Published:Updated:

சிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்! #HBDRajini

சிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்! #HBDRajini
சிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்! #HBDRajini

சிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்! #HBDRajini

ஒரு நடிகரின் திரைப்படம் வெளிவரும்போது முதல்நாள் முதல் காட்சியில், திரையரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் அதிகம் நிரம்பியிருப்பார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அனைத்து நடிகர்களின் ரசிகர்களும்... ஏன் அனைத்து நடிகர்களுமேகூட முதல் காட்சியைப் பார்க்க ஆவலோடு இருப்பார்கள். அவரின் மாஸ் மட்டுமில்லாமல், படம் பார்க்கத் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக காதல், சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்தும் சரிசமமாக அவரது படங்களில் நிரம்பியிருக்கும் என்பதும்கூட இதற்குக் காரணம்.

சிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்! #HBDRajini

சூப்பர்ஸ்டாரிடம் ஒரு சிறப்பு உண்டு. பலவிதமான முக பாவனைகளைக் காட்டும் அவர், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோசத்தைக் காட்டும் அதே வேளையில், அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு காமெடிக் காட்சிகளிலும் கலக்கியெடுப்பார். மக்களிடையே இந்த ஃபார்முலா வெற்றிபெற்றதால், பின் நாட்களில் வந்த பல நடிகர்களும் இதைப் பின்பற்றத் தொடங்கினர்.

ரஜினியின் சினிமா கேரியர் 70-களில் துவங்கிவிட்டாலும், ஆரம்பகாலத்தில் எதிர்மறையான மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்து வந்தார். தனது குருவான இயக்குநர் கே.பாலச்சந்தரின் அறிவுரைப்படி ஆக்‌ஷன் ரோல்களில் மட்டும் நடிக்காமல், 81-ம் ஆண்டு வெளிவந்த 'தில்லு முல்லு' படத்தில் இருந்து முழு நீள நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். ஒரு கதாநாயகனே நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்து வெற்றிபெற முடியும் என தனது பிம்பத்தை மாற்றி, அதில் வெற்றியும் பெற்றார்.

தில்லு முல்லு :

1979-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'கோல் மால்' திரைப்படத்தின் ரீமேக்தான் 'தில்லு முல்லு'. சூப்பர் ஸ்டாரின் பிம்பத்தை மாற்றிய இத்திரைப்படத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. சூப்பர் ஸ்டார் மீசையின்றி நடித்த முதல் படம் இதுதான். கதைக்குத் தேவையென்பதால் மீசையை எடுக்க சம்மதித்தார். இப்படத்தில் வரும் இன்டர்வியூ காட்சி இன்றளவும் ரசிக்கப்படுவதற்கு தேங்காய் சீனிவாசனும் இன்னொரு காரணம். இதை இயக்குநர் சிகரம் பாலச்சந்தரும் பலமுறை தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

தம்பிக்கு எந்த ஊரு :

நகரத்தில் பெரும் செல்வந்தனின் மகனாக உல்லாசமாக வாழ்ந்த இளைஞன் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு கிராமத்தில் சந்திக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை இது. இசைஞானி இளையராஜாவின் தெவிட்டாத பாடல்கள் இன்றளவும் மக்களிடையே ரசிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இப்படத்தில் இடம்பெற்ற பாம்பு நகைச்சுவை மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால்தான் என்னவோ... 'உழைப்பாளி', 'அண்ணாமலை', 'படையப்பா' போன்ற பல ரஜினியின் படங்களில் சென்டிமென்டாகவே பாம்புக் காட்சிகள் இடம்பெற்றன.

வேலைக்காரன் :

ரஜினியை அறிமுகப்படுத்தியது இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் என்றால், அவரை சூப்பர்ஸ்டாராக வளர்த்தெடுத்த பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் போன்றவர்களுக்கே போய்ச்சேரும். இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெற்றிபெற்ற 'நமக் ஹலால்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பான 'வேலைக்காரன்' திரைப்படத்தை முத்துராமன் இயக்க, கே.பாலச்சந்தரின் 'கவிதாலயா புரொடக்சன்ஸ்' தயாரித்தது. கிராமத்தில் இருந்து வரும் இளைஞன் நகரத்தில் சந்திக்கும் அனுபவங்களை ரஜினி உள்வாங்கி நடித்திருப்பார்.

படிக்காதவன் :

80-களில் ரஜினியின் மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் 'படிக்காதவன்'  மிக முக்கியமானது. 'லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு' என டாக்ஸியுடன் பேசுவது, தன் தம்பியின் கல்லூரிக்குச் சென்று ட்ராமாவின்போது செய்யும் அலப்பறைகள்,  அம்பிகாவிடம் ஏமாறுவது என ரஜினியின் அப்பாவித்தனமான கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. கன்னட நடிகர் ரவிச்சந்திரன் தன் தந்தை வீராசாமியுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த நட்பின் அடிப்படையில், ரவிச்சந்திரன் தயாரித்து இயக்கிய 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' திரைப்படத்தில் ரஜினி நடித்தார்.

மன்னன் :

படத்தில் கவுண்டமணி-ரஜினி கூட்டணியில் உருவான காமெடிக் காட்சிகள் தூள் கிளப்பின. சினிமாவுக்குச் செல்வதற்காக வேலை செய்யும் இடத்தில் பொய் சொல்லிவிட்டுப் போக தியேட்டரில் சீஃப் கெஸ்ட்டாக அமர்ந்திருக்கும் தன் முதலாளி விஜயசாந்தியிடம் கவுண்டமணியும் ரஜினியும் வழியும் காட்சிகள் திரையில் சிரிப்பை நிரப்பின.  

வீரா :

முழு நீள நகைச்சுவைத் திரைப்படமென்றால் ஆள் மாறாட்ட கதைக்களம் அவசியம் என்பது கோலிவுட்டின் எழுதப்படாத விதி எனச் சொல்லுவார்கள். இப்படமும் அதற்கு விதி விலக்கல்ல. ரோஜா, மீனா என இரு கதாநாயகிகளைக் கரம்பற்றி ரஜினி சமாளிக்கும் திரைக்கதை. இரண்டாம் பாகத்தில் செந்தில் உடன் சேர்ந்து ரஜினி நடித்த காட்சிகள், கதாநாயகன் காமெடிக் காட்சிகளில் நடிப்பதில் புது ட்ரெண்ட்டை ஏற்படுத்தின.

சந்திரமுகி :

'முத்து' படத்தில் முதன்முதலாக நடிகர் வடிவேலு ரஜினியுடன் நடித்திருந்தாலும், அதன் பிறகு 'சந்திரமுகி' திரைப்படம் வரை பல்வேறு காரணங்களால் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லை. அதுவரை வடிவேலு நல்ல தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நெடுநாள் காத்திருப்பிற்கும் சேர்த்துவைத்து 'சந்திரமுகி' திரைப்படத்தில் வடிவேலு காமெடிக் காட்சிகளில் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியிருப்பார். பெரிய நடிகருடன் நடிக்கும்போது தனக்கான பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பது இயற்கை. ஆனால் இத்திரைப்படத்தில் வடிவேலுவிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்த சுதந்திரத்தால்தான் சூப்பர் ஸ்டாருடன் வடிவேலுவால் மிக இலகுவாக நடிக்க முடிந்தது.

-கருப்பு

அடுத்த கட்டுரைக்கு