Published:Updated:

விஜய், அஜித் vs எம்.ஜி.ஆர், சிவாஜி..!

விஜய், அஜித் vs எம்.ஜி.ஆர், சிவாஜி..!
விஜய், அஜித் vs எம்.ஜி.ஆர், சிவாஜி..!

விஜய், அஜித் vs எம்.ஜி.ஆர், சிவாஜி..!

'வாழ்க்கை ஒரு வட்டம் போல..அதில் மேல இருக்கிறவன் கீழ வருவான் கீழ இருக்குறவன் மேல போவான்' - சினிமாவில் பரபரப்பாக பஞ்ச் பேசியிருப்பார் ஒரு கதாநாயகன். சினிமா கதாநாயகன் பேசிய வசனம், சினிமாவிற்கே இப்போது பொருந்தியிருக்கிறது.

ஆம்...தொழில்நுட்ப வளர்ச்சியினால் பிரமாண்ட வடிவமெடுத்திருக்கும் தமிழ்த் திரைப்படத்துறை, அப்படி வளர்ச்சிபெறாத காலகட்டங்களில் தயாரான படங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது இப்போது.

கபாலி ஃபீவர் என்பதெல்லாம் சும்மா என்பது போல் இந்த திரைப்படங்கள் நெருப்பாக தியேட்டர்களை பற்றி, ரசிகர்களுக்கு 'மகிழ்ச்சி' தர ஆரம்பித்திருக்கிறது. இந்த புரட்சிக்கு வித்திட்டது முந்தைய தலைமுறை நடிகர்கள் அல்ல; அதற்கும் முந்தைய தலைமுறை 'திலக' நடிகர்கள். ஆம் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் நடித்த திரைப்படங்கள்தான் இந்த ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இது ரஜினி கமல் படங்களுக்கும் விரவிப்பரவி இப்போது டிஜிட்டல் துாசி தட்டப்படுகின்றன கொட்டகை மணலில் நாம் பார்த்து ரசித்த அந்நாளைய திரைப்படங்கள்.

க்யுப் எனப்படும் சாப்ட்வேர் லைசென்சுடன் பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன. தெளிவான காட்சி, புரெஜக்டர் தேவையில்லை என்பதால் இடையூறு அற்ற ஓட்டம், சவுண்ட் ட்ராக் தனியே பிரி்த்து டிஜிட்டலாக கோர்த்திருப்பதால் நுட்பமான ஒலி, ஒளி என அசத்துகின்றன இப்படி டிஜிட்டல் சட்டை போர்த்திக்கொண்ட படங்கள்.

திரைப்படத் தயாரிப்புகள் குறைந்ததும், பெரிய நடிகர்களின் படம் மட்டுமே வசூலுக்கு உத்தரவாதம் என்ற சில காரணங்களால் 2000களின் ஆரம்பத்தில் தியேட்டர்கள் காம்ப்ளக்ஸ்களாக கழுத்தில் போர்டு மாட்டிக்கொள்ள வேண்டியதானது. இந்நிலையில் ரீ ரிலீஸ் படங்கள் தியேட்டர் அதிபர்களை சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவைத்திருக்கிறது.

தமிழகம் முழுக்க கபாலி ஜிரம் பற்றிக்கொண்டு கலகலத்துக்கொண்டிருந்த ஒருவேளையில்தான் சென்னை சீனிவாசா தியேட்டரில் சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன் 100வது நாள் கொண்டாட்டம் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருந்தது. தங்கள் பேரன் பெயர்த்திகளோடு விழாவில் கலந்துகொண்டனர் அந்நாளைய ரசிகர்கள்.

திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் மீறி கலை என்ற ஒன்றாக மதிக்கப்பட்ட அக்காலத்தில் பொறுப்புணர்ச்சியோடு அவை தயாரிக்கப்பட்டன. கதையமைப்பு, கண்ணியமான நடிப்பு, விரசமில்லாத காட்சிகள் என அப்போது எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றன. கதாநாயகன் தொட்டு நடித்த காரணத்திற்காக படப்பிடிப்பு தளத்தை விட்டு கோபத்துடன் வெளியேறிய 'நடிகைகள்' அந்நாளில் இருந்ததுண்டு. தனக்களிக்கப்பட்ட உடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி தயாரிப்பாளர் மேல் வழக்கு தொடுத்த நடிகையின் கதையையும் தமிழ்சினிமா உலகம் சந்தித்திருக்கிறது. பின்னாளில் சினிமா வணிகச் சட்டை போர்த்திக்கொண்டபின் இந்த அம்சங்கள் அனைத்தும் துார எறியப்பட்டன.

சினிமா முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்டன. தயாரிப்பாளர்கள் என்ற போர்வையில் பெரும் வணிகர்கள் திரைப்படத்துறைக்குள் நுழைந்தனர். கதாநாயகர்கள் காதல் காட்சிகளில் எல்லை மீறியதும், ரசிகர்களுக்கான தேவைகளை கதாநாயகிகளே பூர்த்தி செய்ய ஆரம்பித்ததும் இந்த காலத்தில்தான். 'சினிமா என்றால் வர்த்தகம்; வர்த்தகம் தவிர வேறில்லை' என சத்தியம் செய்யாத குறையாத படங்கள் வசவசவென வெளியாகத் துவங்கின.

சில ஆயிரங்களில் துவங்கிய சினிமா, இன்று சில நுாறு கோடிகளில் பட்ஜெட் என்றாகிவிட்டது. வெளியாகும் படங்களில் ஆண்டுக்கு 10 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியடைகின்றன. சினிமா தயாரிப்புகள் தொடர்ந்தாலும் தொடர் தொல்விகளால் சினிமாத்துறை சிரம கதியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது . கடந்த ஆண்டில் வெளியான நுாற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையை கைவிரல்களிலேயே காட்டிவிடலாம். அத்தனை சிரம கதி சினிமாவுக்கு.

கணிசமான படங்கள் வெளியிட முடியாமல் ஸ்டுடியோக்களின் ஸ்டோர் ரூம்களில் துாங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம் தயாரிப்பாளர்கள் அதற்கு நிர்ணயித்த விலை. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல, இந்த படங்கள் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்கள் மீள்வது சிரமம். இதனால் பல நுாறு படங்கள் வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் இல்லாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில்தான் தியேட்டர்கள் தொடர்ந்து காம்ப்ளக்ஸ்களாக மாறாமல் இருக்க ரீ ரிலீஸ் படங்கள் கைகொடுக்க ஆரம்பித்திருக்கின்றன இப்போது.

1973 ல் வெளியான எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' அந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படம். அது சில வருடங்களுக்கு முன் மறு வெளியீடு (சவுண்ட் டிராக் மட்டும் நவீன தொழில்நுட்பத்தில்)(டிஜிட்டல் அல்ல)செய்யப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்துநின்றனர் இன்றைய தலைமுறை. இப்போது முழு டிஜிட்டலுக்கு தயாராகிவருகிறது, உலகம் சுற்றும் வாலிபன் படம்.  தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட்டு பெரும் வரவேற்பையும்,வசூலையும் குவித்தது. எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடிப்பில் 1971-ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ரிக்‌ஷாக்காரன். எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்த இந்த படத்தை டிஜிட்டல் வெர்ஷனில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ரகசிய போலீஸ் 115 திரைப்படம் இன்றைய செய்தித்தாளில் கபாலி விளம்பரத்திற்கு அருகில் படபடக்கிறது. சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் கடந்த 2012 ல் டிஜிட்டலுக்கு மாற்றி தமிழகம் முழுவதும் சுமார் 70 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. சில லட்ச ரூபாய் செலவில் டிஜிட்டல் மெருகேற்றப்பட்ட இந்தப் படம் பல கோடி ரூபாய் வசூலைக் கொடுத்தது.

இந்த படம், சென்னையில் ஒரே தியேட்டரில் 155 நாட்கள் ஓடி திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது. சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர், படங்கள் டிஜிட்டலில் வெளியாகின. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற தேர்ந்த நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியதன் விளைவாக  தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களின் பார்வை அம்மாதிரி படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. முந்தைய தலைமுறை நடிகர்களின் படங்களின் ரைட்ஸ் உள்ளவர்களைத் தேடி ஓட ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் ரகசிய போலீஸ் 115, எங்க வீட்டுப் பிள்ளை, படங்களை டிஜிட்டலில் மாற்றும் பணிகள் நடக்கின்றன. அடிமைப்பெண், நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், மாட்டுக்கார வேலன், இதயக்கனி, உரிமைக்குரல், படகோட்டி, ஒளிவிளக்கு ஆகிய படங்களும் டிஜிட்டலில் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படங்கள் அந்நாட்களில் சினிமாத்துறை ஆரோக்யமாக வளர வழிவகுத்த படங்கள்.

தமிழ்ப்பட உலகம் டிஜிட்டலுக்கு மாறி இருக்கிறது. இந்த தொழில் நுட்பம் தயாரிப்பு செலவையும் குறைத்து விட்டது. படச் சுருள்கள் மூட்டை கட்டப்பட்டு விட்டன. சினிமா நவீனத்துக்கு மாறினாலும் பழைய படங்கள் போல் அழுத்தமான கதையம்சம் இல்லாததால் நஷ்டத்தை சந்திக்கின்றன. கடந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து 15 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டி உள்ளன.

சிறு பட்ஜெட் படங்களின் நிலை இன்னும் மோசம். தியேட்டர்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே ஓடுகின்றன. சமயங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்த ஓரிரெண்டு காட்சிகள் திரையிட்டு தூக்கி விடும் நிலையும் இருக்கிறது. இந்த நிலையில்தான் பழைய படங்கள் பல நாட்கள் ஓடி சம்பாதித்துக் கொடுப்பது அந்த படங்களை டிஜிட்டலுக்கு மாற்ற காரணமாகியிருக்கிறது.

சிவாஜி கணேசன் நடித்துள்ள “ராஜபார்ட் ரங்கதுரை” படத்துக்கு டிஜிட்டல் தொழில் நுட்ப வேலைகள் முடிந்துள்ளன. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. சிவாஜியின் ராஜா, சிவந்த மண், கவுரவம், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜ சோழன் போன்ற படங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. தில்லானா மோகனாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எழுதி ஆனந்தவிகடனில் வெளியான நாவல். நாட்டியக்கலைஞர்களின் அற்புதமான காதலை சொல்லும் இந்த கதையை பிரபல இயக்குனர் ஏ.பி நாகராஜன்  திரைப்படமாக எடுத்தார். மொத்த தமிழகமும் மெய்மறந்து ரசித்த படம் இது. தாத்தாக்கள் பார்த்து ரசித்த இந்த படத்தை இன்றைய ஆன்ட்ராய்டு தலைமுறை பேரன்கள் ரசிக்க இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் சிவாஜி போன்ற முந்தைய தலைமுறைக்கு முந்தைய நடிகர்கள் படங்கள் மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களும் இந்த சுனாமியில் தப்பவில்லை. ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் ஏற்கனவே டிஜிட்டலில் வெளிவந்தது. தற்போது ‘16 வயதினிலே’ படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளனர். மேலும் 80 களில் இவர்கள் இணைந்தும் தனித்தனியேவும் நடித்து சக்கை போடு போட்ட படங்கள் மீண்டும் அதன் தயாரிப்பாளர்களால் டிஜிட்டல் வெர்ஷனுக்காக பட்டியல் எடுக்கப்பட்டுவருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதுகுறித்து சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகர் நம்மிடம், ' பழைய திரைப்படங்கள் காலமாற்றத்தில் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாவது புரட்சியான ஒன்று. தொழில்நுட்பத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் அந்நாளைய படங்கள் பெரும் சாதனைக்குரியவை. 2014 ல் சிவாஜியின் கர்ணன் திரைப்படம் இதுபோன்று திரையிடப்பட்டு சில கோடிகளை வசூலித்தது. தியேட்டர்களுக்கு வந்தவர்கள் பெரும்பான்மையினர் இளைஞர்கள். 100 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் 50 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடின என்பதெல்லாம் இன்றைய சூழலில் ஆச்சர்யமான விஷயம்.

டிஜிட்டலில் வெளியான கர்ணனில் அதன் சவுண்ட் ட்ராக்கை பிரித்து புதியதாகவே ஆர்கெஸ்ட்ரா வைத்து பின்னணி இசை கோர்த்தனர். 2015 ல் பாசமலர், வசந்தமாளிகை. இந்த வரிசையில் 2016 ல் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன் வந்தது.

ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டல் மேகிங்கில் தயாராகிவருகிறது. இப்படி திரைப்படங்கள் ரிரிலீஸ் செய்யப்படுவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமான விஷயம் என்பதுடன், இன்றைய தலைமுறை அன்றைய வரலாறுகளையும் முந்தைய தலைமுறை நடிகர்களின் நடிப்புத்திறமையையும் அறிந்துகொள்ள உதவும். வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்சினிமாவின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்று. இன்றுபோல் அல்லாமல் கிராபிக்ஸ் இன்றி நிஜத்திலேயே ஆயிரக்கணக்கானோர் போர் புரியும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக சிவாஜிக்கு எகிப்தில் ஒருநாள் மேயர்  கவுரவம் அளிக்கப்பட்டது. எகிப்தில் நடந்த பாராட்டுவிழாவில் சிவாஜியை மேடைக்கு அழைக்க, அப்போது முன்வரிசையில் இருந்து ஒரு குள்ளமான உருவம் எழுந்து மேடைநோக்கி நகர்ந்தபோதுதான் அதுவரை தங்களுடன் அமர்ந்திருந்த எளிய மனிதர்தான் சிவாஜி என அறிந்து வியப்பின் உச்சிக்குபோனார்கள்.

காரணம் மேடையில் ஒளிபரப்பப்பட்ட படத்தின் காட்சிகளில் அனல் கக்கிய அந்த உருவம் நிஜத்தில் அதற்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதுபோல் சாந்தமானவராக இருந்ததே. இப்படி பழைய திரைப்படங்களும் அதில் பணிபுரிந்து கலைஞர்களும் எதிர்கால தலைமுறை அறியவேண்டியது அவசியம். இப்படி சிறப்பான படங்கள் மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில் வெளியாவது பாராட்டத்தக்கது” என்றார்.

இன்றைய முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதற்படமான ஆயிரத்தில் ஒருவன் வண்ணப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது தனிப்பட்ட முறையில் அதன் அதை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ்க்கு பாராட்டுக்கடிதம் எழுதியதோடு நேரிலும் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட தயாரிப்பு அதற்காக நிர்ணயிக்கப்படும் கட்டணம், அது உருவாக்கும் பெரும் செலவு போன்றவற்றால் பாமரனின் பொழுதுபோக்கு அம்சமான சினிமா என்ற மீடியம், இன்று அவனிடமிருந்து தனிப்பட்டு நிற்கிறது. இன்னொரு பக்கம் இது இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் முடக்கிப்போட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் தியேட்டர்களுக்குள் கொண்டுவரும் சாத்தியம் இந்த டிஜிட்டல் புரட்சியினால் மட்டுமே எளிதாகலாம்.

ரசிகர்களின் இந்த ஆதரவை மீண்டும் தியேட்டர்கள் துஷ்பிரயோகம் செய்யாமலிருந்தால் இந்த ஆரோக்கியம் தொடரும். மீறீனால் சினிமா இயந்திரங்களை எதிர்காலத்தில் மீயூசியத்தில் பார்க்கவேண்டிய நிலையே ஏற்படும்.

- எஸ்.கிருபாகரன்
 

அடுத்த கட்டுரைக்கு