Published:Updated:

அஜித் தம்பி, மனதின் கேள்வி, தோல்வியின் வலி! - என்ன சொல்கிறார் விதார்த்?

அஜித் தம்பி, மனதின் கேள்வி, தோல்வியின் வலி! - என்ன சொல்கிறார் விதார்த்?
அஜித் தம்பி, மனதின் கேள்வி, தோல்வியின் வலி! - என்ன சொல்கிறார் விதார்த்?

அஜித் தம்பி, மனதின் கேள்வி, தோல்வியின் வலி! - என்ன சொல்கிறார் விதார்த்?

“தோல்வி எனக்கு ரொம்பப் பிடிக்கும். தோல்வியோட வலி என்ன தூங்கவிடாது. நேற்றைய தோல்விதான் இன்றைய வெற்றியா பார்க்குறேன்” என்று பாசிட்டிவாக பேசி வரவேற்கிறார் நடிகர் விதார்த். திருநெல்வேலி, களக்காட்டுக்காரர். மைனா படத்தினால் ரசிகர்கள் மனதில் நின்றவர். காக்காமுட்டை மணிகண்டனுடன் கைகோர்த்திருக்கும் படம்  “குற்றமே தண்டனை” நாளை ரிலீஸ். ஜில்லென்ற மழைக்கு நடுவே, விதார்த்துடன் ஒரு சூடான தேனீர் சந்திப்பு. 

“காக்காமுட்டை பலதரப்பட்ட பாராட்டுக்களைப் பெற்ற படம். இயக்குநர் மணிகண்டன் இந்தப் படத்தில் என்ன கதைக்களத்தை கையாண்டிருக்கிறார்?” 

“வங்கியில் லோன் வாங்கிட்டு, பணம் செலுத்தாதவர்களிடம் கலெக்‌ஷன் செய்றவன் தான் மெயின் ரோல். நேரில் பார்க்கும் கொலை... அந்த கொலையால அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவமே கதை. இதுக்குள்ள, தப்பு பண்ணா சாமி கண்ண குத்திடும்னு சின்ன வயசுல சொல்லுவாங்க. இப்பல்லாம், தப்பு பண்றவன் தான் இங்க செமையா வாழுறான். கெட்டவனுக்குத்தான் இங்க மரியாதை. அப்போ தப்பு பண்ணா தண்டனையே கிடையாதா என்ற முரணான கேள்விக்கான விடையா நிச்சயம் “குற்றமே தண்டனை” இருக்கும்.”

“இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல்?”

“இளையராஜா... பாடல் கிடையாது.  பின்னணி இசையை இளையராஜாவை விட வேறு யாராலயும் பெஸ்டா பண்ணமுடியாது. பாட்டு, சண்டை, காமெடினு எதுவும் இல்லாத இந்தப் படத்துல இவரோட பின்னணி இசைதான் படத்திற்கு பலம். மற்றொன்று, மணிகண்டனோட விஷூவல் ட்ரீட். வழக்கமான த்ரில்லர் படத்திற்கான எந்த அடைமொழியும் இல்லாம, எமோஷனலா உறையவைக்கும். இன்னொண்ணு சொல்லணும்..  இடையில் இளையராஜா உடல்நிலை சரியில்லாம மருத்துவமனையில இருந்து வீடு திரும்பும்போது, வீட்டுக்குப் போகாம நேரா ஸ்டூடியோவிற்குத் தான் வந்தார். மொத்த டீமுக்குமே அவ்வளவு ஆச்சர்யம்.” 

“காக்காமுட்டைக்குப் பிறகு, மணிகண்டனின் அடுத்தப் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமா வாய்ப்பு எப்படி அமைஞ்சது?” 

“நல்லப்படம்னா தயாரிக்கலாம்னு ஐடியாவில் இருந்தேன். அந்த நேரம் அறிமுகமானவர் தான் மணிகண்டன். அவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த “விண்ட்” குறும்படம் பார்த்ததுமே நாங்க படம் பண்ணுறது உறுதியாகிடுச்சி. அதுக்கு நடுவே காக்காமுட்டை படத்தை முடிச்சிட்டாரு மணிகண்டன். அடுத்ததா இந்தப் படத்தையும் தொடங்கி முடிச்சிட்டோம்.” 

கிராமம், சிட்டினு சப்ஜெக்ட்னு மாற்றி மாற்றி நடிக்கிறீங்க! உங்களுக்கான தனித்துவ நடிப்பை இன்னும் நிரூபிக்கலையே?  

“எனக்கான விருப்பம் நல்ல கதையில் மட்டும் தான். நடிகனா, இந்த கேரக்டர் மட்டும் தான் பண்ணுவான்னு தேங்கிவிடக்கூடாது. என் திறமைக்கு மீறிய ரோல் என்றால் கூட, அதிலிருந்தும் கத்துக்கணும்னு தான் பார்ப்பேன்.”

“குரங்குபொம்மை படத்தில் உங்களுக்கு அப்பாவா..”

(முடிக்கும் முன் சொல்கிறார்) “ஆமா. பாரதிராஜா சார் நடிக்கறார். எல்லோருக்குமே பாரதிராஜா படத்தில் நடிக்கமாட்டோமானு ஆசை இருக்கும். நான் அவர்கூடவே நடிக்கிறேன். ஷூட்டிங் நேரத்துல, 16வயதினிலே தொடங்கி, இப்போவரைக்கும் அவரோட  படங்கள் பற்றி சொல்றது சுவாரஸ்யமா இருக்கும். நடிகனுக்கு என்ன தேவை, ஷூட்டிங்கிற்கு நேரம் தவறாம வரது எவ்வளவு முக்கியம்னு, சினிமாவை கற்றுக்கொடுத்தவர் பாரதிராஜா. “ இயக்குநரோட அறிவுல மட்டும் படம் உருவானா போதும், உன் அறிவையும் அதுல திணிக்கூடாது”னு சொல்லுவார். குரங்குபொம்மை படம் பார்த்துட்டு, எதார்த்தமா நடிக்கிறனு லெஜண்ட் கையல பாராட்டுவாங்குறது, விருது கிடைச்சதுக்கு சமம் தான். அதுமட்டுமில்லாம, குரங்கு பொம்மை படத்துல, மூணு நிமிஷம் ஒரே ஷாட்டுல பாரதிராஜா சார் நடிப்புல பிச்சி உதறிருப்பாரு. அந்த சீன், மொத்தப் படத்தையும் உலுக்கி எடுத்துடும். அந்த காட்சிக்கு, இவர் எப்படி டப்பிங் பேசப்போறாருனு பார்க்கக் காத்துக்கிட்டு இருக்கேன்.”

“மின்னலே படத்தில் சின்ன காட்சியில் தொடங்கி, இன்று வரை நடிகரா உங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டதா?”

“ஹீரோவாக வேண்டும் என்பது என் நோக்கமில்லை. நல்ல நடிகனாக இருக்கணும், அவ்வளவு தான். சில படங்கள் எனக்குத் தோல்வியானாலும், அதை வெற்றியாதான் பார்க்குறேன். லட்சியம்னு எதுவும் கிடையாது. ஆனா சாகுறவரைக்கும் நடிச்சிட்டே இருப்பேன். இன்றைக்கு சிறந்த நடிகரும், இயக்குநரும் யாரென்று பார்த்தால், அது ஆடியன்ஸ் தான். மீம்ஸ், டப்மேஷ்னு ஆடியன்ஸூக்குள்ள அவ்வளவு திறமை இருக்கு. ஆடியன்ஸை ரசிக்க வைக்கணும்னா நாம எவ்வளவு அட்வான்ஸா யோசிக்கணும்னு அதெல்லாம் பார்த்தா தோணும்.  என் இருப்பை தக்கவைத்துக்க என்னமுடியுமோ அதற்கான தகுதியை வளர்த்துக்கொண்டாலே போதுமானது.” 

“மைனா, குற்றமோ தண்டனை என்று சிறந்த இயக்குநர்களோட, தேர்வா நீங்க இருக்கீங்க. ஆனாலும் பெரிசா பேசப்படலைங்கற வருத்தம் இருக்கா?”

“என்னுடைய சினிமா வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் தொடங்கியவன். மைனா படத்தோட வெற்றி, இயக்குநருக்கானது. நான் அந்த படத்துல நடிச்சதுனால அந்த வெற்றி எனக்கு கிடைத்தது. இதுநாள் வரையும் எனக்கு வந்த படங்களில் அர்ப்பணிப்போட நடிச்சிருக்கேன். இனி வரப்போற படங்களில் எது வெற்றி, எது தோல்வி என்பதும் எனக்குத் தெரியாது. கண்டிப்பா வித்தியாசமான ரோல்களில் நடிப்பேன், அதற்கான நேரத்தையும் நான் எடுத்துப்பேன். இந்த வருடம் மட்டும் ஐந்து படங்கள் ரிலீஸாகபோகுது.”

“கல்யாண வாழ்க்கை எப்படி போகுது? 

“காயத்ரி அதிகமா படம் பார்ப்பாங்க. கல்யாணத்திற்குப் பிறகு நான் தேர்ந்தெடுக்குற படங்கள்ல அவங்களோட அறிவுரையும் இருக்கு. நான் நடிக்கிற படங்களுக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. நிறைய படங்கள் என்னைப் பார்க்கசொல்லிட்டே இருப்பாங்க.”

“ஆள் படத்துல உங்க நடிப்பு பேசப்பட்டாலும், படம் சரியா போகலையே!”

“வெற்றியை விட தோல்விகள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். தோல்விகள் இருக்கும்போது தான் சரியான வெற்றி நமக்குக் கிடைக்கும். தோல்வியோட வலி என்னை எப்போதுமே தூங்கவிடாது. குற்றமே தண்டனையோட வெற்றிபெற போவதற்கும், தோல்வியான சில படங்களும் தான் காரணம். ஆள் படத்தோட தோல்வி தான், அந்த இயக்குநருக்கு “மெட்ரோ” படம் வெற்றியா அமைஞ்சிருக்கு.”

“வீரம் படத்திற்குப் பிறகு அஜித்தை சந்தித்தீர்களா?”

“நான் கஷ்டத்துலயும், தோல்வியிலும் இருக்கும்போது, எப்படித்தான் அவருக்குத் தெரியுமோ...  எனக்கு போன் பண்ணிடுவார். இரண்டு நிமிஷம் தான் பேசுனாலும், அவ்வளவு ஆறுதலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். பாசிட்டிவ் எனர்ஜி அப்பப்போ குடுப்பார். அஜித்திற்கு ரசிகனாக இருந்தேன். வீரம் படம் மூலமாக நல்ல அண்ணன் கிடைச்சிருக்காருனு தான் நினைக்கிறேன்.”

“உங்ககூட அந்தப் படத்துல நடிச்ச அப்புக்குட்டியும் அஜித்தோட க்ளோஸ் இல்லையா?” 

’ஆமா. அப்புக்குட்டி ரொம்ப நல்ல பையன். அவனை போட்டோ எடுக்குறாரு, அவரோட படத்துல நடிக்க வைக்கிறாருனு வருத்தப்பட இங்க ஒண்ணுமில்லை. அஜித் சார் எனக்கு மட்டும்தான்னு யாரும் கொண்டாட முடியாது. அவர் எல்லோருக்குமானவர். அப்புகுட்டிக்கு நிறைய விஷயங்கள் அஜித் உதவும்போது, எனக்கு ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாகவும் தான் இருக்கு. அஜித் சார் அடிக்கடி சொல்ற விஷயம், “உன் குடும்பத்தை நேசி, அப்புறம் இந்த உலகத்தை நேசி. குடும்பம் சரியாக இருந்தாலே இந்த உலகம் சரியா இருக்கும். அதுமட்டுமில்லாம, உன்னால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்” இது தான் அஜித்!” 

- பி.எஸ்.முத்து

அடுத்த கட்டுரைக்கு