Published:Updated:

'தெய்வத் திருமகள்’ சாரா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? #VikatanExclusive

'தெய்வத் திருமகள்’ சாரா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? #VikatanExclusive
'தெய்வத் திருமகள்’ சாரா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? #VikatanExclusive

'தெய்வத் திருமகள்’ சாரா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? #VikatanExclusive

'தெய்வத்திருமகள்' படத்தில் நிலாவாக நடித்த குட்டி தேவதை சாராவை நினைவிருக்கிறதா?  அந்தப் படத்துக்குப் பிறகு 'சைவம்' படத்தில் மீண்டும் இயக்குநர் விஜய்யுடன் இணைந்தார். 'விழித்திரு' படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன சாரா, இன்னும் சில வருடங்களில் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. சாரா இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? மும்பைப் பொண்ணை மொபைலில் பிடித்தோம்.

''வணக்கம். நான் சாரா பேசறேன்... நீங்க எப்படி இருக்கீங்க?'' என தமிழில் ஹலோ சொல்கிறார் ஸ்வீட்டி. குழந்தைப் பருவத்தைக் கடந்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கிற சாராவின் தோற்றத்தில் மட்டுமில்லை, பேச்சிலும் நிறையவே மெருகேற்றம்! நடிப்புக்கு தற்காலிக குட்பை சொல்லிட்டீங்களா என்றால் அவசரமாக மறுக்கிறார் அழகி.

'''விழித்திரு' படம் தான் தமிழ்ல நான் நடிச்ச லேட்டஸ்ட் படம். தெலுங்குல 'சைவம்' படத்தோட ரீமேக்ல நடிச்சேன். மலையாளத்துல ஒரு படம் பண்ணினேன். அப்புறம் இப்போ சமீபத்துல 'தி சாங் ஆஃப் ஸ்கார்பியன்ஸ்' என்ற இன்டர்நேஷனல் ஹிந்திப்படத்துல இர்ஃபான் அங்கிளோட மகளாக நடிச்சிருக்கேன். இந்தப் படம் என் கேரியர்ல முக்கியமான மைல்ஸ்டோன்...'' பெரிய மனுஷ தோரணை சாராவின் பேச்சில். ''ராஜஸ்தான் சம்பந்தப்பட்ட கிராமத்துக் கதை இது. இர்ஃபான் அங்கிள் வில்லேஜரா நடிச்சிருக்கார். நான் ஏற்கெனவே நிறைய பாலிவுட் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா இது எனக்கு முதல் இன்டர்நேஷனல் படம். அதனால ரொம்ப ஸ்பெஷல்...'' என்கிறவருக்கு இப்போது வயது 11. ஆறாம் வகுப்பில் படிக்கிறாராம்.

''எங்கம்மா  சின்ன வயசுல நடிகையாகணும்னு ஆசைப்பட்டாங்களாம். ஆனா அவங்களுக்கு அதுக்கான சான்ஸ் கிடைக்கலை. ஆனா நான் நடிகையாகி அம்மா ஆசையை நிறைவேத்திட்டேன்னு அம்மா அடிக்கடி பெருமையா சொல்வாங்க.  எனக்கு அப்போ ஒன்றரை, ரெண்டு வயசுதான் இருக்கும். செம கியூட்டா இருப்பேனாம். எல்லாரும் என்னைக் கொஞ்சுவாங்களாம்.   அப்பதான் டைரக்டர் விஜய் அங்கிள் என்னைப் பார்த்துட்டு ஒரு விளம்பரத்துல நடிக்க வைக்கக்  கேட்டாராம்.

அப்புறம் விஜய் அங்கிள் கூடவே நிறைய அட்வர்டைஸ்மென்ட்ஸ் பண்ணிட்டேன். எனக்கு நாலரை வயசிருக்கும் போது, ‘தெய்வத் திருமகள்’ படத்துல  நிலா கேரக்டருக்கு சைல்ட் ஆர்ட்டிஸ்ட்  தேடி விஜய் அங்கிள் மும்பைக்கு வந்தார். கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைங்க கலந்துக்கிட்டாங்க. அதுல நான் செலக்ட் ஆனேன்.  என்னைப் பேச வச்சுக் கேட்ட விஜய் அங்கிள், உடனே ஆக்டர் விக்ரம் அங்கிளுக்கு போன்  போட்டார். ‘ஐ காட் மை ஏஞ்சல்’னு சொன்னார். அந்தப் படத்துல நடிச்சதுக்காக எனக்கு நிறைய அவார்ட்ஸ் கிடைச்சது. 

நடிக்கிறதுக்காக நான் என்னிக்குமே படிப்பை மிஸ் பண்ண மாட்டேன். ஸ்கூல்ல எனக்கு நல்ல பேர் உண்டு. அம்மாவோ, அப்பாவோ, என் டீச்சர்ஸோ என்னை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்னு என்னிக்கும் கட்டாயப்படுத்தினதில்லை. அதனால நானும் எந்த பிரஷரும் இல்லாமப் படிக்கிறேன்.

தமிழ்ல நல்ல வாய்ப்புகளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். தமிழ்ப் படங்கள்தான் என்னை இந்தளவுக்கு பாப்புலராக்கினது. அதனால தமிழ் எனக்கு எப்பவும் ரொம்ப ஸ்பெஷல். இப்ப கதக், வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். தவிர தமிழ், ஃப்ரென்ச், மலையாளம், தெலுங்குனு நாலு மொழிகளும் கத்துக்கிட்டிருக்கேன். ஏன்னா நான் எல்லா மொழிலயும் நடிக்கிறேனே. அந்த மொழி தெரிஞ்சா என்னோட நடிப்பை இன்னும் நல்லா பண்ண முடியும்னு நினைக்கிறேன். டி.வி சீரியல்ஸ்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா இப்போதைக்கு டி.வி பண்றதா இல்லை. நான் நடிச்சதுலயே என்னோட ஃபேவரைட் படங்கள் தெய்வத்திருமகளும், சைவமும். என்னோட பழைய படங்களை அடிக்கடி பார்ப்பேன். சில காட்சிகள் எல்லாம் இன்னும்கூட சிறப்பா பண்ணியிருக்கலாமோனு தோணும். சிலதெல்லாம் சூப்பரா பண்ணியிருக்கேன்னு தோணும்.

டைரக்டர் விஜய் அங்கிள் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி. அவருக்கும் எனக்குமான அந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷல். இப்போ 2017 நியூ இயர்கூட அவர்கூடதான் செலிபிரேட் பண்ணினோம். நான் இல்லாம அவராலயும் இருக்க முடியாது, அவர் இல்லாம என்னாலயும் இருக்க முடியாது. ‘விஜய் அங்கிள் தான் உனக்கு ரொம்ப க்ளோஸ் ஆச்சே... அவரோட அடுத்த படத்துல ஏன் நடிக்கலை?’னு நிறைய பேர் கேட்கறாங்க. நாங்க க்ளோஸா இருக்கிறதாலயே அவர் டைரக்ட் பண்ற எல்லாப் படங்கள்லயும் எனக்கு சான்ஸ் கொடுக்கணுமா என்ன? எனக்கு எது நல்லதுனு அவருக்குத் தெரியும். அப்படி அவர் கொடுக்கிற படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.

விக்ரம் அங்கிளும் அப்படித்தான். அவர் ரொம்ப ரொம்ப பிசி. ஆனாலும் முக்கியமான டேஸ்ல போன் பண்ணி விஷ் பண்ணுவார்....'' சரளமாகப் பேசுகிற சாராவுக்கு ஹீரோயின் ஆவதே லட்சியம், கனவு, விருப்பம் எல்லாமும். ''தீபிகா படுகோனும், அலியா பட்டும் என் ஃபேவரைட். அவங்களை மாதிரி நானும் ஆக்டிங்ல பாப்புலரா வருவேன்... தமிழ்ல நிறைய படங்கள் பண்ணுவேன்...'' மழலைச் சிரிப்பு மட்டும் மாறவில்லை சாராவிடம்.

- ஆர்.வைதேகி

அடுத்த கட்டுரைக்கு