Published:Updated:

'என் மகளுக்கு என்னை விட ஸ்வீட் வாய்ஸ்!’ - சிம்ரன், ஜோதிகா குரல் புகழ் சவீதா

'என் மகளுக்கு என்னை விட  ஸ்வீட் வாய்ஸ்!’ -  சிம்ரன், ஜோதிகா குரல் புகழ் சவீதா
'என் மகளுக்கு என்னை விட ஸ்வீட் வாய்ஸ்!’ - சிம்ரன், ஜோதிகா குரல் புகழ் சவீதா

பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த 'ஜோடி' படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்திற்கு உயிராக இருந்தது பாடல்கள் என்றால் மூச்சாக இருந்தது சிம்ரனுக்குக் கொடுத்த  வாய்ஸ் என்று சொல்லலாம். அந்த படத்திற்கு டப்பிங் கொடுத்தவர் இவர் தான். 'மந்திரப்புன்னகை' படத்திலிருந்து தன்னுடைய குழந்தை நட்சத்திர டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பயணத்தை தொடங்கி, 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'குஷி', 'பஞ்சத்தந்திரம்', 'தூள்', 'சில்லுனு ஒரு காதல்', 'சந்திரமுகி', 'தெய்வ திருமகள்',' வேலையில்லா பட்டதாரி' '36 வயதினிலே', 'ரோமியோ ஜூலியட்'.. ஸ்ஸ்ஸ்ப்பா மூச்சு வாங்குதுல...?  இப்பவும் பல படங்களை தன்னுடைய கையில் வைத்திருக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதாவுக்கு  நாட்டியம், ஓவியம் என  அனைத்தும் அத்துப்படி. தன்னுடைய  வாய்ப்பைப் பற்றி கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்,

'நான் மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது தான் சினிமாவுக்கான முதல் அறிமுகம் கிடைச்சது. கர்நாடக பாடகியான என்னுடைய பாட்டி பி.எஸ், பத்மாவதி அவங்க  படத்துக்கு டப்பிங் கொடுப்பதற்காக ஒரு ஸ்டூடியோவுக்குப் போனாங்க. என்னையும் அவங்ககூட அழைச்சுட்டுப் போனாங்க. அங்க தான் என்னோட வாய்ஸ் அவங்களுக்குப் பிடிச்சுப் போயிடுச்சு. அப்படித்தான் 'மந்திரப்புன்னகை' படத்துக்கு குழந்தை நட்சத்திர வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கிடைச்சது'. 

'அதற்குப்பிறகு,  'காதல் பரிசு'  படத்துலயும் குழந்தை நட்சத்திர வாய்ஸ்க்கான வாய்ப்பு கிடைச்சது.  மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி அவார்டு, மூன்று தமிழ்நாடு அரசு விருதுனு நிறைய வாங்கியிருக்கேன். சந்திரமுகி, பிரியமானவளே இப்படி பல படங்கள் என்னால மறக்க முடியாதப் படங்கள்த. பல தடவைப் பார்த்த படங்களில்  'சந்தோஷ் சுப்ரமணியம்' மற்றும் மணிரத்தினம் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாப், குஜராத்தி போன்ற பிற மொழி டாக்குமெண்ட் படங்களிலும் பேசியிருக்கேன். ஒவ்வொரு  ஊர் லாங்குவேஜையும் வாய்சில் கொண்டுவர மெனக்கெடனும்.

'அண்ணாமலை யுனிவர்சிடியில எம்.பி.ஏ முடிச்சிட்டு, முழுக்க முழுக்க டப்பிங்கில் இறங்கிட்டேன்.  என்னோட முதல் படம் சங்கர் சாரோட 'ஜீன்ஸ்'. ஐஸ்வர்யாராஜ்க்கு டப்பிங் பேசி நான் பெரிய அளவுல  பாப்புலர் ஆனதும் இந்த படத்துலதான்.  'வாலி' படம் மூலமா சிம்ரனுக்கு வாய்ஸ் கொடுத்து பல பேரோட பாராட்டை வாங்கினேன். 'ஜீன்ஸ்', 'வாலி' படம் பண்ணும்போது கல்லூரி படிச்சிட்டு இருந்தேன்.

 ''பிதாமகன்'' படத்தில் இலங்கை மட்டைக்கலப்பை பாஷையை பேசியிருந்தேன். அதுதான் நான் பேசின பாஷலயே கஷ்டம்னு நினைக்கிறேன்.  இதுக்கென ஒரு மொழி டிரெயினரை வச்சிருந்தாங்க.  பொதுவா, ஷூட்டிங்கில் ஹீரோயின் சாதாரண தமிழில்தான் பேசியிருப்பாங்க. அந்த லிப் மூவ்மெண்ட்டுக்குத் தகுந்தமாதிரி அவங்க பேசி முடிக்கிற அந்த நேரத்துக்குள்ள வார்த்தைய பேசி முடிச்சாகணும். இதுக்கு டிரெயினிங் எடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பேன். ' டும் டும் டும்' , 'அழகி','பிதாமகன்'  போன்ற பல படங்கள்ள வேறு ஸ்லாங்கில்  பேசியிருக்கேன். அதெல்லாம் ஒரு நல்ல அனுபவம்.'' என்றவர்,

'என் கணவர் என்னை, 'நீ வீட்ல புலி வெளியில எலி என கிண்டலடிப்பார். வீட்ல அவ்வளவு ஜாலியா இருப்பேன். என்னோட பொண்ணு ஶ்ரீங்கா சைவம் படத்துல சாரா பாப்பாவுக்கு வாய்ஸ் கொடுத்திருக்காங்க. என்னைவிட அவங்க வாய்ஸ் இன்னும் ஸ்வீட். அடுத்தடுத்து அவங்களுக்கும் வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் படிப்பில் மட்டும் நோ காம்ப்ரமைஸ்' என்கிறார் கண்டிப்பான அம்மாவாக. 

- வே.கிருஷ்ணவேணி