Published:Updated:

புதுப்பேட்டை... தவிர்க்க முடியாத தமிழ் சினிமா...! ஏன்? #11YearsOfPudhupettai #VikatanExclusive

புதுப்பேட்டை... தவிர்க்க முடியாத தமிழ் சினிமா...! ஏன்? #11YearsOfPudhupettai #VikatanExclusive
புதுப்பேட்டை... தவிர்க்க முடியாத தமிழ் சினிமா...! ஏன்? #11YearsOfPudhupettai #VikatanExclusive

2006-ம் ஆண்டில் தமிழ் வருடத்துக்கு என்ன பெயர் எனத் தெரியவில்லை. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 'தாதா ஆண்டு' எனக் குறிப்பிடலாம். `பட்டியல்', `ஆச்சார்யா', `புதுப்பேட்டை', `டான்சேரா', `சித்திரம் பேசுதடி', `தலைநகரம்', `தூத்துக்குடி' என ஏராளமான தாதா சினிமாக்கள் உருவாகின. பெரும்பாலான படங்கள் 'சிட்டி ஆஃப் த காட்' படத்தின் தாக்கத்துக்கு உட்பட்டவையாக இருந்தன. இப்படி ஒரே நேரத்தில் ஏராளமான தாதா படங்கள் வந்ததாலேயே சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2006 ஆண்டு மே 26-ம் தேதி வெளியான 'புதுப்பேட்டை' படமும் மகத்தான வெற்றிப்படமில்லை. ஆனால், தாதா சினிமாக்களில் தனித்துத் தெரிந்த படம். படம் வெளியான காலத்தைவிட பின்னாளில் அதிகம் பேசப்பட்ட சினிமா 'புதுப்பேட்டை'.

இந்த தாதா சினிமாக்களின் வருகைக்கு முன்னால்தான் புது ரத்தத்துடன் போலீஸ் சினிமாக்கள் வரத் தொடங்கின. தமிழில் போலீஸ் சினிமாக்கள் நீண்ட நெடுங்காலமாக வரக்கூடியவைதான். எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்கள் ஒரு படமாவது போலீஸ் படத்தில் நடித்துவிடுவார்கள். ஆனால், இவை பெரும்பாலும் ரெளடிகளிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மக்களைக் காப்பாற்றும் வழக்கமான மசாலா சினிமாக்களாகத்தான் இருக்கும்.

போலீஸ் சினிமாவுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் கௌதம் மேனன். 'என்கவுன்ட்டர்' என்பது மனித உரிமை மீறல் என்பதையே முற்றிலுமாக மறைத்து, போலீஸ் வன்முறையை நியாயப்படுத்தி 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்ற புதிய சொல்லாடலையே 'காக்க காக்க'வில் அறிமுகப்படுத்தினார் கௌதம். இந்த போலீஸ் சினிமாக்களுக்கு எதிர்வினையாக தாதா சினிமாக்கள், தாதாக்களின் பக்கமுள்ள நியாயங்களைப் பேசின.

போலீஸ் சினிமாக்களைப்போல தாதா சினிமாக்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வரலாறு உண்டு. 'தளபதி', 'நாயகன்', 'பாட்ஷா', 'கபாலி' (நாளை 'காலா'?) வரை தாதாக்கள் என்பவர்கள் பணக்காரர்களிடமிருந்து கள்ளப்பணத்தைப் பறித்து எளிய மக்களுக்கு உதவுபவர்களாக தாதாக்களைச் சித்திரிக்கும். ஆனால், 2006-ம் ஆண்டில் வெளியான 'ஆச்சார்யா', 'புதுப்பேட்டை', 'டான்சேரா' போன்ற தாதா படங்கள், இப்படி தாதாக்களை நல்லவர்களாகச் சித்திரிக்காமல், 'சமூகத்தில் ரெளடிகள் ஏன் உருவாகிறார்கள்?' என்பது குறித்து விரிவாகப் பேசின.

இந்தப் படங்களிலிருந்து தனித்துவமான சினிமாவாக 'புதுப்பேட்டை' எப்படி மாறியது?

'புதுப்பேட்டை' திரைப்படம், ஒரு ரெளடி எப்படி உருவாகிறான், அவர்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு, அவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்ட நிலை மாறி ரெளடிகள் அரசியலைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை, ரெளடிமயமான அரசியல் அறமதிப்பீடுகளை எப்படி முற்றிலுமாக அழிக்கிறது, தியாகத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள மெல்லிய கோடு, ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை... போன்றவற்றை ஆழமாகவும் அடர்த்தியாகவும் பல்வேறு பரிமாணங்களோடு பேசிய வகையில் 'புதுப்பேட்டை' முக்கியமான சினிமா.

'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்' என, செல்வராகவனின் பல படங்களைப்போல் 'புதுப்பேட்டை'யிலும் நாயகன் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன். சாதாரண ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த குமாரின் தாயை, அப்பாவே கொன்றுவிடுகிறார். அதற்குப் பிறகு குமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் சேர்ந்து வெட்டுக்குத்துப் பழகி தாதா ஆகிறான். தாதாக்கள் என்றாலே அடைமொழியோடுதான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தின்படி குமாரு, 'கொக்கி குமாரு' ஆகிறான்.

தொடக்கத்தில் ஒருவனின் கையை வெட்டுவதற்கே பயப்படும் குமாரு, 'கொக்கி குமாரு' ஆன பிறகு ரெளடி வாழ்க்கையின் அத்தனை அதிகார சுகங்களையும் அனுபவிக்கிறான். அதிலும் அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைத்த பிறகு, தன்னை ஒரு குறுநில மன்னனாக உணரத் தொடங்குகிறான். தனக்கு விசுவாசமான நண்பனின் தங்கை திருமணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுக்க வந்தவன், தானே தாலி கட்டுகிறான். தன் சொந்த அப்பாவை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கிறான்.

படிப்படியாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு படிநிலைகளை எதார்த்தத்துடனும் கலையாளுமையுடனும் இயக்கியிருப்பார் செல்வராகவன். 'இதுதான் நல்லது, இதுதான் கெட்டது' என்ற கறுப்பு, வெள்ளை சூத்திரத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, வாழ்க்கையின் சிக்கலான பரிமாணங்களை அச்சு அசலாகப் 'புதுப்பேட்டை'யில் கொண்டுவந்திருப்பார் இயக்குநர் செல்வராகவன். செல்வாவை, தமிழின் தவிர்க்க முடியாத முக்கியமான படைப்பாளி ஆக்கியதில் 'புதுப்பேட்டை'க்கு முக்கியமான இடம் உண்டு.

ஒரு கலைஞனாக, தனுஷ் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட படம் 'புதுப்பேட்டை'. 'காதல் கொண்டேன்' படத்திலேயே, 'யார் இந்தச் சிறுவன்... இவ்வளவு அற்புதமாக நடிக்கிறானே?' என்று தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் தனுஷ். 'புதுப்பேட்டை'யிலோ நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார். முதன்முதலாக ரெளடிகளுடன் பழகும்போது தன் அம்மாவைப் பற்றி அவர்கள் கிண்டலாகப் பேசியதும் கலங்கி அழுவது, முதல் வன்முறை சம்பவத்தின்போது கைகள் நடுங்கிப் பதறுவது, பாலியல் தொழிலாளியான கிருஷ்ணவேணி (சினேகா)க்குப் பிறக்கும் குழந்தை தன் சாயலில்தான் இருக்கிறதா என்று முகத்தோடு முகம்வைத்துப் பார்ப்பது, தன் குழந்தை கடத்தப்பட்டவுடன் பதறித் துடிப்பது, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நகருவதற்கு மனமின்றி அகலும் காட்சி என தனுஷ் 'கொக்கி குமாரு' என்ற மனிதனின் ரத்த சரித்திரத்தை நிகழ்த்திக்காட்டியிருப்பார்.

பாலியல் தொழிலாளியான கிருஷ்ணவேணி (சினேகா), கட்டாயத் திருமணத்துக்கு ஆளாகி கொக்கி குமார்மீது வன்மத்தையும் வெறுப்பையும் உமிழும் செல்வி (சோனியா அகர்வால்) என்ற இரண்டு பெண் கதாபாத்திரங்களும் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்தறியாத பெண் பாத்திரங்கள்.  ரெளடி பாலாசிங், அரசியல் தலைவர்களாக அழகம்பெருமாள், பிருத்விராஜ் என வாழ்க்கையின் கொடூரத்தையும் உன்னதத்தையும் பார்வையாளர்களுக்குச் சொல்லக்கூடிய வகையில் பாத்திரச் சித்திரிப்புகள் இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்தின் பலம். குறிப்பாக, 'வர்றியா' என்ற ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு ஓர் இசை ஜாலத்தையே நிகழ்த்திக்காட்டியிருப்பார் யுவன். 'புல் பேசும் பூ பேசும்' பாடலும் முக்கியமான பாடல். 

ஒரு ரெளடி 'நல்லவனாக' மாறுவதைப்போலவோ, போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மரணமடைவதைப்போலவோ காட்டியிருந்தால் 'புதுப்பேட்டை'யும் வழக்கமான தாதா சினிமாக்களில் ஒன்றாகியிருக்கும். ஆனால், வாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்ற ரெளடி 'கொக்கி குமாரு' தமிழக அமைச்சராவதுதான் 'புதுப்பேட்டை'யை ஒரு பிளாக் ஹ்யூமர் சினிமாவாக நகர்த்துகிறது. உண்மையில், தமிழக அரசியலின் எதார்த்தமும் அதுவாகத்தானே இருக்கிறது.

இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் யோசித்தாலும் 'புதுப்பேட்டை' தமிழின் தவிர்க்க முடியாத, முக்கியமான சினிமாவாக இருக்கும். செல்வராகவன் என்ற மகத்தான இயக்குநரும், தனுஷ் என்ற மகத்தான நடிகரும் அதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பார்கள்.