Published:Updated:

7AM - 7PM தனுஷ்..! #Classics

7AM - 7PM தனுஷ்..! #Classics
பிரீமியம் ஸ்டோரி
News
7AM - 7PM தனுஷ்..! #Classics

படிக்கிற நமக்கே 'மூச்சு' வாங்குது... 'தனுஷா' வாழ்றது ஈஸியே இல்லீங்க...!

சிலுசிலுவென குளிர்காற்று.. பறவைகள் கூடப் பயணம் தொடங்காத அதிகாலை நேரம். சென்னை டிஃபன்ஸ் காலனியில் அந்த வீட்டுக்கு வெளியே ஏழு கார்கள். எக்கச்சக்க மோட்டார் சைக்கிள்கள். யார் யாரோ காத்திருக்கிறார்கள். ஆளுயர இரும்புகேட் முனகிக்கொண்டே நமக்காகத் திறக்கும்போது, உள் வீட்டின் பிரமாண்டம் நம்மைத் தாக்குகிறது. தமிழ் சினிமாவின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்த இளைஞன் தனுஷ் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறார். "நைட் ஷூட்டிங் முடிஞ்சு காலைலதான் வந்தார்". அதற்குள் தகவல் கிடைத்து எழுந்துவிட்டார் தனுஷ். தூக்கம் மிச்சமிருக்கிறது கண்களில், 'குட்மார்னிங்' என்று பளிர் சல்யூட் வைக்கிறார் சிரிப்புடன். 

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 "உள்ளே வாங்க.." என்று அழைத்துப் போகிறார். அடக்கமான அறைகள். தனுஷ் வீடு, தனுஷ் கார், தனுஷ் அப்பா என்று எல்லோரும் தனுஷை அடையாளமிட்டே அழைக்கப்படுகிற வீட்டில் தனுஷின் புகைப்படத்தைத் தேட வேண்டியிருக்கிறது."குடும்பமே ஒண்ணா உட்கார்ந்து பேசி ரொம்ப நாளாச்சு. பெரியவன் ஹைதராபாத் ஷூட்டிங்கில் , சின்னவனோ தினம் தினம் ஷூட்டிங், டப்பிங்னு ஓடுறான். மூத்த பொண்ணைக் கட்டிக் கொடுத்து புருஷனோடு ஊருக்குப் போயிருச்சு. சின்னப் பொண்ணு டாக்டரா இருக்கா. அரக்கபரக்க ராமச்சந்திரா ஆஸ்பிட்டலுக்கு ஓடிருவா. எல்லாரும் றெக்கை கட்டிட்டுப் பறக்கறாங்க" என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஆதங்கப்பட்டாலும் அதில் பெருமைதெரிகிறது. 

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 "ஒண்ணுமே சாப்பிட மாட்டேங்கிறான். ஒரு இட்லி, இல்லாட்டி கொஞ்சம் இடியாப்பம்தான் சாப்பிடறான். ஒரு டம்ளர் பால் குடிடா... ஆம்லேட்டாவது சாப்பிடுறானு கெஞ்சறேன். எழுந்து ஓடுறான்" - புகார் வாசிக்கிறார் அம்மா விஜயலட்சுமி. "அக்கா என்னை எலும்பன்னு கேலி பண்ணுவாங்க. ஆனா இந்த உடம்பைத்தானே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க" என்று மலர்ந்து சிரிக்கிறார் தனுஷ். சடுதியில் குளித்து ரெடியாகிறார் தனுஷ். நிறைய போன்கள். பெரும்பாலும் இளம் பெண்கள். எப்போ பார்க்க முடியும் என்று விசாரிக்கிற ரசிகர்கள். சளைக்காமல் பொறுப்பான பதிலைத் தருகிறார்கள். திடீரென்று ஒரு போன்காலை எடுத்து எதிர்முனையில் இருக்கிற ரசிகருக்கு ஹலோ சொல்லி, இன்ப அதிர்ச்சி தருகிறார் தனுஷ். 

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 நிதானமாக பூஜையறையில் போய் நிற்கிறார். பத்து நிமிடம் அமைதியில் கரைகிறார். "பாலு சார் எட்டரை மணிக்கு வரச்சொன்னார். இப்பவே எட்டேகால் ஆச்சு!" வெந்நீரை காலில் விட்டுக்கொண்டது மாதிரி பறக்கிறார் தனுஷ் கையை முறித்துக் கொண்டதற்கு பிறகு அவரது பாதுகாப்புக்கு முரளி என்பவரை நியமித்து இருக்கிறார்கள். முரட்டு லத்தியுடன் தனுஷைப் பின் தொடர்கிறார் முரளி! பாட்டியின் கன்னம் தொட்டுக் கொஞ்சிவிட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற 'டாடி'க்கு 'பை' சொல்லிவிட்டு, பால் டம்ளருடன் ஓடிவருகிற அம்மாவிடமிருந்து தப்பி காரில் ஏறுகிறார். புத்தம் புது சொனாட்டா வழுக்கிக்கொண்டு சீறுகிறது. வீதியெங்கும் சிறுவர்கள், 'ஹாய் தனுஷ்' - உற்சாகத்தில் விசிலடிக்கிறார்கள். மக்கள் தலைவர் மாதிரி கையசைக்கிறார். செல்போன் அலறிக்கொண்டேயிருக்கிறது. நண்பன் 'ஹீரோ'வாகிவிட்ட பிறகு பார்க்க முடியாத நண்பர்கள் போனில் துரத்துகிறார்கள் . மாதத்துக்கு ஒருமுறை 'செல்' நம்பரை மாற்றியும், பெண்கள் விடாது துரத்துகிறார்கள். "பொண்ணுங்கனா எனக்கு ரொம்ப பயம். நல்லா இருக்கீங்களா? என்னை மாதிரி படிக்காமல் விட்டுடாதீங்கங்கற ரெண்டு வரியைத் தவிர வேற பேசவே பயப்படறேன். அவங்க மனசைத் தொடுகிற மாதிரி இரண்டு வார்த்தை பேசிட்டா, முடிஞ்சுது கதை. அந்தக் கொடுமையெல்லாம் நமக்கு வேண்டாம் சார். இப்போ நடிப்பு மட்டும்தான் என் மனசில் இருக்கு" என்கிறார் வெளியே வேடிக்கை பார்த்தபடி.

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 கார் பிரசாத் ஸ்டுடியோவில் நுழைய, காத்திருக்கிற பாலுமகேந்திரா, 'வாங்க தம்பி' என்று சிநேகம் கொண்டாடுகிறார். 'அது ஒரு கனாக்காலம்' பட ஷூட்டிங். ஹீரோயின் ப்ரியாமணி தயாராக நிற்க, 'இந்தம்மா இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வந்துருச்சாம். பெருமையைப் பாருங்க.'கேலி பேசுகிறார். அவ்வளவுதான் சட்டென்று படப்பிடிப்புக்கான ஆடையில் புகுந்து கொண்டு சீரியஸ் 'தனுஷ்' ஆகிறார். அடுக்கடுக்கான ஷாட்கள். சோர்வடையாத தனுஷ். கொஞ்சம் இடைவெளியில் வெளியே வந்து உட்கார்ந்திருக்கும் பாலுமகேந்திரா, "மூணே படத்தில் பட்டி தொட்டியெல்லாம் பாப்புலராகிட்டார் தனுஷ் அவரிடம் எனக்குப் பிடிச்ச குணம், இவ்வளவு குறைவான காலத்தில் இவ்வளவு செல்வத்துக்கும் ஆளான இளைஞனா இருந்தும், அவரிடமிருக்கிற ஆத்மார்த்தமான பணிவு. அது உதட்டளவில், மேலோட்டமான பணிவு அல்ல. மனசின் ஆழத்திலிருந்து வர்ற மரியாதை. அது இருக்கிறவரைக்கும் தனுஷின் கால்கள் தரையில்தான் ஊன்றி நிற்கும். தனுஷின் வெற்றி கிடைச்சிருந்தா வேறுசில நடிகர்கள், நடிகைகள் எப்படி 'ரியாக்ட்' செய்து இருப்பாங்க தெரியுமா? தனுஷ் ரியலி கிரேட்" என்று பாராட்டுகிறார்.

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 உணவு இடைவேளை வருகிறது. கூட்டு மாதிரி கொஞ்சம் பருப்பு சாதம் மட்டும் சாப்பிடுகிறார் தனுஷ் அவரது உதவியாளர் கலைச்செல்வன், "அண்ணன் சாப்பிடவே மாட்டார் சார். ஆட்டு நெஞ்சு எலும்பைத் தட்டிப்போட்டு, 'சூப்' சாப்பிடச் சொன்னா மாட்டேன்னு அடம்பிடிக்கிறார். சிக்கன், மட்டன், மீன், முட்டை எதுவும் சாப்பிடமாட்டார்" என்று ஒரேயடியாக அலுத்துக்கொள்கிறார். 

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 குட்டித்தூக்கம் போடுகிறார். பத்தே நிமிஷம் பதறி எழுகிறார். முகம் கழுவித் தயாராகிற அந்த இரண்டு நிமிஷம் செல்போனை ஆன் பண்ணி வைத்தால் சிணுங்கிக்கொண்டே இருக்கிறது. உற்சாகமான பெண்குரல்கள். எல்லோரும் நியூஇயர் பார்ட்டிக்குத் தனுஷைத் தள்ளிக்கொண்டு போகத் துடிக்கிறார்கள். "ஸாரிங்க நான் வெளியே வரமாட்டேன். வீட்டுக்கு போய் தூங்கிடுவேன்" என்று சமாளிக்கிறார். "அலைபாயுதே வந்தப்போ மாதவன் சாருக்கு எப்படியொரு க்ரேஸ் இருந்தது. அலைபாஞ்சாங்களே பெண்கள். ஆனால், அப்புறம் ஒரு கட்டத்தில் அதெல்லாம் அடங்கிருச்சுல்ல. அதுமாதிரி இப்போ 'தனுஷ்'னா கொஞ்சம் ஆர்வமா இருக்கிறாங்க. இது ஒரு ஸ்டேஜ். ஆனா, கடந்துபோயிடும். எனக்கு ஆசை என்னன்னா,  என்னை அருமையான நடிகன்ப்பா'னு அடையாளம் சொல்லணும். அதான் முக்கியம்" என்கிறார். "புரூஸ்லினெல்லாம் என்னைச் சொல்றாங்க. என் அவஸ்தை எனக்குத்தானே தெரியும்" - சட்டையைக் கழற்றிக் காட்ட. அதிர்கிறோம்! இடது தோள் பட்டையில் துவங்கி மணிக்கட்டு வரைக்கும் வெகு நீளமான ஆபரேஷன் தழும்பு. "அன்புகூட அதிகமாயிருச்சுனா தாங்க முடியாது சார்" - தத்துவம் போலச் சொல்லி சிரிக்கிறார்.

7AM - 7PM தனுஷ்..!
7AM - 7PM தனுஷ்..!

 "இன்னும் வலிக்குது சார். ரசிகர்கள் தள்ளிவிட்டு அடிபட்டவன் நான் ஒருத்தனா தான் இருக்கும். இன்னும் கை சரியாகலைங்க. அடிதடிக்கெல்லாம் இறங்க இன்னும் ஆறு மாசம் ஆகுமாம்" என்று சிரிக்கிறார். ஓயாத டேக், ஆக்ஷன், சத்தம். எல்லாம் முடிந்ததும், "நல்லா வந்திருக்கு" என்று தனுஷின் தலை தொட்டு அனுப்புகிறார் பாலு மகேந்திரா. "சார், காலைல எட்டரை மணிக்கு வந்திடறேன் சார்" என்று ஸ்கூல் பையன் மாதிரி வீட்டுக்கு ஓடுகிறார் தனுஷ்! வெற்றி ஏன் அவர் பின்னால் ஓடுகிறது என்பது புரிகிறது!

- நா. கதிர்வேலன் 

படங்கள்:  கே. ராஜசேகரன்

(11.01.2004 தேதியிட்ட ஆன்ந்த விகடன் இதழிலிருந்து...)