Published:Updated:

தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்!

தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்!
தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்!

தமிழ் சினிமாவில் 'ஜோடி ராசி' நிறையவே உண்டு. 'இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா படம் அதிரிபுதிரி ஹிட்' என பட பூஜையின்போதே ரிசல்ட்டைச் சொல்லிவிடுவார்கள். அந்த ஜோடி ஹீரோ, ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இயக்குநர்- நடிகர் காம்போக்களும் பட்டையைக் கிளப்பியிருக்கின்றன. இதில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் கூட பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்து வயிற்றுவலி உண்டாக்க சில ஜோடிகளால் மட்டுமே முடியும். அப்படி காமெடி ஏரியாவில் சலங்கை கட்டி கதகளி ஆடிய இயக்குநர் - நடிகர் காம்பினேஷன்கள் இவை. 

கார்த்திக் - சுந்தர்.சி:

காமெடி கிரவுண்டில் சுந்தர்.சி ஆல்டைம் ஆல்ரவுண்டர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி என மூன்று தலைமுறை காமெடியன்களோடும் கலந்துகட்டி கல்லா நிரப்புகிறவர். இவருக்கு ஹிட் ஜோடி நவரச நாயகன் கார்த்திக்தான். 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'அழகான நாட்கள்' என ஜோடி சேர்ந்த அத்தனைப் படங்களிலும் கலகலப்பு கியாரன்டி. தமிழ் சினிமா ரசிகனின் பார்க்கச் சலிக்காத படங்கள் லிஸ்ட்டில் இன்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' இருக்கும். கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர். சி = வயிறு வலி + வாய் வலி உறுதி.

கமல் - சிங்கிதம் சீனிவாச ராவ்:

பாலச்சந்தர், கமலின் க்ளாஸிக் முகத்தைக் காட்டினார் என்றால் கமலின் காமெடி முகத்தை சீரியல் லைட் போட்டுக் காட்டினார் சிங்கிதம். வாய் உதார்விட்டு மாட்டும் 'அபூர்வ சகோதரர்கள்' ராஜாவாகட்டும், வார்த்தை ஜாலத்தில் சிரிக்க வைக்கும் 'காதலா காதலா' ராமலிங்கமாகட்டும் - கமல் வெரைட்டி காட்டிப் பொளந்து கட்டினார். அதிலும் 'மைக்கேல் மதன காமராஜன்' எல்லாம் தெறித்தனத்தின் உச்சம். வெளியானபோது ரீச் ஆகாவிட்டாலும், இப்போது பார்த்தாலும் சிரிப்பை அள்ளித் தருகிறது இந்த ஜோடியின் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. கலாய் கஸின்ஸ்!

ரஜினி - எஸ்.பி முத்துராமன்:

ஒருபக்கம் பாலசந்தரும், மகேந்திரனும் ரஜினியை கலைஞனாக முன்னிறுத்த, மறுபக்கம் தொடர்ச்சியான ஹிட்கள் கொடுத்து அவரை கமர்ஷியல் சூப்பர்ஸ்டாராக்கினார் எஸ்.பி முத்துராமன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் 'பைசா வசூல்' ஜோடி இது. ரஜினி படங்களில் ஆக்‌ஷன்தான் தூக்கலாக இருக்கும். அதைத் தாண்டி, 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்', 'ராஜா சின்ன ரோஜா', 'அதிசயப் பிறவி' போன்ற படங்களில் காமெடி அவதாரமெடுத்து கலக்கினார் ரஜினி. எல்லாப் புகழும் முத்துராமனுக்கே. கமர்ஷியல் கில்லிகள்!

சத்யராஜ் - மணிவண்ணன்:

இந்த லிஸ்ட்டில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலேயே தி பெஸ்ட் கூட்டணி இதுதான். மணி இயக்கத்தில் சத்யராஜ் காமெடியாக நடித்தது 'அமைதிப்படை', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'நாகராஜ சோழன்' என மூன்று படங்களில்தான். ஆனால் நடிகர்களாக எக்கச்சக்க படங்களில் பொளந்துகட்டினார்கள். கூடவே கவுண்டமணியும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம். அரசியல், சினிமா, அதிகார வர்க்கம் என எல்லாரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துத் தள்ளுவார்கள். இந்த அஞ்சாநெஞ்சக் கூட்டணிதான் சினிமா ரசிகனின் ஆல்டைம் ஃபேவரைட். மணிவண்ணன் + சத்யராஜ் + கவுண்டமணி = க்ளாஸிக். மிஸ் யூ மணி சார்!

தனுஷ் - மித்ரன் ஜவஹர்:

இளம் தலைமுறையில் காமெடி, ஆக்‌ஷன், யதார்த்தம் என சகலமும் வருவது தனுஷுக்குத்தான். செல்வராகவன், வெற்றிமாறன் என தனுஷின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருந்தாலும், தனுஷைக் குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்ததில் முக்கியப் பங்கு மித்ரன் ஜவஹருக்கு உண்டு. 'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்' என முறைப்பும் விறைப்புமாக இருந்த தனுஷுக்கு அளவில்லாத ஃபேமிலி ஆடியன்ஸைப் பெற்றுத்தந்தது 'யாரடி நீ மோகினி' படம்தான். அதன்பின் 'குட்டி', 'உத்தமபுத்திரன்' என தனுஷின் காமிக்கல் சென்ஸைக் கச்சிதமாக கேமிராவில் அடைத்தார் மித்ரன். சீக்கிரம் திரும்ப சேருங்க ப்ரோ!

இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் பார்க்கலாம்

சிவகார்த்திகேயன் - பொன்ராம்:

பொக்கை வாய் சீனியர்கள் தொடங்கி ஜென் இஸட் தலைமுறைவரை வயது வித்தியாசமில்லாமல் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஃப்ரேம் நிறைய நடிகர்கள், கிராமத்து வாடை, ஸீனுக்கு ஸீன் நக்கல் என இவர்கள் பிடித்திருப்பது சூப்பர்ஹிட் ஃபார்முலா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்வீப்பில் சிக்ஸர் அடித்த இந்தக் கூட்டணி ரஜினிமுருகனில் வெளுத்தது ஹெலிகாப்டர் சிக்ஸ். சீக்கிரமே அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங்!

- நித்திஷ்