Published:Updated:

ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள்! - ‘குற்றமே தண்டனை’ விமர்சனம்

ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள்! - ‘குற்றமே தண்டனை’ விமர்சனம்
ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள்! - ‘குற்றமே தண்டனை’ விமர்சனம்

ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள்! - ‘குற்றமே தண்டனை’ விமர்சனம்

மணிகண்டன், காக்காமுட்டை மணிகண்டன் ஆவதற்கு முன் ஒப்புக்கொண்டு, 2014ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு, இன்று வெளியாகியிருக்கும் படம் குற்றமே தண்டனை. 

க்ரெடிட் கார்ட் கடன்களை வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விதார்த். அதே நிறுவனத்தில் பணிபுரிபவர் பூஜா தேவாரியா. விதார்த் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின், எதிர்ப்புற வீட்டில் குடியிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷின் பாஸ் ரகுமான். 

ஒரு குற்றம் நடைபெறுகிறது. இவர்களைச் சுற்றி நடக்கிற அந்தக் குற்றத்தின் காரணி யார், அவர்கள் பிடிப்பட்டார்களா, அவர்களுக்கான தண்டனை என்ன என்பதை மெலோ ட்ராமாவாக கொண்டுபோயிருக்கிற படம்தான் குற்றமே தண்டனை.
ஆரம்பக்காட்சியில் விதார்த் பார்ப்பதெல்லாமே ஒரு குழாயின் வழியாகப் பார்ப்பதாகக் காட்டுகிறார்கள். அது ஏன் என்கிற முடிச்சையே மெதுவாகத்தான் அவிழ்க்கிறார்கள். எதையும் நேராக மட்டுமே பார்க்க முடிகிற ‘டன்னல் விஷன்’ குறைபாடு உள்ளவர் விதார்த். ஒரு குழாய் வழியாகப் பார்ப்பதுபோல, குறிப்பிட்ட விட்டம் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரியும். அதற்கு அறுவை சிகிச்சைக்கு பெரிய தொகை தேவைப்படுகிற நேரத்தில், நடைபெறுகிற அந்தக் குற்றத்தை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் விதார்த். அதனால் சில பின்விளைவுகளையும் எதிர்கொண்டு சமாளிக்கிறார்.

விதார்த் நடிப்பு குட். நேர்பார்வையில் மட்டுமே பார்க்கமுடிகிறது என்பதற்கான சின்ன சின்ன நுணுக்கமான நடிப்பை நேர்த்தியாக தந்திருக்கிறார் விதார்த். சில காட்சிகள் மட்டுமே என்றாலும் பார்வையிலேயே ஸ்கோர் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், விதார்த்தின் மனசாட்சி கேட்கும் கேள்வியாக உருவாகியிருக்கும் நாசரின் கதாபாத்திரம் மற்றும் குற்றத்தில் சிக்கி தவிக்கும் ரகுமானின் எக்ஸ்ப்ரஷன் என்று அனைவருமே நடிப்பில் நேர்த்தி. இறைவியில் மார்டன் பெண்ணாக வந்த பூஜா, அப்படியே நேரெதிரான நடிப்பில் கச்சிதம்.

எல்லாம் சரி. படம் எதைப் பேசுகிறது? ரசிகன் எதை நோக்கிப் பயணிக்கவேண்டும்? விதார்த்தின் குறைபாடுக்காக வருத்தப்பட்டு அதை நோக்கிய பார்வையில் படத்தை அணுகவேண்டுமா.. அல்லது நடந்த குற்றத்தை ‘க்ரைம் சீனை’ ஒட்டிப் படத்தை அணுகவேண்டுமா? இந்தக் குறையை படம் முழுவதுமே அலைபாயவிடுகிறது திரைக்கதை.

காட்சிகளாக எடுத்துக்கொண்டால் ரசிக்கவைக்க முயற்சித்திருக்கிறார் மணிகண்டன். நாசர் - விதார்த் காட்சிகள். அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள்.  'எது தேவையோ அதுவே தர்மம்னு நீங்கதானே சொன்னீங்க’ எனும்போது நாசர் சொல்லும் நறுக் வசனம். ‘ஏன் முழுசா கட்ட மாட்டீங்கறீங்க?’ என விதார்த் கேட்க, ‘என்னைப் பார்க்க வர்றதே நீதான். அப்பதான் அடுத்த மாசமும் வருவ’ எனும் நாசர் ஒரு கட்டத்தில் இனி வராதே என்கிறார். பணம், தேவைகள் என்று மாறிய விதார்த்தை அவர் கண்டுகொண்டதாக அந்தக் காட்சியை எடுத்துக் கொள்ளலாம். 

அதைப்போலவே விதார்த் - பூஜா சம்பந்தப்பட்ட காட்சிகளும். மெலிதான் இழையாக இருவருக்குமான (உண்மையில் பூஜாவுக்கு மட்டும்தான் விதார்த்தின் மீது ஈர்ப்பு!) உறவைக் காட்டிக் கொண்டே இருக்கிறது பூஜாவின் கண்கள். கதாபாத்திரத்தேர்வில் மணிகண்டன் சபாஷ் பெறுகிறார்.

 க்ரைம் ஜானராக படத்தை எடுத்துக் கொண்டால், கன்னாபின்னா லாஜிக் குறைபாடுகள்.  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட அந்த ஃபோனை, இந்த நவீன யுகத்தில் கண்டுபிடிக்க வழியா இல்லை? விதார்த்தை, ரகுமானை எல்லாம் விசாரிக்கும் போலீஸ் அவர்களுக்குள் நடக்கும் பணப்பரிவர்த்தனையை ஜஸ்ட் லைக் தட் விட்டுவிடுமா என்ன? அதுவும் லட்சங்களில்! குற்றவாளியாக்கப்பட்ட அருண், பேரம்பேசுவதுகூட போலீஸுக்கு தெரியாதா? ஒரு குற்றத்திற்காக போலீஸாரின் விசாரணையில் நேர்த்தியின்மையில்லாத திரைக்கதையாகவே படம் நகர்வது மிகப்பெரிய குறை.  

படத்தின் இரண்டு ப்ளஸ் இசையும், ஒளிப்பதிவும். பாடல்கள் இல்லை. டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான பின்னணி இசையில் படத்துடன் நம்மை இணைக்கிறார் இளையராஜா. க்ரைம் சீன், விதார்த்தின் எண்ணங்கள் அலைபாய்வது, ரகுமானின் குழப்பங்கள் என்று ஒவ்வொன்றையும் இசையில் கடத்துகிறார். அவரது பெஸ்ட் இல்லையென்றாலும், படத்தின் பெரிய பலமாய் இசை இருக்கிறது.

ஒளிப்பதிவாளராக மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை ஒவ்வொரு ஃப்ரேமும் க்ளாஸ்!

அடுத்த கட்டுரைக்கு