Published:Updated:

உதயமானது சுதாகர் கோஷ்டி..  ரஜினி நடத்திய விசாரணை..!

உதயமானது சுதாகர் கோஷ்டி..  ரஜினி நடத்திய விசாரணை..!
உதயமானது சுதாகர் கோஷ்டி..  ரஜினி நடத்திய விசாரணை..!

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. மாவட்டம் ஒன்றுக்கு 220 முதல் 225 பேர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். தலைக்கு ஒரு பாஸ் மட்டுமே என்கிற ரீதியில் ரஜினி தரப்பினர் கெடுபிடியாக நடந்துகொண்டனர். இதுவரை  15 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 3000 பேர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அமைதியாக நடந்தது.  இந்த வைபவம் ஐந்து நாட்கள் நடந்தது. அத்துடன் ரஜினி சந்திப்புக்கு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், 18 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க காத்திருக்கிறார்கள். ராகவேந்திரா மண்டபத்தில் திருமணம் புக் ஆகாத நாளாக பார்த்து மற்ற மாவட்ட ரசிகர்களை சென்னைக்கு அழைக்க இருக்கிறார் ரஜினி.  இந்த நிலையில், மே 22 ஆம் தேதியன்று திடீரென சுமார் 600 பேர்களுக்கு மேல் மண்டபத்தில் குவிந்தனர். இதைக்கேள்விப்பட்ட சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தினர் மண்டபத்துக்கு திரண்டு வந்தனர். ஒருகட்டத்தில் ரசிகர் மன்றத்தினர் டென்ஷன் ஆகி கூச்சல் போட்டனர்.

பிறகு நடந்ததை சென்னை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகிறார்...மே 22 ஆம் தேதியன்று மண்டபத்துக்கு ரஜினி வரும் முன்பு, அங்கே 600 பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். திருமண மண்டபத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று சொன்னார்கள். ஆனால், வந்திருந்தவர்களில் புதியவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் யாரென்று விசாரித்தபோது, ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகரும், அவரது மகனும் தனிப்பட்ட முறையில் சுமார் 450 பேர்களை அழைத்து வந்திருப்பது தெரிந்தது. யாருக்கும் பாஸ் வழங்கப்படவில்லை. சுதாகரே மண்டப வாசலுக்கு வந்து அவர்களை அழைத்துச் சென்றார். தினமும் ஃபீல்டில் கஷ்டப்படும் எங்களைப்போனற ரசிகர்கள் ஒவ்வொருவரின் தலைக்கு ஒரு பாஸ்தான் கொடுத்தார் சுதாகர். எங்கள் குடும்பத்துக்கு பாஸ் கிடையாது. ஆனால், சுதாகருக்கு வேண்டப்பட்ட பலரும் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். திருமண மண்டப கார் டிரைவர் சம்பத், அவருக்கு வேண்டிய 50 பேர்களை அழைத்து வந்திருக்கிறார். ரஜினியை புகழும் வலைதளம் ஒன்றின் பேனரில் இவர்களை அழைத்து வந்தது சுதாகரின் மகன். மண்டபத்தின் பின்பக்கம் ரஜினி காரில் இருந்து இறங்கியபோது, ”தலைவா...சுதாகர் பாலிடிக்ஸ் பண்ணுகிறார். அவரது மகனை வளர்த்துவிடுகிறார். இவர்கள் புது கோஷ்டியை மன்றத்தில் உருவாக்குகிறார்கள். விசாரித்து நடவடிக்கை எடுங்கள்”, என்று ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சைதை ரவி என்பவர் கத்தியபடி ரஜினியை நோக்கி ஒடினார். காரில் இருந்தபடியே, வெளியில் நடப்பதை கவனித்தபடி இறங்கிச் சென்றிருக்கிறார். மேடை ஏறிய ரஜினி டென்ஷன் ஆகிவிட்டாராம். ”300-350 பேர்கள்தானே வருவதாக நேற்று என்னிடம் சொன்னீர்கள். இங்கே ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்களே?”, என்று அருகில் இருந்தவர்களிடம் கோபப்பட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள் சுதாகரை கைகாட்டியிருக்கிறார்கள். அவர் மீது கோபத்தை உடனடியாக காட்டாமல், வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு கிளம்பிப்போய்விட்டாராம். காரில் போகும்போது, மண்டப பொறுப்பாளரை போனில் கூப்பிட்டு, ”ஐந்து நாள்களாக எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காக நடந்ததே?...இன்று ஏன் குளறுபடியானது. நாளை இதுபற்றி விசாரிக்க வருகிறேன்” என்று சொல்லி லையனை துண்டித்தாராம். அதன்படி, இன்று (23.5.17) அன்று காலையில் திருமண மண்டபத்துக்கு நேரில் வந்து அங்கிருந்தவர்களை தனித்தனியாக அழைத்து விசாரித்தாராம்.

ரஜினி நடத்திய விசாரணை பற்றி அவரது ரசிகர் மன்ற பிரமுகர்களிடம் கேட்டபோது, "எங்களைப் பொறுத்தவரை, ரஜினியின் ரசிகர் மன்றத்தினருக்குத்தான் முதல் மரியாதை. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மன்றத்தினரை சந்தித்துவிட்டு, பிறகு இணையதள குரூப்பினர், ராகவேந்திரா மண்டப ஊழியர்களைச் சந்திக்க சுதாகர் விட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. ரஜினி சந்திப்புக்காக 18 மாவட்ட மன்றத்தினர் காத்திருக்கிறோம். இந்த நிலையில், ரஜினி சந்திக்காத மாவட்டங்களைச் சேர்ந்த இணையதள குரூப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட படத்தை சமூக வளைதளங்களில் பரவ விட்டனர். இதைப்பார்தது ரசிகர்கள் பலரும் குழப்பம் அடைந்தனர். யார் இவர்கள்? திடீரென முளைக்கிறார்களே? என்று எங்களிடம் விசாரித்தனர். இணையதள குரூப்பில் உள்ளவர்களுக்கும் ரசிகர் மன்றத்துக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. ஆனால், அவர்கள் ரஜினியை சந்தித்து சுதாகர் ரூட்டைப் பிடித்து! ரஜினிக்கு எல்லாமே இவர்தான் என்று நினைக்கும் சுதாகர் தனக்கென ஒரு கோஷ்டியை புதியதாக உருவாக்கிவிட்டார். அவரது மகன் பின்னணியில் இருக்கிறார். இதைத்தான் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். நிச்சயமாக அவர் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்றனர். 

2008-ம் வருடத்துக்கு முன்பு வரை, ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக சத்தியநாராயணா செயல்பட்டு வந்தார். அவரும் தனக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டியை உருவாக்கினார். சென்னையில் ரசிகர்களை ரஜினி சந்தித்தபோது சத்தியநாராயணா கோஷ்டியை சேர்ந்தவர்களால் பிரச்னை ஏற்பட்டது. அத்தோடு, சத்தியநாராயணாவுக்கு ஒரு கும்பிடு போட்டு ரசிகர் மனறத்தை விட்டு அனுப்பிவிட்டார் ரஜினி. காலியான அந்த இடத்தில் சுதாகரை உட்கார வைத்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக திரைமறைவில் அமைதியாக செயல்பட்டு வந்தார் சுதாகர். ரஜினியின் அரசியல் பேச்சுக்குப் பிறகு மன்றத்தினர் இடையே புது எழுச்சி கிளம்பியிருக்கிறது. கரைபுரண்டு வரும் ரசிகர் கும்பலை கண்டவுடன் உற்சாகமாகிவிட்டார். ரசிகர் மன்றத்தினர் தவிர, இணையதள பேனரில் ரசிகர்களை வளர்த்து வருகிறார் சுதாகர்" என்கிறார்கள்.

இதுபற்றி சுதாகர் தரப்பினரிடம் நாம் கேட்டபோது, "சத்தியநாரயணா தரப்பினர் வீண் வதந்தியைக் கிளப்பிவிடுகிறார்கள். ரஜினியிடம் இணையதள பேனரில் ரசிகர்கள் இருப்பதை முன்கூட்டியே எடுத்துச் சொல்லித்தான் வரவழைத்தார் சுதாகர்" என்கிறார்கள்.

அதெல்லாம் சரிதான்! அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினர் சந்திப்புக்குப் பிறகு இணையதள ரசிகர்களை அழைத்திருக்கலாமே...மிஸ்டர் சுதாகர்! இடைச்செருகலாக நீங்கள் திணித்ததுதான் பிரச்னையாகிவிட்டது. ரஜினி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அறிய காத்திருக்கிறோம்.