Published:Updated:

’கமல் அடிக்கடி பாராட்டும் ஒளிப்பதிவாளர் இவர்!' என்.கே.விஸ்வநாதன் நினைவுகள் பகிர்கிறார் 'தேனாண்டாள்’ முரளி

’கமல் அடிக்கடி பாராட்டும் ஒளிப்பதிவாளர் இவர்!'  என்.கே.விஸ்வநாதன் நினைவுகள் பகிர்கிறார் 'தேனாண்டாள்’ முரளி
’கமல் அடிக்கடி பாராட்டும் ஒளிப்பதிவாளர் இவர்!' என்.கே.விஸ்வநாதன் நினைவுகள் பகிர்கிறார் 'தேனாண்டாள்’ முரளி

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்ரல் 25) காலமானார். இவருக்கு வயது 75. 1970-களில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இதில் ‘சட்டம் என் கையில்’, ‘கடல் மீன்கள்’, ‘கல்யாணராமன்’, ‘மீண்டும் கோகிலா’ போன்ற படங்களும் அடக்கம். 

இவரின் ஒளிப்பதிவுப் பயணத்தில், இயக்குநர் இராம.நாராயணனுடன் பணியாற்றியதை மிகப்பெரிய சாதனையாகக் குறிப்பிடலாம். இராம.நாராயணன் இயக்கிய 100-க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 75 படங்களுக்குமேல் இவர்தான் ஒளிப்பதிவாளர். இராம.நாராயணன், ஒரே ஆண்டில் 12 படங்களை இயக்கும் அளவுக்கு வேகமான இயக்குநர். அதிலும்  பக்திப் படங்களும், விலங்குகள் நடிப்பது போன்ற படங்களும் அதிகம். தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்திலேயே கடவுள் தோன்றுவது, விலங்குகள் சண்டையிடுவது போன்ற காட்சிகளைத் தன் முயற்சிகளாலும் உழைப்பாலும் சாத்தியமாக்கியவர் என்.கே.விஸ்வநாதன் 

ஒளிப்பதிவில் பரபரப்பாக இயங்கிய இவர், 1990-களில் இயக்குநரானார். ‘பாண்டிநாட்டுத்தங்கம்’, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘இணைந்த கைகள்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘பெரிய வீட்டு பண்ணக்காரன்’, ‘பெரிய மருது’, ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’, ‘ஜெகன்மோகினி’... என கமர்ஷியலாக வெற்றியடைந்த படங்களையும் என்.கே.வி. இயக்கியுள்ளார்.  

இயக்குநர் இராம.நாராயணனின் மகனும் பிரபல தயாரிப்பாளருமான ‘தேனாண்டாள்’ முரளி, என்.கே.விஸ்வநாதனைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

‘‘சின்ன வயதில் அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அவருடன் விஸ்வநாதன் சாரும் இருப்பார். லொகேஷன் பார்க்கச் செல்வது, ப்ரி-புரொடக்‌ஷன் எனப் பெரும்பாலும் அப்பாவையும் இவரையும் ஒன்றாகவே பார்க்கலாம். அப்பா இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு சார்தான் கேமராமேன். இவரின் ஒத்துழைப்பு இல்லை என்றால், அப்பாவால் வருடத்துக்கு 12 படங்கள் இயக்கிய சாதனை எல்லாம் பண்ணியிருக்கவே முடியாது. இருவருக்குமான அந்தப் புரிதல் கடைசிக்காலம் வரை தொடர்ந்தது. 

இவர்களின் இத்தனை வருடப் பயணத்தில் இருவரும் முரண்பட்டதே கிடையாது. இருவருக்குமிடையே நிறைய விவாதங்கள் நடக்கும். அது ஆக்கப்பூர்வமான விவாதமாக இருக்குமே தவிர, மனஸ்தாபங்கள் வரை போனதேயில்லை என்பது இன்றைய தலைமுறை கலைஞர்களுக்கான பாடம். இருவரும் சேர்ந்து வேலை செய்த முதல் படம் ‘துர்காதேவி’ என நினைக்கிறேன். அதில் தொடங்கி 2005-ம் ஆண்டில் வெளிவந்த ‘குட்டிப்பிசாசு’ படம் வரை இருவரும் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். அப்பா கடைசியாக இயக்கிய ‘ஆர்யா சூர்யா’ படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில்,  அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இவரின் அசோசியேட் செல்வராஜ் என்பவரை வைத்துதான் அப்பா அந்தப் படத்தை முடித்தார். 

எல்லா காலங்களிலும் அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பது விஸ்வநாதன் சாரின் சிறப்பு. 1998-99களில் வந்த ‘மாயா’, ‘ராஜகாளியம்மன்’ படங்களின் காட்சிகளை அப்போதே கிரீன்மேட்டில் ஷூட் செய்து கிராஃபிக்ஸ்க்கான வேலைகளையும் பார்த்து தன்னை அப்டேட்டாக வைத்திருக்கிறார். இப்படி டெக்னாலஜிகளைப் புரிந்துவைத்திருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்காமலும் பார்த்துக்கொள்வார். இப்படி இரண்டையும் பேலன்ஸ் பண்ணுவதில் விஸ்வநாதன் சார் சிறப்பானவர். 

கமல் சார்கூட இவரைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். ‘கிராஃபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இங்கு அறிமுகமாகாத காலத்திலேயே ‘கல்யாணராமன்’ படத்தில் டூயல் கேரக்டர்களை அவ்வளவு திறமையாகக் கையாண்டார்’ என்று ‘கல்யாணராமன்’ நினைவுகள் பற்றி சொல்லும்போது இவரை மறக்காமல் குறிப்பிடுவார். 

என் குழந்தைப் பருவம் தொடங்கி அவர் இறக்கும் வ்ரை அவருடனும் அவரின் குடும்பத்துடனும் நட்பாக, குடும்பமாக இருப்பபது மிகப்பெரிய விஷயமாகக் கருதுகிறேன். இப்படிப்பட்டவர் இறந்தது, எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் கவலையையும் தருகிறது.’’