Published:Updated:

ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் !

ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் !
ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் !

ஆஸ்கர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இவருக்குத் தான் என்ற ஹாலிவுட் கணிப்பில் முன்னணியில் இருப்பது " கறுப்புச் சிங்கம் " டென்சல் வாஷிங்டன் ( Denzel Washington) .  இவர் நடித்து இயக்கியிருக்கும் " ஃபென்சஸ் " ( Fences ) படத்தின் சிறப்புக் காட்சியை, சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். இதில் டென்சலுடன் நடித்திருக்கும் வயோலா டேவிஸ் ( Viola Davis ) யின் நடிப்பும் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது

அதே சமயத்தில் ஆஸ்கரின் நிற, இன அரசியலைத் தாண்டி  இந்த வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியும் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் எழுந்துள்ளது . இதை இன்னும் புரிந்து கொள்ள ஒரு சின்ன " டைம் டிராவல்" தேவைப்படுகிறது. கறுப்பு - வெள்ளை காலத்தின் ஒரு கறுப்பு வரலாறு இது ... 

 வெள்ளையர்களால் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்த கறுப்பின மக்களுக்கு, கலை, சினிமா, நடிப்பு என்பதையெல்லாம் சிந்திக்கும் திராணி கூட இல்லாத ஓர் காலகட்டம் . அந்தக் காலங்களின் மேடை நாடகங்களில், வெள்ளையர்களே முகத்தில் கறுப்பு பெயின்ட் அடித்துக் கொண்டு கருப்பர்கள் போல் நடிப்பார்கள் . " பிளாக் ஃபேசஸ் " ( Black Faces ) என்ற அந்த கதாபாத்திரங்கள், இனவெறி மிகுந்த நகைச்சுவைக்காகவே பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது அமோஸ் அன் ஆன்டி ( Amos An Andy ) என்கிற ஒரு நாடகம், தொலைக்காட்சி தொடராக எடுக்கப்பட்டது. அதில் தான் உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக க்ளாரன்ஸ் மியூஸ் ( Clarence Muse ) என்ற கறுப்பின நடிகர் நடித்தார்.  அதுவும் கறுப்பர்களைக் கேவலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் தான். " பரவாயில்லை. குறைந்தபட்சம் ஒரு உண்மையான கறுப்புத் தோல் வெளிச்சத்துக்கு வந்ததே " என்று, இதில் நடித்த அனுபவத்தை மியூஸ் விவரித்தார். ஹாலிவுட்டில் கறுப்பின மக்களின் தொடக்கம் இது தான். 

1939ல் " கான் வித் தி விண்ட் " படத்தில் நடித்த ஹேட்டி மெக்டேனியல் ( Hattie McDaniel ) என்ற கறுப்பின நடிகை முதன்முதலாக, சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார். 1964ல் சிட்னி பாய்ட்டியர் ( Sidney Poitier ) என்ற கறுப்பின நடிகர், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். மேலும், டென்சல் வாஷிங்டன்  - 2002, ஜேம்மி ஃபாக்ஸ் ( Jammie Fox ) - 2005, ஃபாரஸ்ட் விட்டேகர் ( Forest Whitaker ) - 2006 ஆகிய கருப்பின நடிகர்கள், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளனர்.  2002யில் மான்ஸ்டர்'ஸ் பால் ( Monster's Ball ) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் ஹாலேபெர்ரி ( Halle Berry ). இது நாள் வரை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஒரே கறுப்பின பெண் ஹாலேபெர்ரி மட்டும் தான். 

மொத்த அமெரிக்க மக்கள் தொகையில், 12.6 % கருப்பினத்தவர்கள் தான். ஆஸ்கர் விருதிற்கான தேர்வுக் குழுவில் 6,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 94% வெள்ளையர்கள். 88 வருட ஆஸ்கர் வரலாற்றில், 14 விருதுகளை மட்டுமே இதுவரை கறுப்பினத்தவர்கள் நடிப்பிற்காக வென்றுள்ளனர். அதிலும், பெரும்பாலான விருதுகள் துணை நடிகைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. அந்த விருதுகளை வென்ற கதாபாத்திரங்கள் வெள்ளையர்களிடம் அடிமையாக அல்லது பணியாளாக இருக்கும் கருப்பினத்தவர்களாக இருக்கிறது என்று ஆஸ்கரின் நுண் அரசியலை பலரும் விமர்சிக்கிறார்கள். 

இதுவரைக்குமான ஆஸ்கர் விருதுகளில் வெற்றி பெற்ற ஒரே கறுப்பின படம் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் ( 12 Years A Slave ) மட்டுமே. அதுவும் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஆஸ்கரின் முக்கிய நான்கு பிரிவுகளின் கீழ் எந்தவொரு கருப்பினத்தவருமே பரிந்துரைக்கப்படவில்லை. இதை எதிர்த்து, வில் ஸ்மித் உட்பட ஹாலிவுட்டின் பெரும்பாலான கருப்பின நட்சத்திரங்கள் ஆஸ்கர் விழாவைப் புறக்கணித்தனர். 

ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குவது, ஆஸ்கர் மேடையில் நடனம் புரிவது போன்ற வாய்ப்புகள் கருப்பினத்தவர்களுக்கு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, ஆஸ்கரில் நிற, இன வேற்றுமைகள் இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் சிலர். 


உலக சினிமாவின் உன்னத கலைஞர்களில் ஒருவர் டென்சில் வாஷிங்டன். இவர் ஏற்கனவே, 1989யில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மற்றும் 2002யில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார். தற்போது ஃபென்சஸ் படத்திற்கும் விருதினை வென்றால், மூன்று முறை ஆஸ்கர் வென்ற கருப்பின நடிகர் என்ற வரலாற்றை எழுதுவார் டென்சில் . 

கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபராக இருந்த போதே கிடைக்காத அங்கீகாரங்கள், சர்வதேச வியாபாரி டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போதா கிடைத்துவிடப் போகிறது என்ற குரல்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் கேட்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் ஆஸ்கர் அரசியலின் " இறுதிச்சுற்று " பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது... 

" உனக்கு இன்னா வேணும் மாஸ்டர்..??"...

" நாக் அவுட்" !!!

- இரா. கலைச் செல்வன்.