Published:Updated:

ஐஸ் ஏஜ் - கொலிஷன் கோர்ஸ்.... படம் எப்படி?

ஐஸ் ஏஜ் - கொலிஷன் கோர்ஸ்.... படம் எப்படி?
ஐஸ் ஏஜ் - கொலிஷன் கோர்ஸ்.... படம் எப்படி?

2002-ல் இருந்து அனிமேஷன் உலகின் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கும் ஐஸ் ஏஜ் வரிசையில் ரிலீஸாகியிருக்கும் ஐந்தாவது பாகம் தான் ஐஸ் ஏஜ் - கொலிஷன் கோர்ஸ் (Ice Age: Collision Course).

மற்ற பாகங்களைப் போலவே இதிலும் ஸ்க்ராட் ஓக் பழ பைத்தியமாக திரிகிறது. அந்தப் பழத்தை புதைத்து வைக்க முயற்சிக்கும்போது ஒரு ஏலியன் ஷிப்பை தவறுதலாக ஆக்டிவேட் செய்து அதன்மூலம் விண்வெளிக்கு சென்று விடுகிறது. அங்கும் கை, காலை சும்மா வைத்துக் கொண்டிருக்காமல் சேட்டைகள் செய்து பல விண்கற்களை பூமி நோக்கி திருப்பிவிடுகிறது. மறுபக்கம், பூமியில் யானைகளான மானியும், எல்லியும் தங்கள் திருமண நாளை கொண்டாடுகின்றன. அந்நேரம் பூஜை நேரத்து கரடியாய் விண்கற்கள் புகுந்து அவர்களை பயமுறுத்துகின்றன. 'இது சும்மா ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் இனிதான். நான் சொல்றமாதிரி செஞ்சா விண்கல்லை திருப்பி அனுப்பிடலாம்' என கரெக்ட் டைமிற்கு ஆஜராகி சொல்கிறது பக்.

பக் அறிவுரையின்படி பல ஆண்டுகளுக்கு முன் விழுந்த ஒரு விண்கல்லை தேடி அனைவரும் பயணிக்கிறார்கள். சைட் ட்ராக்கில் மானியின் மகள் பீச்சஸ், ஜூலியன் என்ற யானையோடு காதல் கொள்கிறது. தந்தை - மகள் மோதல், பக்கின் பரம பகையாளி டைனோசர்களின் இடையூறு ஆகிய அனைத்தையும் தாண்டி விண்கல்லை திருப்பியனுப்பி உலகத்தை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் மிச்சக் கதை.

இந்த படத்தின் முக்கிய தூண் பக். நிறைய காமெடி, கொஞ்சம் ஆக்‌ஷன் என மேன் ஆஃப் தி மூவி பக் தான். பக்கிற்கு துணையாய் காதல் எபிஸோடுகளில் கலகலக்க வைக்கிறது சிட். போகிறபோக்கில் நம்மூர் யோகாவை பங்கம் செய்திருக்கிறார்கள். அனிமேஷன் வழக்கம் போல அசத்தல்.

 படத்தின் தமிழ் பதிப்பில் அதிரிபுதிரி பஞ்ச் வசனங்கள். ஆனால், அதெல்லாம் குழந்தைகள் படத்தில் கொஞ்சம் டூ மச் என்றும் தோன்றுகிறது.

ஆரம்பக் காட்சிகளில் காதல் தோல்வியில் சுத்தும் சிட் மீண்டும் காதலில் விழும் காட்சிகள் படத்தின் எக்ஸ்ட்ரா காமெடி போஷன்! “என் கால் அழகுல கால்வாசி கூட யாரும் இருக்க மாட்டாங்க” என்று காதலியை இம்ப்ரெஸ் செய்யும் காட்சிகளில் திரையரங்கமே அதிர்ந்தது.

இளமையாக வைத்திருக்கும் விண்கள்கள், எதிர் எதிர் துருவம் காந்த சக்தியில் ஈர்க்கும், இதனால் ஏற்படும் எலக்ட்ரிசிட்டியால் என்னவாகும் என்பதை கற்பனைக்கலந்த அறிவியல் விந்தைகளையும் காட்சிகளில் கொண்டுவந்து, விளையாட்டாய் விஷயங்களை புகுத்தியிருக்கிறது இந்த ஐஸ் ஏஜ்.

இன்ஸைட் அவுட், ஆங்கிரி பேர்ட்ஸ், ஃபைன்டிங் டோரி, சீக்ரெட் லைஃப் ஆப் பெட்ஸ் என்று இப்பொழுது வரும் அனைத்துப் படங்களுமே கதைக்கும், பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும் சொல்லத்தவறியதில்லை. அதுமட்டுமின்றி அதிபயங்கரமான வில்லன் கதாப்பாத்திரம் என்று எதையும் முன்னிருத்தாமல் நல்ல விஷயங்களையே படங்களில் விதைக்கும் இந்த மாதிரியான அனிமேஷன் படங்கள் வரவேற்றகத்தக்க ஒன்றே.

மொத்தத்தில் கதையில் பெரிய ட்விட்ஸ்கள் எதுவும் இல்லை. ஆனாலும் இவற்றின் ஜாலி சேட்டைகளுக்காக பொறுத்துக் கொள்ளலாம். முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்தப் படம் கொஞ்சம் சுமார் ரகம்தான். ஆனா கண்டிப்பா உங்க வீட்டு சுட்டிக்கும் பிடிக்கும். உங்களுக்குள்ள இருக்குற சுட்டிக்கும் பிடிக்கும்.   

 படத்தின் ட்ரெயிலரைக் காண..