Published:Updated:

கொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம்! ஒரே முகம் படம் எப்படி?

கொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம்! ஒரே முகம் படம் எப்படி?
கொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம்! ஒரே முகம் படம் எப்படி?

கொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம்! ஒரே முகம் படம் எப்படி?

ஒரு கொலை, அதோடு தொடர்பு கொண்ட முந்தைய கொலை, தேடப்படும் ஒருவன், ஃப்ளாஷ் பேக் என அதே டிபிகல் மலையாள த்ரில்லர் சினிமா...

படத்தின் ஆரம்பத்தில் அரவிந்தன் என்பவர் கொல்லப்படுகிறார். அவரை கொன்றது யாராக இருக்கும் என விசாரிக்கும் போது, அரவிந்தன் கல்லூரி நண்பர்களான தேவன், காயத்ரி 20 வருடம் முன்பு கொல்லப்பட்டது போலீஸுக்குத் தெரிய வருகிறது. அந்த கொலையை செய்த சக்ரியா போத்தன், அதன் பின் தலைமறைவாகிவிட்டார் என காவல்துறையின் தகவல்கள் சொல்கிறது. இந்தக் கொலையையும் அவர் தான் செய்திருப்பார் என்று சந்தேகிக்கும் போலீஸ் விசாரணையைத் துவங்குகிறது. இதே கொலை பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவரும் விசாரிக்க இரண்டு ட்ராக்கில் சக்ரியா போத்தனின் ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. சக்ரியா போத்தன் என்ன ஆனார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்கிற கேள்விகளுக்கான விடைகளுடன் முடிகிறது படம்.

ஃப்ளாஷ் பேக்... சித்தூர், செயின்ட் தாமஸ் கல்லூரியில் சீனியர்கள் சர்காரியா போத்தன் (தயான் ஸ்ரீனிவாசன்), தாஸ் (அஜு வர்கீஸ்), பிரகாசன் (தீபக் பரம்போல்), அரவிந்தன் (அர்ஜுன் நந்தகுமார்), தேவன் (ஜூபி நினான்) ஐவரும் நண்பர்கள். காலேஜில் ஹீரோ, ரௌடி இரண்டுமான தயானை அவன் நண்பர்கள் மற்றும் புரொஃபசர் லதா (அபிராமி) தவிர யாருக்கும் பிடிக்காது. காரணம் ரேகிங் துவங்கி பல சண்டைகள், பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது தயான் தான். ஜூனியர்கள் பாமா (பிரயாகா மார்டீன்), காயத்ரி (காயத்ரி சுரேஷ்) இருவருக்கும் தயானை வெறுக்க இன்னும் ஒரு காரணம் இருந்தது. பெண்கள் விஷயத்தி தயான் மிக மோசமானவன், தான் நினைத்த பெண்ணை அடையாமல் விடமாட்டான் என்ற தகவல் தான் அந்தக் காரணம். இந்த நிலையில் தான் காதலிக்கும் காயத்ரியிடம் தவறாக நடந்து கொள்ளும் தயானை, எல்லோர் முன்பும் அடிக்கிறான் ஜூபி. அந்தப் பிரச்சனையால் இந்தக் காதல் விவகாரம் காயத்ரியின் வீட்டிற்குத் தெரிந்து விடுகிறது. அப்போது தயானின் உதவியுடன் தான் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்று இரவு தயான், ஜூபியைக் கொன்று, காயத்ரியை கட்டாயப்படுத்தி உறவு  வைத்து அவளையும் கொன்று தலைமறைவாகிறான். இந்த விஷயங்கள் போலீஸ் மற்றும் பத்திரிகையாளர் இருவரது விசாரணையின் மூலம் தெரிய வருகிறது. இப்படி செல்லும் கதையில் பாதிக்குப் பிறகு உண்மையில் நடந்தது என்ன என வேறு திருப்பங்கள் வருகிறது. ஆனால் அவை ஏற்றுக் கொள்ளும் படி இல்லை என்பது தான் வருத்தம்.

முதன்மைக் கதாப்பாத்திரமான தயான் தன்னால் முடிந்த வரை சர்காரியா போத்தனாய் முரட்டுத் தனம் காட்டுகிறார். அதைவிட காதல் வந்த பின் மென்மையாக நடந்து கொள்வதில் தான் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். அஜு வர்கீஸ் இருந்தாலும் காமெடி காட்சிகள் மிகக் குறைவு. இருக்கும் காமெடிகளும், 'கல்யாணம்ங்கறது கார்ப்ரேஷன் டாய்லெட் மாதிரி, வெளிய இருக்கவனுக்கு எப்ப உள்ள போவோம்னு இருக்கும். உள்ள இருக்கவனுக்கு எப்ப வெளிய போவோம்னு தோணும்', 'இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது' என ஏற்கெனவே கேட்ட வசனங்கள் தான். பிரயாகா மார்டீன், காயத்ரி இருவருக்கும் நடிக்க பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. நிகழ்கால பாமாவாக வரும் சினேகா சில நிமிடங்களே வந்தாலும் கவனம் கவர்கிறார். 

ஒவ்வொரு ஆளாக விசாரிக்கும் பொழுது ,புதுப்புது விஷயங்கள் தெரிய வருவதாக நகரும் கதை, நிகழ்காலம் + ஃப்ளாஷ்பேக் என நான் லீனியராக பயணிக்கும் திரைக்கதையை பயன்படுத்தியிருக்கும் விதத்தால் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் சஜித் ஜெகத்நந்தன். ஆனால், த்ரில்லருக்கு ஏற்ற சுவாரஸ்யமான களமாக இருந்தும், விறுவிறுப்பில்லாத கதை நகர்வு சலிப்பைத் தருகிறது. கடைசி 20 நிமிடங்களில் கொலைகளுக்கான காரணமாக சொல்லப்படும் விஷயம் சீரியல் டைப்.

பிஜி பாலின் பின்னணி இசை மட்டும் நன்று. மஞ்சள் நிறம் படர்ந்திருக்கும் படி நிகழ்காலமும், இயல்பான ஒளியில் ஃப்ளாஷ்பேக்கும் என ஒளிப்பதிவில் சதீஷ் க்ரூபின் சின்ன பரிசோதனை முயற்சி அழகு. இன்னும் நேர்த்தியான திரைக்கதை அமைத்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்கும் இந்த 'ஒரே முகம்'.

அடுத்த கட்டுரைக்கு