Published:Updated:

‘என்னைய திட்டணும்னா திட்டிக்கங்க!’ - இப்படிக்கு தல-தளபதி ரசிகன்

தார்மிக் லீ
‘என்னைய திட்டணும்னா திட்டிக்கங்க!’ - இப்படிக்கு தல-தளபதி ரசிகன்
‘என்னைய திட்டணும்னா திட்டிக்கங்க!’ - இப்படிக்கு தல-தளபதி ரசிகன்

‘என்னைய திட்டணும்னா திட்டிக்கங்க!’ - இப்படிக்கு தல-தளபதி ரசிகன்

ஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் அப்படி என்னதான் வாய்க்கால் தகறாறுன்னே தெரியலை. பல வருஷமா இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு. ஏதாவது ட்ரெண்ட் இல்லேன்னா கொஞ்ச நாளைக்கு இதைக் கொளுத்திப் போடுவோம்னு சமூக வலைதளங்களில் நிறைய குரூப்கள் சுத்திக்கிட்டு இருக்கு. இவ்வளவு ஏன்... இதையே வேலையாக வைத்து சுத்திக்கிட்ட இருக்க ஆட்கள் எல்லாம் கூட இருக்காங்க. இதைப் படிச்சிட்டு கூட திட்டத்தான் செய்வீங்க... ஆனால், நான் நாஞ்சில் சம்பத் மாதிரி போய்க்கிட்டே இருப்பேன்! 

மு.கு : எல்லா ரசிகர்களையும் குறிப்பிடவில்லை.

இருவரும் அவங்க பார்க்கிற வேலையில கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் உலகத்துல ஏதோ ஒரு மூலையில இருக்குற நாம் ஏன் பாஸ் அடிச்சுக்கணும். எல்லா கேங்லயுமே ஒரு அஜித் ஃபேனோ, விஜய் ஃபேனோ கண்டிப்பாக இருப்பான். ரெண்டு பேரும் ஒரே தட்டுலதான் சாப்பிடுவாய்ங்க, ஒண்ணாதான் ஊரும் சுத்துவாய்ங்க. அட இவ்வளவு ஏன் பாஸ் இன்னைக்கு தேதி வரைக்கும் அஜித் விஜய் என்னைக்காவது சண்டை போட்டுப் பார்த்து இருக்கீங்களா? அஜித்தைப் பற்றி விஜய்யும், விஜய்யைப் பற்றி அஜித்தும் என்ன சொல்லியிருக்காங்கன்னு உங்களுக்கு ஞாபகப் படுத்துறேன் வாங்க. 

பத்திரிக்கையாளர் ஒருவர், 'சார் உங்களுக்கும் விஜய் சாருக்கும் ஏன் க்ளாஷ் ஆகுது'னு கேட்கும் கேள்விக்கு அஜித் கூறிய பதில் இது. 'சார் நாங்க என்னைக்குமே எதிரிங்க கிடையாது. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் போட்டி, பொறாமை எல்லாமே இருக்குறதுதான் சார்... ஆனா பெர்சனலா அவரை பாதிக்காத வரைக்கும் நல்லது. எந்த அளவுக்கு எங்களுக்குள் போட்டி இருக்கோ அதே அளவுக்கு நட்பும் இருக்கு சார்.' என முடித்துக் கொண்டார். இது அஜித்தை பத்தி விஜய் கூறியது. 'அஜித்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவரோட தன்னம்பிக்கை'. பிறகு ஒரு டி.வி ஷோவில் 'நீங்களும் அஜித்தும் சேர்ந்து படம் பண்ணுவீங்களா?' என்ற கேள்விக்கு 'அது இயக்குநர்கள் கையிலதான் இருக்கு... ரெண்டு பேருக்கும் தகுந்த மாதிரி அவர்களிடம் கதை இருந்தால் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம்.' என்று குறிப்பிட்டார். இப்படி உதாரணங்களை அடுக்க நிறைய விஷயம் இருக்கு பாஸ். 'எங்க தலதான் கெத்து எவ்வளவு பெருந்தன்மை பார்த்தியா?'னு ஒரு கூட்டமும் 'உங்களவிட நாங்கதான் டாவ் கெத்து'னு ஒரு கூட்டமும் வாராவாரம் போர் அடிச்சா கிளம்பிடுமேன்னுதான் பயம்! வேற ஒண்ணும் இல்ல. 

இந்த காத்துல கம்பு சுத்துற சண்டை எங்கு ஆரம்பிக்குதுன்னுதான் தெரியலை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்ல ஆரம்பிச்சு படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் நடக்குது. ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் சண்டை போடுற மாதிரி இருந்தா பரவாயில்லையே. பிரபலமான ஃபேஸ்புக் பக்கங்கள்ல அஜித், விஜய் சம்பந்தப்பட்ட போஸ்டில் கமென்ட் பாக்ஸுக்குள் போய்ப் பார்த்தா, 'என்ன குருநாதா... புது ஐட்டமா எரிஞ்சிருக்காய்ங்க...' என்பதுபோல் ஸ்க்ரோல் பண்ணப் பண்ண வந்துக்கிட்டே இருக்கும். அதில் கடுப்பாகி ரெண்டு பக்க ரசிகர்களுமே திட்டி போஸ்ட் போட இணையதளமே போர்க்களமாகக் காட்சியளிக்கும்.  டப்ஸ்மாஷ் அப்ளிகேஷனை ஓபன் பண்ணி ஒரு 10 செகண்ட் வீடியோ ட்ரை பண்ற நமக்கே அல்லு விடுதே... இத்தனைக்கும் அது வேற ஆளோட குரலை எடுத்துப் பண்றதுதான். அதுக்கே மூச்சு வாங்கிடும். இதுல தனக்குன்னு ஒரு அடையாளத்தை உண்டாக்கி, ரசிகர்களை உருவாக்குறது எவ்வளவு சிரமம்?  

நம்மகிட்ட இருக்கிறது ஒரு ஜியோ சிம்மும், ஓட்டை ஆண்ட்ராய்டு போனும்தான். 'நான் பணம் கொடுத்து படம் பாக்குறேன்... அதனால எனக்கு குறை சொல்லும் உரிமை இருக்கு'னு கெட்ட வார்த்தையில தானே என்னைத் திட்டுறீங்க? படத்தை விமர்சிக்கக் காசு கொடுத்து படம் பார்க்கும் எல்லா ரசிகர்களுக்கும் உரிமை உண்டு. அதில் ஒரு சின்ன நியாமாவது இருக்க வேணாமா? இவர்களுக்கு மத்தியில் தலயும் பிடிக்கும், தளபதியும் பிடிக்கும்னு சொல்ற நடுநிலை மக்கள்தான் ரொம்ப பாவம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துல வர்ற சந்தானத்தோட நிலைமைதான். அந்த மெல்லிசான கோட்டுக்கு இந்தப் பக்கம் வந்தா விஜய் ரசிகர்கள் அடிச்சுத் துவைப்பாங்க, கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா அஜித் ரசிகர்கள் துவைச்சிக் காயப் போடுவாங்க. அவங்களோட லாஜிக்கெல்லாம் ஒரு விரலைக் காட்டி 'இந்த ரெண்டுல ஒண்ணு தொடு' என்ற கதைதான். பார்த்துட்டு அமைதியா இருந்துட்டு போயிட வேண்டியதுதான். 

அஜித், விஜய் பற்றிய சில மீம்ஸ், ஸ்டேட்டஸ் எல்லாம் சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். ஒருவேளை அஜித், விஜய்யே அந்த மாதிரியான விஷயங்களைப் பார்க்கும்போது வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். அப்புறம் குறைந்தது ரெண்டு நிமிஷமாவது அந்த மீம்ல இருக்கும் விஷயம் 'ஒருவேளை நாம இப்படிதான் பண்றோமா?' என்றுகூட யோசிக்க வைக்கும். 

‘அஜித்தும் விஜய்யும் ஒண்ணு... இது புரியாதவங்க வாயில மண்ணு’னு சொல்ல வரலை. இன்னும் என்னைத் திட்ட நினைக்கிறவங்க போய் தெம்பா ஒரு டீயும் பன்னும் சாப்பிட்டுட்டு வந்து  திட்டுங்க. ஐ எம் வெயிட்டிங்... என்ன நான் சொல்றது..? (அப்பாடா... ரெண்டு பக்கமும் அணைக்கட்டுன மாதிரியே போயிருவோம்..!)

படங்கள் ஆக்கம்: ஆசாத்

அடுத்த கட்டுரைக்கு