Published:Updated:

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார்

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார்
ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார்

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார்

ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகும், பல படங்கள் வெளியாகாமல் பின் வாங்கி அப்படியே தேங்கி நிற்கும். அதற்குப் பின் உள்ள காரணங்கள் நிறைய. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்குள் நுழையாமல் நேராக இந்த வருடம் அதிக எதிர்பார்ப்புள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.   

2.0:

இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு உறிய படம் 2.0 தான் என சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். ஐ படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்குவது, சூப்பர் ஸ்டாரை வைத்து ஏற்கெனவே ஹிட் கொடுத்த சயின்ஸ் ஃபிக்‌ஷனின் சீக்வல், 3டி படம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

சபாஷ் நாயுடு: 

சென்ற வருடம் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் சிறப்புத் தோற்றம் தவிர கமல் ஹாசன் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. அதனாலேயே சபாஷ் நாயுடுவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் எக்ஸ்டன்ஷனாக சபாஷ் நாயுடு இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் கமல். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளில் உருவாகிவரும் படத்தில் கமலுடன் ஸ்ருதி ஹாசன், ரம்யாகிருஷணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். அப்படியே விஸ்வரூபம் 2வையும் வெளியிட்டால் இந்தாண்டு சினிமா ரசிகர்களுக்கான வேட்டையாக இருக்கும்.

பைரவா | விஜய் 61:

அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி ஓரளவு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது இந்தப் படம். இதன் பிறகு அட்லி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தெறி கொடுத்த வெற்றி இந்த காம்போ மேல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. 

அஜித் - சிவா: AK 57

சென்ற வருடம் அஜித் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. கடைசியாக, தான் நடித்த வேதாளம் படத்தை இயக்கிய சிவாவின் படத்திலேயே இந்த முறையும் இணைந்திருக்கிறார். படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உடன் நடிக்க இருக்கிறார்கள். வழக்கம் போல் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. 

பாகுபலி 2:

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற ஒரு கேள்வியே போதும், படத்திற்கான ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்துவர. தவிர முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், விஷுவல் ட்ரீட் எல்லாம் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. தவிர ராஜமௌலி மேல் உள்ள ராஜ நம்பிக்கை வீண்போகாது என்பது அனைவரின் கணிப்பு.

வேலையில்லா பட்டதாரி 2:

முதல் பாகம் கொடுத்த ஹிட், அந்த தீம் மியூசிக் எல்லாம் வேற லெவல். அதை அப்படியே தக்க வைக்கிறதா இரண்டாம் பாகம் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். கூடவே இந்த பாகத்தில் இணைந்திருக்கும் கஜோல், படத்தின் மீது புது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் பிப்ரவரியில் வெளிவரவிருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், மேலும் தனுஷ் இயக்கும் பவர் பாண்டி என 2017 முழுக்கவே தனுஷ் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தானா சேர்ந்த கூட்டம்:

நானும் ரௌடி தான் படத்தின் தாறு மாறு ஹிட், சூர்யா நடிப்பது என இரண்டு காரணங்கள் இந்தப் படத்துக்கான விசிட்டிங் கார்ட். எப்படியும் செம என்டர்டெயினர் கொடுத்து விடுவார் விக்னேஷ் சிவன் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஜனவரி 26ல் வெளியாகவிருக்கும் சிங்கம் 3க்கும் ஏக எதிர்பார்ப்பு. முதல் இரண்டு பாகம் போலவே இதுவும் ஓங்கி அடிக்குமா என காத்திருந்து பார்ப்போம். 

கருடா:

இருமுகன் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததால் இந்த முறை கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நிலை விக்ரமுக்கு. திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் கருடா அந்த விதத்தில் அவருக்கு கை கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஹரி இயக்கத்தில் சாமி 2 வழக்கமான ஆக்‌ஷன் படமாக கலக்கும் என எதிர்பார்க்கலாம். 

காற்று வெளியிடை:

மணிரத்னம் + கார்த்தி என்கிற ஃப்ரெஷான கூட்டணி! படத்தில் கார்த்தி பைலட்டாக நடிப்பதாக தகவல். பைலட் என்பதாலேயே இந்த டைட்டிலா என்ற எதிர்பார்ப்பு. கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார் மணிரத்னத்தின் வழக்கமான ரொமான்ஸ் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும் என்பது உறுதி. கூடவே ஆர்.ஜே.பாலாஜி மணிரத்னம் படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிவர்மன். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் மார்ச் மாதம் வெளியாகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை:

செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய் படம். வழக்கமான பாணி பேய்ப் படமாக இருக்காது என்பது நிச்சயம். கூடவே இறைவியில் அசரடித்த பெர்ஃபாமர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ என்பது கவனிக்கத் தகுந்த விஷயம். யுவன் + செல்வா கூட்டணி இணைந்திருப்பதும் படத்துக்கு கூடுதல் பலம். அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது இயக்கத்தில் சந்தானம் என்று நினைக்கும் போதே எப்படி இருக்கும் என்கிற யோசனை எழுகிறது.

சிவகார்த்திகேயன் - ராஜா:

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு ராஜா இயக்கும் படம். சிவகார்த்திகேயன், ஃபகத் பாசில், நயன்தாரா என தேர்ந்த டீம் இணைந்திருக்கிறது. கூடவே சினேகா, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பிராமையா நடிக்கிறார்கள்.  சமூகப் பிரச்சனை சார்ந்த ஒரு கதைக் களத்தில் உருவாகிவரும் படம் ஆகஸ்ட் 25ல் வெளியாகவிருக்கிறது. 

அநீதிக் கதைகள்:

ஏழு வருடங்களுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் நடிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என மொத்தமும் பக்காவான கூட்டணியாக இணைந்திருக்கிறது. ஆரண்ய காண்டம் கொடுத்தவர் படம் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலான இடத்தில் இந்தப் படத்தை எடுத்து வைக்கலாம். கூடவே புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவனுடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் விக்ரம் வேதா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்திருக்கும் கவண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடித்திருக்கும் புரியாத புதிர் என இந்த வருடமும் கை நிறைய படங்களுடன் ஆச்சர்யம் தர காத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:

முதன் முறையாக 3 வேடங்களில் சிம்பு நடிக்கும் படம். ஹீரோயின்களாக தமன்னா, ஸ்ரேயா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஆக்‌ஷன் காமெடி படம் இது. படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பு ஒன்று தான், சிம்பு நடித்திருப்பது. அதிக இடைவெளி என்றாலும் சென்ற வருடம் மட்டும் இரண்டு படங்கள் வெளியானது சிம்புவுக்கு. இந்த முறையும் இடைவெளியை உணர வைக்காமல் ஒரு நல்ல பெர்ஃபாமன்ஸை அல்லது என்டர்டெய்ன்மென்டை அளிக்க வேண்டும்.

துப்பறிவாளன்:

விஷால் + மிஷ்கின் என இரண்டு எக்ஸ்ட்ரீம் நபர்கள் இணைந்திருக்கும் படம். ஷெர்லக் ஹோம்ஸ் டைப்பிலான ஒரு இன்வெஸ்டிகேஷன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. படம் மார்ச் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கிறார் விஷால். இது போல ரொம்ப நாளாக கிடப்பில் இருக்கும் மதகஜராஜா படத்தை மறந்தே விட்டார்கள் ரசிகர்கள். அதற்கு ஒரு வழி செய்யலாமே ஜி!

அறம்

கலெக்டராக நயன்தாரா நடிக்கும் படம். படத்தை இயக்குகிறார் கோபி. இந்த வருடம் நயன் தாரா சோலோவாக நடிக்கும் படங்களே நான்கு இருக்கிறது. தாஸ் ராமசாமி இயக்கும் ஹாரர் படமான டோரா, சக்ரி டோல்டி இயக்கும் கொலையுதிர்காலம், பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் பத்திரிகையாளர் வேடம் என அசத்த இருக்கிறார்.

மகளிர் மட்டும்:

36 வயதினிலேவுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா லீட் ரோலில் நடிக்கும் படம். குற்றம் கடிதல் படம் மூலம் தேசிய கவனம் பெற்ற இயக்குநர் பிரம்மா இந்த படத்தை இயக்குகிறார். சரண்யா, பானுப்பிரியா, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள். கண்டிப்பாக கவனிக்க வைக்கும்படியான படமாக இருக்கும். 

ஒரு பக்க கதை:

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கவனம் குவித்தவர் பாலாஜி தரணிதரன். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு பக்க கதை முழுதாக தயாராகியும் சில காரணங்களால் தாமதமாகிவருகிறது. இந்த வருடத்தில் படத்தின் வெளியீடு இருக்கும் என நம்பலாம். எல்லாம் சரியாக நடந்திருந்தால் காளிதாஸ் ஜெயராமுக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருக்கும் இந்தப் படம். இந்த வருடத்தில் அது நிகழட்டும்.

சர்வம் தாள மயம்:

பெரிய இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் படம். இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா என்று யார் இந்த ரேஸில் ஜெயிப்பார்கள் என்று அவரவர் ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும். 

- பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு