும் மாறப்போகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அப்படியே தொடரும்!’ என்று அன்றே சொன்னார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது நிலைமை!''

'' 'அம்பேத்கர் உட்பட பல வட இந்தியத் தலைவர்களின் பெயரை வைப்பவர்கள் தமிழர்களாக இருக்கின்றனர். ஆனால், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களின் பெயர்களை வட இந்தியாவில் யாரும் வைப்பது இல்லை!’ என்று சீமான் பேசியிருக்கிறாரே?''

''மொழியால் சமூகம் பிரிந்து இருப்பதாக சீமான் போன்றவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, அம்பேத்கர் தமிழர் இல்லை என்ற கோணத்தில் இப்படி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களும் சாதியால்தான் ஊராகவும் சேரியாகவும் பிரிந்திருக்கின்றன. ஒரு நாளில் மட்டும் சராசரியாக 27 வன்கொடுமைகள் சாதியின் பெயரால் நடப்பதாகத் தெரிவிக்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு நாளைக்கு மூன்று தலித் பெண் கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இது ஏதோ அவர்கள் பெண்கள் என்பதால் மட்டுமல்ல, தலித்துகளாக இருப்பதாலுமே இந்தக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. இலங்கையில் சிங்கள மொழி பேசுகிறவன், தமிழ் பேசுபவனை ஒடுக்குகிறான். ஆனால் இங்கோ, ஒரு தமிழனே சாதியின் பெயரால் மற்றொரு தமிழனை ஒடுக்குகிறான். அப்படி இருக்கும்போது, மொழியின் பெயரால் நீங்கள் மலையாளியாக, பீகாரியாக நினைத்து ஒதுக்கும் எம் தாழ்த்தப்பட்டவனை நான் சகோதர னாகப் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்றளவும் பார்ப்பனர் அல்லாதோர் யாருமே கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் போய் விட முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய உலக சிந்தனையாளர் அம்பேத்கரை வட நாட்டுத் தலைவர் என்று கூறி சிமிழுக்குள் அடைப்பது மொழிப் பைத்தியத்தால் விளைந்த விபரீதம். 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி தமிழ் மொழி. இந்த நாடு நாகர்களுக்குச் சொந்தமானது!’ என்கிறார் அம்பேத்கர். நாகர்கள் எனப்படுபவர் கள் திராவிடர்களே. மண்ணின் மைந்தர்களே! அப்படியானால், அம்பேத்கரும் திராவிடர்தான். இந்த அறிவியல் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். சும்மா மொழிக் கூச்சல் போட்டுப் பயன் இல்லை!''

''தலித் கட்சிகள் தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இருக்கின்றனவா?''

''அம்பேத்கரும் திராவிடர்தான்!''

''மற்ற 234 எம்.எல்.ஏ-க்களால் என்ன செய்ய முடிந்ததோ, அதைத்தான் தலித் கட்சி எம்.எல்.ஏ-க்க ளாலும் செய்ய முடியும். தலித்துகள்... மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் சாதியற்றவர்கள். தலித் கட்சி என்றால், அது ஒரு சாதிக் கட்சி என்றுதான் பார்க்கப்படுகிறது. அதனாலேயே, ஒரு தலித் கட்சியில் தலித் அல்லாத யாரும் உறுப்பினராகச் சேர்வது இல்லை. தலித்துகள் மட்டுமே உள்ள கட்சி அதிகார அரசியலுக்கு வந்தாலும், மற்ற கட்சி கள் போலவே சீரழியத் தொடங்குகின்றன. 'power corrupts’ என்பது உண்மைதான். அதிகாரத்துக்குச் சென்றவுடன் எண்ணங்களும் மாறுகின்றன. வந்த நோக்கம் மறந்துபோகிறது.

தி.க-வில் இருந்து பிரிந்து தி.மு.க ஏன் உருவானது? அதிகாரத்துக்கு வந்தால், பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றுதானே காரணம் சொன்னார்கள்? சமத்துவ உலகைக் காண ஆசைப்பட்ட பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக இன்றைக்கும் சாதிய வன்கொடுமைகள் நடக்கின்றன. சாதி இந்துக்களோடு போய் நின்றுகொண்டன திராவிடக் கட்சிகள். வேட்பாளர் சாதி பார்த்துத்தான் நிறுத்தப்படுகிறார். ஆக, அதிகாரம் எப்படி கொள்கைகளைச் சீரழிக்கும் என்று இத்தனை ஆண்டு கால அரசியலில் நாம் கண் முன்னே பார்த்துவிட்டோம். இதே நிலைதான் தலித் கட்சிகளுக்கும்!

தலித் முதல்வராக மாயாவதி இருக்கிறார். ஆனால், அவர் ஆளும் உத்தரப்பிரதேசத்தில்தான் பெருமளவில் வன்கொடுமை கள் நடக்கின்றன. தலித் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய திருமாவளவன், இன்றைக்குத் தேர்தல் அரசியலுக்காக தான் எல்லோருக்குமானவர் என்று காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் பிரச்னை என்று எல்லாவற்றையும் கையில் எடுக்கிறார். அதனால், அவருடைய முன்னுரிமைகள் வேறாகிவிட்டன!''  

''ஒரு மாற்றுப் பத்திரிகை என்கிற முறையில், இதழைத் தொடர்ந்து நடத்தப் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடுமே?''

''என் வாழ்க்கையைப் பணயம்வைத்துதான் இதழை நடத்துகிறேன். இது ஏதோ ஒரு சாதிப் பத்திரிகை என்று பலர் நினைத்துக்கொண்டு விளம்பரங்கள் தர முன்வருவது இல்லை. நண்பர்கள், நலம் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அளிக்கும் ஆண்டு சந்தா, ஆயுள் சந்தா, நன்கொடைகள் போன்றவற்றால்தான் தொடர்ந்து வெளிவருகிறது தலித் முரசு. பொதுப் புத்திக்கு நேர் எதிர் கருத்தைச் சொல்லும் பத்திரிகையை யார்தான் ஆதரிப்பார்கள், சொல்லுங்கள்? தலித் முரசு அச்சிடப்படும் அச்சகத்தின் உரிமையாளருக்கு மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் வரை தர வேண்டி இருக்கிறது. அவர் கேட்காமல் இருப்பதால்தான், தொடர்ந்து மலர்கிறது தலித் முரசு!''

''இன்றைய இலக்கியங்கள், திரைப்படங்கள் உங்களை ஈர்க்கின்றனவா?''

''சமூக மாற்றத்துக்குப் பயன்படாத எதுவும் இலக்கியமோ, கலையோ அல்ல. ராமாயணமும் மகாபாரதமும் பெரும் இதிகாச இலக்கியங்கள்தான். ஆனால், சம்புகனின் தலையைக் கேட்கும், ஏகலைவனின் விரலைக் கேட்கும் சதித் திட்டங்களை உள்ளடக்கியதாக அல்லவா அவை இருக்கின்றன? விஷத்தை இலக்கியம் என்கிற பூச்சு தடவி மக்களுக்குத் தருவதை ஒருபோதும் விரும்ப முடியாது. தலித் இலக்கியம் ஒரு மாற்று இலக்கியமாக வளர்ந்து வந்தாலும், பெரும்பாலானவை அடுத்த கட்டத் துக்குச் செல்லாமல் அவலத்தை மட்டுமே சொல்வதாக உள்ளன. இதில் விதிவிலக்குகளும் உண்டு.  

திரைப்படங்களில் பெரும்பாலானவை சமூகப் பொறுப்பு உணர்வு இன்றி சாதியத்தை உள்வாங்கிப் பிரதிபலிப்பவையாக இருக் கின்றன. 'பருத்திவீரன்’ படம் வெளியான சமயம், 'சண்டாளி ஒன் பாசத்தால...’ என்று திரும்பிய பக்கம் எல்லாம் பாடல் ஒலித்தது. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் 'சண்டாளப் பாவிகளா!’ வார்த்தைகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி 'சண்டாளா!’ என்று ஒருவரைத் திட்டுவது தண்டனைக்குரிய குற்றம். சண்டாளர் எனப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர். ஆனால், எந்தப் பொறுப்பு உணர்வும் இன்றி எடுக்கப்படும் இம்மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும்போது, எனக்கு காறி உமிழத்தான் தோன்றுகிறது!''