இன்பாக்ஸ்

• தமிழ் நடிகைகளின் கோலிவுட் டு பாலிவுட் என்ட்ரியில் லேட்டஸ்ட்... சினேகா! நஸ்ருதின் ஷாவுக்கு மனைவியாக 'Mad Dad’ என்ற படத்தில் நடிக்கிறார் சினேகா. தமிழ்ப் பெண் கேரக்டர் என்பதால், படம் முழுக்கவே சென்னைத் தமிழ் பேசுவாராம். சிச்சுக்கினே பேசுவாங்கப்பா!

• நடிகைகளில் பூஜா சம்திங் டிஃபெரன்ட். நடிகை என்கிற பந்தா இல்லாமல், பெங்களூரின் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணி புரியத் துவங்கி இருக்கிறார். ''எல்லார் மாதிரியும் வாழணும். எவ்வளவு நாள்தான் நடிகைன்னு மக்களோடு பழகாமலேயே இருக்குறது? இதுவும் ஒரு அனுபவம்தானே!'' என்று கண் சிமிட்டுகிறார். ஆபீஸ்ல உங்களைச் சுத்தி 'ஜே ஜே’ன்னு இருக்குமே!
##~## |
• கமல் அடுத்து நடிக்க இருப்பது ஒரு பட்ஜெட் படம்! ஹிதேந்திரனின் இதய தானத்தைக் கதைக் களமாக அமைத்து, மலையாளத்தில் வெளிவந்த 'டிராஃபிக்’ படம் அங்கு ஹிட். அதன் தமிழ் ரீ - மேக்கில் நடிக்க இருக்கிறார் கமல். செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்’ படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதால், கிடைத்த இடைவெளியில் 'டிராஃபிக்’கை முடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் கமல். மவுன்ட் ரோட்ல ஷூட்டிங் வெச்சா விஸ்வரூப டிராஃபிக் ஆயிருமே!
• மலையாள நடிகை காவ்யா மாதவன் எட்டாவது படிக்கும்போதே சினிமாவில் நடிக்கத் துவங்கிவிட்டார். பத்தாவது வரை தத்தித் தத்திப் படித்தவர், பிறகு படிப்பைத் தொடரவே இல்லை. இப்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கும் நிலையில், காவ்யாவுக்கு மீண்டும் படிப்பு ஆசை வந்துவிட்டது. திறந்த வெளிப் பள்ளியில் ப்ளஸ் டூ சேர்ந்து, கர்ம சிரத்தையாகப் படித்துத் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறார். படிப்பு - நடிப்பு - படிப்பு!
• பல மாதங்களாகக் குடும்பச் சுற்றுலா செல்ல நேரம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்த சூர்யா, கடந்த வாரம் அப்பா, அம்மா, ஜோதிகா, கார்த்தி, தியா, தேவ் என மொத்தக் குடும்பத்துடனும் கர்நாடக மாநிலம் கூர்க்குக்கு சம்மர் ட்ரிப் அடித்து வந்திருக்கிறார். 'இனி, எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் ஃபேமிலி ட்ரிப் அடிக்க வேண்டும்!’ என்று முடிவெடுத்திருக்கிறது சூர்யா குடும்பம். அடுத்த ட்ரிப்பில் மிஸஸ்.கார்த்தியும் சேர்ந்துக்குவாங்க!

• பிரபல இணையதளம் ஒன்று, 'உலகின் மிக அழகான இளவரசிகள்’ என்று நடத்திய சர்வேயில் மொனாக்கோ நாட்டு இளவரசியும் நடிகையுமான கிரேஸ் கெல்லிக்கு முதல் இடம். இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸைத் திருமணம் செய்ய இருக்கும் கேத் மிடில்டன் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார். அழகிய இளவரசர்களுக்கான வாக்கெடுப்பில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கார்ல் பிலிப்புக்கு முதலிடம். இங்கிலாந்து இளவரசர்கள் ஹாரி, வில்லியம்ஸுக்கு நான்கு, ஐந்தாவது இடங்கள். ராசா வீட்டுக் கன்னுக்குட்டிகள்!

• 'எனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். எனவே, கன்னட சினிமாவில் இருந்தே விலகுகிறேன்’ என்று அறிவித்து, கன்னட சினிமாவில் இருந்து ஒதுங்கிய திவ்யா ஸ்பந்தனா இப்போ அடுத்த அதிரடிக்கு ரெடி. 'ராகுல் காந்தியும் அண்ணா ஹஜாரேவும் என் வழிகாட்டிகள். என் தாத்தா வழியில் நானும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறேன்!’ என்று அரசியல் என்ட்ரிக்கு அடி போட்டிருக்கிறார் திவ்யா. கதர் கட்சிக்கு புது ஃபிகர்!

• ஐ.பி.எல் சீஸன் 4-ன் கட்டிப்பிடி நாயகி... நீட்டா அம்பானி. ஏனோ ப்ரீத்தி ஜிந்தா இப்போதெல்லாம் பிளேயர்களைக் கட்டிப்பிடிப்பது இல்லை. சமத்துப் பிள்ளையாக முழுக்கை சல்வார் அணிந்து வந்து, உற்சாகக் கை குலுக்கல்களுடன் நிறுத்திக்கொள்கிறார். ஆனால், ஆச்சர்யமாக நீட்டா அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றால், உடனே பிளேயர்களைக் கட்டிப் பிடித்துப் பாராட்டத் துவங்கிவிடுகிறார். ஆம்பளை ஓனர்ஸ் என்னப்பா பண்றீங்க?
• டைம் இதழ், உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை வெளியிடுவதற்கு முன், அதில் நான்காவது இடம் பிடித்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. தகவல் கேள்விப்பட்டதும், பூரித்து மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்தன சிங்கள ஊடகங்கள். 'ஒபாமாவே 88-வது இடத்தில் இருக்கும்போது, ராஜபக்ஷே எப்படி நான்காவது இடத்துக்கு வந்தார்?’ என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது டைம் தேர்வுக் குழு. வாக்கெடுப்பில் ராஜபக்ஷேவே ஆள் வைத்து, ஆன்லைன் மூலம் ஏராளமான கள்ள ஓட்டுகளைப் போட்டுத் தாக்கி இருப்பதைக் கண்டுபிடித்து, பட்டியலில் இருந்து அவர் பெயரையே நீக்கிவிட்டார்கள். பக்ஷேவுக்கு 'டைம்’ சரியில்லை!
• பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நகர் முழுவதும் 15 ஆயிரம் மரங்களை வெட்டினார்கள். இதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, அதற்குப் பிராயச்சித்தமாக கர்நாடகம் முழுவதும் ஒரு கோடி மரங்களை நட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடியூரப்பா. தமிழக அரசின் கவனத்துக்கு!

• விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்ததில் இருந்து நிறையவே மாறிவிட்டார். ஜிம்முக்குச் சென்று உடலைக் குறைக்க ஆரம்பித்திருப்பவர், ஃப்ரெஞ்ச் தாடியுடன் மாடர்ன் லுக்கில் வலம் வர ஆரம்பித்திருக்கிறார். கட்சிக் கூட்டங்களிலும் அடிக்கடி அப்பாவுடன் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். சினிமாவா... அரசியலா தம்பி?