Published:Updated:

பாகுபலி- 2 மட்டுமா? இவையும் ரிலீஸ் பிரச்னைகளைக் கடந்து வந்த படங்கள்தான்!

பாகுபலி- 2 மட்டுமா? இவையும் ரிலீஸ் பிரச்னைகளைக் கடந்து வந்த படங்கள்தான்!
பாகுபலி- 2 மட்டுமா? இவையும் ரிலீஸ் பிரச்னைகளைக் கடந்து வந்த படங்கள்தான்!

பாகுபலி- 2 மட்டுமா? இவையும் ரிலீஸ் பிரச்னைகளைக் கடந்து வந்த படங்கள்தான்!

பெரிய படங்கள் வரும்போது அரசியல் பிரச்னைகளோடு, தனிநபர் பிரச்னைகளும் சேர்ந்தே வரும். 2008ஆம் ஆண்டு காவிரிப் பிரச்னை தொடர்பான போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதை அடிப்படையாகக் கொண்டு, ‘கன்னட மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், ‘பாகுபலி-2’ படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டோம்’ என்றார் வாட்டாள் நாகராஜ்.  ‘பாகுபலி-2’ படம் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ். அந்தப் பிரச்னை முடிய, ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘பாகுபலி-2’ குறித்த நேரத்தில் வெளியாகவில்லை.  பல திரையரங்குகளில் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பணப்பிரச்னை தீர்ந்தபிறகே படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.  ’பாகுபலி-2’ மட்டுமா? கடந்த சில காலங்களில் பணப் பிரச்னைகளையும், எதிர்ப்புகளையும் கடந்துவந்த சில படங்களைப் பார்ப்போம். 

துப்பாக்கி 

விஜய்க்கு, அவர் படங்கள் மீதான பிரச்னையைத் தொடங்கிவைத்த படம் ‘காவலன்’. பிறகு, ‘துப்பாக்கி’ படத்திற்கு பலமுனைத் தாக்குதலே நடந்தது. ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற சிறுபட்ஜெட் படம் முதல் போட்டியாக வந்து நின்றது. ‘என் டைட்டில்’ என்ற போட்டியில் இரு தரப்புமே நீதிமன்றத்தில் நிற்க, ‘துப்பாக்கி’யை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. பிறகு, முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாக ஒரு அமைப்பு திரண்டது. நீதிமன்றத்தில் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்கள். ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் ‘துப்பாக்கி’ மீது தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டார். படம் விஜய் கேரியரில் முக்கியமான இடத்தைப் பிடித்தது.

தலைவா 

‘விஜய் அரசியலுக்கு வருகிறார்’ என்ற அரசல் புரசலான பேச்சுகள் நிலவிக்கொண்டிருந்த சூழலில், இந்த என்ற டைட்டில் பிரச்னைகளுக்குப் புள்ளி வைத்துக் கோலம் போட்டது. இது அரசியல் படம் என்றும், இப்படம் வெளியானால் திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வைப்போம் என மிரட்டல்கள் வந்தது. திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு கேட்டார்கள். அத்தனை தியேட்டர்களுக்கும் பாதுக்காப்பு கொடுக்க முடியாது என மறுத்தது போலீஸ். படம் ரிலீஸ் ஆவதற்கு விஜய் உண்ணாவிரத அனுமதி கேட்டதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ‘இது அரசியல் படம் அல்ல’ என நடிகர் விஜய், இயக்குநர் விஜய் இருவரும் அறிக்கை கொடுத்தபிறகும், படத்தின் தலைப்புக்குக் கீழே இடம்பெற்றிருந்த ‘டைம் டூ லீட்’ என்ற கேப்ஷனைத் தூக்கியபிறகே, படம் நிம்மதியாக வெளியானது. 

விஸ்வரூபம் 

படத்திற்கும், படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் பொருத்தமான தலைப்புதான். முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இருப்பதாக இப்படத்தைத் தடை விதிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்கள் இஸ்லாமிய அமைப்புகள். முஸ்லிம் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி முடிவு செய்துகொண்டால், படத்தை வெளியிட அரசு உதவும் என்றார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் இப்படம் வெளியானது. தடை விதிக்கப் போராடியவர்களோடு பேச்சுவார்த்தை நடந்தது. படத்தைப் பார்த்து, வெட்ட வேண்டிய காட்சிகள் பட்டியலை கமலஹாசனிடம் நீட்டினார்கள். ஏழு காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.   

கத்தி 

பூஜை போட்ட நாள் முதலே பிரச்னைகளைச் சந்தித்தது ‘கத்தி’ படம் . இப்படத்தைத் தயாரிக்கும் ‘லைக்கா’ நிறுவனம் இலங்கையைச் சார்ந்தது என்ற செய்தி பரவ, படத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் ஆனது. பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்க, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாகரனும் இணைந்து, ‘லைக்கா நிறுவனத்திற்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்பதை அரசியல் தலைவர்களைச் சந்தித்து விளக்கினார்கள். ஆனாலும் பிரச்னை தொடர்ந்தது. ‘லைக்கா’ நிறுவனமே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, தங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என ஆதாரங்களைக் காட்டினார்கள். பிரச்னை தீரவில்லை. 65 தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘கத்தி’ படத்தின் மீது வழக்கு தொடுத்தார்கள். ’சென்சார் செய்யப்பட்ட பிறகே ஒரு படத்தின் மீது வழக்கு தொடுக்கவேண்டும். தயாராகிக்கொண்டிருக்கும்போதே வழக்கு தொடுப்பது சரியாகாது’ என வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட, சென்னையில் உள்ள இரு திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பிறகு, பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, படம் வெளியானது.

லிங்கா 

‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்டதில் நஷ்டம் அடைந்ததாக, விநியோகஸ்தர்கள் தொடங்கிய பிரச்னைகள்தான், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து புரையோடி நின்றது. படத்தினால் பெரும் நஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் போராட்டத்தைத் தொடங்க, பேச்சுவார்த்தை நடந்து ரஜினிகாந்த் சார்பாக குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. கொடுத்த பணம் முழுமையாக விநியோகஸ்தர்களுக்கு வந்து சேரவில்லை என மீண்டும் பிரச்னை தொடர்ந்தது. சேரவேண்டிய பணத்தைத் தரவில்லை என தயாரிப்பாளர் தாணு மீது, சிங்காரவேலன் என்பவர் புகார் கொடுத்தார். பிறகு, முடிவுக்கு வராமலேயே ‘லிங்கா’ பிரச்னை முடங்கியது.

புலி 

‘புலி’ படத்திற்கோ, ரிலீஸுக்கு முந்தைய நாள் தொடங்கியது பிரச்னை. படத்திற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்றாலும், படத்தின் தயாரிப்பாளர்கள் வீடுகளில் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நாள் நடந்த வருமான வரித்துறை சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால், பட ரிலீஸுக்கான வேலைகளைச் செய்யமுடியவில்லை என தயாரிப்பாளர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இதனால், பல்வேறு திரையரங்குகளில் ‘புலி’ படத்தின் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

உத்தமவில்லன் 

கமல் படத்திற்குப் பிரச்னை வரவில்லை என்றால்தான் ஆச்சரியமே. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு இஸ்லாமியர்கள் என்றால், பெருமாளின் அவதாரத்தைக் கொச்சைப்படுத்துவதாக ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இந்து அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, ரிலீஸுக்குத் தயாரானபோது, ‘பாகுபலி-2’வுக்கு ஏற்பட்ட அதே தயாரிப்பாளர் - விநியோகஸ்தர்கள் பிரச்னை வந்தது. இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டு, ரிலீஸ் ஆன அன்று சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தயாரிப்பாளர் -  விநியோகஸ்தர்கள் கலந்துபேசி... பிறகே, பிரச்னைக்கு சுமூக முடிவு கிடைத்தது.

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு