Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்கள் எதற்கு..!?

தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்கள் எதற்கு..!?
தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்கள் எதற்கு..!?

தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்கள் எதற்கு..!?

காட்சி 1:

போரில் எதிரிகளை துவம்சம் செய்து தூக்கியெறிந்துவிட்டு மன்னரின் சபையில் பாராட்டு பெறுவதற்காக வந்திருப்பார் தளபதி(ஹீரோ). மன்னரின் ஒரு பக்கத்தில் அவருடைய மனைவியும் இன்னொரு பக்கத்தில் இளவரசியும் (ஹீரோயின்) அமர்ந்திருப்பார்கள். மன்னர் கொடுத்த பொற்கிழியையும் கழுத்திலிருந்து கழட்டிக்கொடுத்த முத்து மாலையையும் வாங்கிக்கொண்ட தளபதி மன்னரையும் இளவரசியையும் பார்த்து  புன்னகைப்பார். இளவரசியின் தோழிகள் அவளது காதில் ஏதோ கிசுகிசுப்பார்கள். அதைக் கேட்டதும்
கன்னம் சிவக்க வெட்கப்பட்டுக்கொண்டே கீழே குனிந்து கொள்வார் இளவரசி.

காட்சி 2 :

ஊரே கூடி நிற்கும் மைதானத்தில் ஒருவர் வில்லனின் செல்ல காளையை பற்றிய பெருமைகளை சொல்லிக்கொண்டிருப்பார். 'பாத்தியா என் கெத்த' என மீசையை முறுக்கியவாறு மேடையிலிருந்து அதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருப்பார் வில்லன். காளையின் ஹிஸ்டரியை சொல்லி முடித்ததும்
தன் இருக்கையிலிருந்து எழுந்து "இந்த ஊர்ல ஆம்பிளைன்னு ஒருத்தன் இருந்தா என் காளைய அடக்குங்கடா பார்ப்போம்" என சொல்லிவிட்டு பழைய பொசிஷனில் வில்லன் உட்காருவதற்குள் ஜங்கென ஜம்ப் அடித்து வருவார் ஹீரோ. காளையை தன் புஜபலத்தை காட்டியோ, குரல் வளத்தைக் காட்டியோ கன்ஃப்யூஸ் செய்து அடக்கியும் விடுவார். உடனே கூட்டம் அவரை தூக்கித், தட்டாமாலை சுற்றும். கடைசியாக வில்லன் போடும் ரோஜா மாலையை கழட்டிய ஹீரோ, கூட்டத்தை நோக்கி வீசியெறிய அது நேராக மாட்டுவண்டியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஹீரோயின் கழுத்தில் போய் விழும். ஹீரோயின் அந்த மாலையை பார்க்க, அடுத்த காட்சியில் கனவுலகில் இருவரும் இல்லறத்தில் ஈடுபடுவதற்கான முனைப்பில் இருப்பார்கள்,

காட்சி 3:

பெண் பார்க்க வந்திருப்பார் ஹீரோ .அதுவும் பெரும்பாலும் முரட்டு முறை மாமனாகத்தான் இருப்பார். கூட்டம் கம்மென இருக்க ஒருவர் மட்டும் "இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி? நல்லநேரம் முடியுறதுக்குள்ள பொண்ண வரச்சொல்லுங்க "என்பார். அதற்காகவே காத்திருந்தது போல ஹீரோயினும் குனிந்த தல நிமிராமல் காபித் தட்டை ஏந்தியவாறு உள்ளே நுழைவார். "மாப்பிள்ளைக்கு முதல்ல குடுத்தா..!" என ஒரு பெருசு சலசலக்கும். அவரிடம் தட்டை நீட்டியபடி நிற்க, ஹீரோவோ நேரங்காலம் தெரியாமல் அக்கம்பக்கத்தை மறந்து ஹீரோயினை பார்த்து கண்ணடிப்பார். உடனே வெட்கம் வர தட்டை அங்கேயே வைத்து விட்டு ஓடிப்போய் சமையலறையில் புகுந்து கொள்வார். கூட்டம் கலகலக்கும்.

காட்சி 4:

கொட்டும் மழையில் ஊரே ஒதுங்கி ஓரமாய் நின்று கொண்டிருக்கும். நாயகி தன் தோழிகளுடன் சேர்ந்து தன் புத்தகங்களையெல்லாம் வீசியெறிந்து விட்டு மழையில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுவார். நடுநடுவே பட்டாம்பூச்சியை துரத்துவார். மின்மினிப் பூச்சியை பிடிப்பார். ஆடி முடித்து வீட்டிற்கு சென்றால் 'ஏன் இவ்ளோ லேட்டு? மாப்ள வீட்டுக்காரங்க வந்திருக்காங்க. சீக்கிரம் டிரெஸ் மாத்திட்டு வா' என்பார்கள்.

காட்சி 5:

ஹீரோயின் பயங்கர சாதுவாய் இருப்பார். பல்லியை பார்த்தாலே மிரண்டு ஓடும் அவரை பார்த்து காதல் கொள்வார் ரவுடி ஹீரோ. உருட்டி, மிரட்டி, துரத்தி, கடத்தி என பற்பல சாகசங்கள் காட்டி தன் காதலை ஒப்புக்கொள்ள வைப்பார் ஹீரோ. அதன்பின் ஹீரோ வில்லன்களுடன் மோதுவதில் பிஸியாகிவிட நடுநடுவே துண்டு துக்கடா துணியோடு வந்து ஆடிவிட்டுப் போவார் அதே 'சாது' ஹீரோயின். கடைசியாய் பெயர் போடும்போது ஹீரோவோடு நின்று போஸ் கொடுப்பார்.         

      தமிழ் சினிமாவில் இதுவரை வந்துள்ள ஆயிரக்கணக்கான சினிமாக்களில் முக்கால் பங்கு படங்களில் நாயகிகளுக்கான காட்சியமைப்பு இதுதான். ஹீரோவால் துரத்தித் துரத்தி காதலிக்கப்படுவதும், ஹீரோவை 'மாமோய்' என ஓடி ஓடிக் காதலிப்பதும்தான் நாயகிகளின் அதிகபட்ச வேலை. 'தயாரிப்பாளர் கதைக்கு க்ரீன் சிக்னல் காட்டிட்டாரா?', 'ஹீரோ கால்ஷீட் வாங்கியாச்சா?' அது போதும். ஹீரோயினுக்கு தனியா சீன் எல்லாம் யோசிக்க வேணாம்' என்பதுதான் முக்கால்வாசி படைப்பாளிகளின் கருத்து போல. இதைவிட பெரிய கொடுமை 80களில் வந்த படங்களில் கிளப் டான்ஸ் ஆடுவதற்கென்றே ஒரு செகண்ட் ஹீரோயின் கேரக்டர் இருக்கும். கடைசியில் ஹீரோவுக்காக குண்டடிபட்டு செத்துப் போகும். நிழலில் கவர்ச்சி காட்டிய இவர்களை நிஜத்தில் துகிலுரிய துடித்த கூட்டம் ஏராளம். அந்த கேரக்டர்தான் தற்போது ஒற்றை குத்துப்பாட்டுக்கான ஹீரோயினாக பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறது.
   
      நிற்க. பாலைவனத்தில் முளைக்கும் பேரீச்சை மரங்கள் போல அவ்வப்போது நாயகிகளை முன்னிறுத்தியும் சில படங்கள் வெளிவந்து விவாதங்களை எழுப்பியுள்ளன. எல்லாப் புகழும் பாலச்சந்தர், பாலு மகேந்திரா, ருத்ரைய்யா போன்ற சிலருக்கு மட்டுமே போய்ச் சேருகிறது.  விவாதங்கள் முற்றி சர்ச்சை, சண்டையானாலும் இவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதில்லை. ஆனால் இன்றைய இயக்குனர்கள் ஏனோ அப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்கத் தயங்குகிறார்கள். மிகக் குறைந்த அளவிலே, பெண்களின் பிரச்னைகளைப் பேசும் கதாபாத்திரங்கள் நாயகிகளுக்கு அமைகிறது. 'இறைவி' போன்ற படங்களையும் முழு பெண்ணியம் பேசும் படமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போக, இவற்றில் பல படங்கள் எல்லாமே 'ஆணின் பார்வையில் பெண்ணியம்' பேசுபவையே.

ஏன் தேவை கதாநாயகிகான முக்கியத்துவம்?

     தமிழ் சினிமாவில் நாயகிக்கு ஏன் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? பதில் மிகவும் சிம்பிள். எத்தனை காலத்திற்குத்தான் ஆணின் கதையை சொல்கிறோம் என அரைத்த மாவையே அரைப்பது? கொஞ்சம் இறைவிகளின் கதைகளையும் பேசுவோம். 'கபாலி' படம் பற்றி நிறை, குறை சொல்லும் அத்தனை பேரில், பெரும்பாலும் பலர் ஒன்றிப்போவது ரஜினி - ராதிகா ஆப்தேயின் கவித்துவமான காதல் காட்சிகளில்தான். அதைப் போலவே அதில் பாராட்டுப் பெற்ற இன்னொருவர் தைரியலட்சுமியாய் தூள் கிளப்பிய தன்ஷிகா. தோட்டாக்கள் தெறிக்கும் கேங்ஸ்டர் படத்தில், உச்ச நட்சத்திரத்தை மீறி இரண்டு பெண்கள் நம்மை நெகிழ வைக்கவோ, பிரமிக்க வைக்கவோ செய்யும்போது மொத்தப் படமும் அவர்களின் கதை சொன்னால்?
 
 உலகம் முழுக்க கலையின் வழி சமூக மாற்றங்களை நிகழ்த்துவதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. பெண்களை போகப்பொருளாக மட்டுமே சிந்திக்காமல், வேறு பார்வையில்.. வேறு கோணத்திலும் கொண்டாட வேண்டும்.  'இல்ல ஜி. இப்படிதான் பண்ணுவோம்' என்றால், ஸாரி. நம் தலைமுறையை எத்தனை சூப்பர்ஹீரோக்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. 

-க.பாலாஜி

அடுத்த கட்டுரைக்கு