Published:Updated:

‘பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா?’ - மனோபாலா பேட்டி

‘பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா?’ - மனோபாலா பேட்டி
‘பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா?’ - மனோபாலா பேட்டி

‘பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா?’ - மனோபாலா பேட்டி


40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும், 5 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கி, 750 க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்தும் அசத்தியிருப்பவர் மனோபாலா. தற்போது ஜீவா, விஷ்ணு விஷால், ஜி.வி. பிரகாஷ்  என பல ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். சதுரங்க வேட்டை 2-ம் பாகத்தை தயாரித்து வருகிறார். அவரை தொடர்பு கொண்டோம்,

''90 க்குப் பிறகு காமெடி கதாபாத்திரங்களில் நீங்கள் நடிக்கக் காரணம்?''

''அதை நீங்க கே.எஸ்.ரவிக்குமார்கிட்டத்தான் கேட்கணும். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை ததும்பி நிற்கும். இயல்பாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. நான் இருக்கும் இடங்கள் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இதை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார், நீங்கள் படங்களில் நடிக்கலாம். உங்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்றாகப் பொருந்தும். அதோட நிறுத்திக்காம, நிறைய கதாபாத்திரங்களில் நடிங்க. நடிப்பில் உங்களுக்கு நிறைய எதிர்காலம் இருக்கு' என சொன்னார். அதற்குப் பிறகுதான் படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஏற்ற மாதிரி என்னையே நான் மாத்திப்பேன். அதுதான் என்னோட பிளஸ். இப்படி வெளியில் நகைச்சுவையோடு ஜாலியாக இருந்தாலும் உண்மையில் நான் ரொம்ப சீரியஸான ஆள்.''

''நீங்கள் பார்த்த அப்போதைய இயக்குநர்களிடமும், தற்போதைய இயக்குநர்களிடமும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?''

''ஒவ்வொரு கட்டத்திலும் சமூக மாற்றத்தை பிரதிபலிக்க வேண்டியிருக்கும். அதை ஒவ்வொரு தலைமுறையும் சரியாக கொண்டு செல்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இப்போதும் நான் குஷியாக ஒவ்வொரு படங்களையும் பண்ணிட்டு  இருக்கேன். இளைஞர்கள்கிட்ட நிறைய விஷயங்களை கத்துக்கிட்டே இருக்கிறேன்.''


''கமலஹாசன், ரஜினிகாந்த் உடன் உங்களுடைய நட்பு?''

“கமலஹாசன் அவர்களுடைய ஆழ்வார்பேட்டை வீட்டருகேதான் நான், வாசு, பி.சி.ஶ்ரீராம் என பல பேரும் வளர்ந்தோம். அப்படி அடிக்கடி அங்க இருக்கும்போதுதான் கமலஹாசன் பாரதிராஜாகிட்ட என்னை சேர்த்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கூட 16 படங்களில் வேலைப் பார்த்திருக்கேன். இன்றைக்கு வரைக்கும் என்னோட மானசீக குருனா அவர் பாரதிராஜா தான். கமலஹாசன்கிட்ட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா, பேசிட்டே இருப்பார். உலக அறிவு தெரிந்துகொள்ள அவர்கிட்ட பேசிக்கிட்டே இருந்தா போதும். அதே மாதிரி பொது அறிவு சார்ந்து அவ்வளவு விஷயங்களைப் பேசுவார் ரஜினிகாந்த். அதே மாதிரி நம்மக்கிட்ட ஒவ்வொன்றையும் விசாரித்து தெரிஞ்சுப்பார். அப்படி ஒரு ஆர்வம் ரஜினிக்கு. என்னைப் பொருத்தவரை, உலக அறிவுக்கு கமல், பொது அறிவுக்கு ரஜினி.''

''உங்க மகன் பற்றி?''

''என்னைச் சார்ந்தவங்க யாரையும் சினிமாவுக்குள்ள அனுப்ப எனக்கு விருப்பம் இல்ல. என்னோட மகனும் அப்படித்தான் அதுல பெரிய நாட்டம் இல்ல. கல்லூரியில படிக்கும் போதே கோல்ட் மெடலிஸ்ட். இப்போ அமெரிக்காவுல உள்ள ஐடி கம்பெனியில வேலை பார்த்து வருகிறார். 24 வயசு தான் ஆகுது. அங்கேயே கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். இப்போ வெஸ்டர்ன் கிளாசிக் கத்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கூட அடிக்கடி நான் டிராக் அனுப்புறேன் வாசிச்சு அனுப்ப சொல்லுங்கனு சொல்றார். எப்படி இருந்தாலும் முழுமையா கத்துக்கிட்டு வரட்டும் அப்புறம் பார்க்கலாம் என சொல்லியிருக்கேன்.''

''ரஜினி நகைச்சுவையில் கலக்க உங்க ஊர்காவலன் படம் தான் முக்கிய காரணம் என சொல்றாங்களே?''

''1987 ல் வெளியான ஊர்காவலன் படத்தில் நடிக்க வைக்க அவரை அவ்வளவு தூரம் சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. நாங்க வேற மாதிரி ஹீரோயிசத்த நோக்கி போயிட்டு இருக்கோம். திடீர்னு நகைச்சுவையை மக்கள் ஏத்துப்பாங்களா? என பல கேள்விகள் கேட்டார். 'நீங்க நடிங்க கண்டிப்பா வித்தியாசம் தெரியும் என படத்தில் பாதி காமெடி டிராக்கை வச்சேன். அதற்குப் பிறகு அவருடைய பெரும்பாலான படங்களில் நகைச்சுவை மிளிர ஆரம்பிச்சது. இப்போது நகைச்சுவையிலும் தனித்துவமாத் தெரியுறார் சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் ராதிகாவுக்கும் சரியான ரோல் இருக்கும். நான் இயக்கின பெரும்பாலான படங்களில் ராதிகாவும், சுஹாசினியும் இருப்பாங்க. ராதிகா எனக்கு கூடப்பிறந்த சகோதரி மாதிரி. என்னோட ஒரு படத்துக்குக் கூட கதையே சொன்னது இல்ல. அடுத்தப்படம் இதுதான்.. நீங்க நடிக்கிறீங்கனு சொன்னாப் போதும் ஓ.கே சொல்லிடுவாங்க. இப்போ, நடிகர் சங்க அணிக்கு எதிர் அணியான விஷால் அணிக்கு குரல் கொடுத்ததால், கொஞ்சம் கசப்பான மன வருத்தத்தில் இருக்காங்க. இது எல்லாம் தீர்ந்து மறுபடியும் அந்த நட்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். சுஹாசினி மேடம் எங்க குடும்பத்தில் ஒருவர் மாதிரி ஆயிட்டாங்க.''

''இப்போது ட்ரெண்டாக இருக்கும் பேய் பிளஸ் நகைச்சுவை பார்முலாவையும் முதலில் கொண்டுவந்தவர் நீங்கதானு சொல்றாங்களே?''

''ஆமாம்,1985-ம் ஆண்டு வெளியான 'பிள்ளை நிலா' படத்திலேயே பேய் சார்ந்த கதையைக் கொண்டு வந்துட்டேன். பேய் படங்களுக்கான பிள்ளையார் சுழிப் போட்டது நான்தான். அதற்குப் பிறகு, ஜெயராமை வைத்து ''நைனா'' திரைப்படத்திலும் பேய் சார்ந்த கதையை கொண்டு வந்திருப்பேன். தற்போது வெளியாகும் ஏராளமான நகைச்சுவைப் பேய் படங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்னுடைய படங்கள். இப்போது கிராஃபிக்ஸ் என்கிற பெயரில் ஏமாற்றுகிறார்கள். இப்போ இருக்கிற பேயைப் பார்த்தா பயத்திற்குப் பதிலா சிரிப்புதான் வருது.''

''எப்பவும் ஸ்லிம்மாவே இருக்கீங்களே? சீக்ரெட்?''

''எங்கம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயம், 'அரை வயிறா இருக்கும் போதே சப்பாட்ட நிறுத்திடனும். அதுமட்டும் இல்லாம அசைவம் சாப்பிட மாட்டேன். இதுகூட ஒரு காரணமா இருக்கலாம்.''

''இசையில் பிடித்தது?''

''இளையராஜாவுடைய பாடல்களை ஒரு நாள் முழுக்க கேட்கிற அளவு கலெக்ஷன் வச்சிருக்கேன். இசையில் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.எஸ்.வி. இப்போ குறைவாகவே மெலடிப் பாடல்கள் வருகிறது. பாடும் குரலை இப்போ இருக்கிற இசை முழுங்கிடுது. நானும், வைரமுத்துவும் பேசிக்கொண்டிருக்கும் போது, 'வரிகளை கொல்லாமல் இருந்தால், பாடல்கள் நன்றாக இருக்கும்' என வைரமுத்து சொல்லிட்டே இருப்பார்.''

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு