என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

இது முடிவல்ல... ஆரம்பம்!

ரீ.சிவக்குமார்ஓவியம் : ஹாசிப்கான்

##~##

''இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்!'' உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தமிழக அரசின் ஆணவப் பிடிவாதம், தனியார் பள்ளிகளின் வியாபார வேட்டை இரண்டுக்கும் விழுந்த சாட்டை அடி! சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றான இது, நிச்சயமாகச் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நேசிக்கும் அனைவருக்குமான வெற்றிதான். ஆனால், இது மட்டுமே போதுமானதா?

இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். ''இது அடுத்த கட்டத்தை நோக்கிய ஓர் அடி என்பதைத் தவிர, கடக்க வேண்டிய தூரங்கள் நிறைய. இப்போதைக்குப் பொதுப் பாடத் திட்டம் மட்டும்தான் வந்திருக்கிறது. பயிற்றுமொழி, ஆசிரியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என கல்வித் துறை சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத் துவதற்குக் கூடுதல் நிதி

இது முடிவல்ல... ஆரம்பம்!

ஒதுக்கவில்லை. ஆசிரியர் நியமனம்பற்றிய அறிவிப்பும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னும் தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட வில்லை. இலவசக் கல்வி என்பது தீராக் கனவாகவே தேங்கி நிற்கிறது!'' என்கிறார் கல்வியாளர் ராஜகோபால்.

''இப்போது நடைமுறைக்கு வந்துள்ள பொதுப் பாடத் திட்டம் என்பது சமச்சீர்க் கல்வி அல்லது பொதுக் கல்வியின் ஓர் அம்சமே தவிர, இதுவே முழுமையான சமச்சீர்க் கல்வி அல்ல!'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

''பொதுப் பாடத் திட்டம், பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி இவைதான் சமச்சீர்க் கல்வியின் முக்கியமான மூன்று அம்சங்கள். இதில் பொதுப் பள்ளி முறை என்பது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் உரிமை. மேற்கத்திய நாடுகளில் இந்தப் பொதுப் பள்ளி முறை இருப்பதால்தான், ஒரு ஐரோப்பிய நாட்டில் ஆங்கிலேயக் குழந்தைகளும் நம் ஈழத் தமிழ் அகதிக் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்க இயலுகிறது. ஆனால், நம் நாட்டில் அத்தகைய நிலை இல்லை. அடுத்ததாக, தாய்மொழி வழிக் கல்வி. ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் கற்றுத்தரப் பட வேண்டும் என்பது உலகம் முழுக்கக் கல்வியாளர்களாலும் அறிவியலாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. தமிழகத்தில், தமிழே படிக்காமல் ஒருவர் உயர் கல்வி வரை படித்து முடித்துவிட முடியும் என்பது உலகத்தில் வேறு எங்கும் இல்லாத, அவமானத்துக்கு உரிய அவலம்.

இது முடிவல்ல... ஆரம்பம்!

சமச்சீர்க் கல்வி குறித்த 2009 உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் பல தில்லுமுல்லுகளைச் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 'பாடத் திட்டங் கள் ஒன்றாக இருந்தாலும், பாட நூல் கள் வேறாக இருக்கலாம்’ என்பது அந்தத் தீர்ப்பில் உள்ள ஓர் அம்சம். 'அம்பேத்கர் பற்றிப் பாடம் இருக்க வேண்டும்’ என்பது பாடத் திட்டம் என்றால், அம்பேத்கர் பற்றி எப்படி வேண்டுமானாலும் ஒருவர் பாடத்தை எழுதிவிட முடியும்.  'அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தக்கூடிய சூழல் இப்போது இல்லை என்றாலும், தனியார் பள்ளிகள் ஓரளவேனும் அரசுக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 'தனியார் பள்ளிகளில்தான் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதனால்தான் பெற் றோர்கள், அரசுப் பள்ளிகளில் குழந்தை களைச் சேர்ப்பது இல்லை’ என்கிற கருத்து தவறு. கும்பகோணத்தில் 93 குழந்தைகள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனது ஒரு தனியார் பள்ளியில்தான். அந்த மாதிரியான விபத்துகள் அரசுப் பள்ளிகளில் நடப்பது இல்லை. நம் பெற்றோர்களுக்குப் பல தப்பான அபிப்ராயங்கள் உள்ளன. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நடுத்தர வர்க்கத்தினர், அமெரிக்காவில் 25 சதவிகித மாணவர்கள் மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்!

அதேபோல், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களிடம் அவர்களின் பொறுப்புகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சாதிப் பாகுபாடுகள், பாலினப் பாகு பாடுகள் பற்றிய வகுப்புகளை அரசும் சங்கங்களும் அடிக்கடி நடத்த வேண்டும். இவை வகுப்பறைகளில் ஆசிரியர்களே அத்தகைய பாகுபாடுகளைக் காட்டுவதைக் குறைக்கும்.

மேலும், இந்த இரண்டு மாதத் தாமதத்தை ஈடுகட்ட விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்துவது, சிறப்பு வகுப்புகளைத் திணிப்பது என்று மாணவர்களின் பளுவைக் கூட்ட அனுமதிக்கக் கூடாது. வேண்டுமானால், அரசுத் தேர்வை ஒரு மாதம் தள்ளி நடத்தலாமே தவிர, தங்கள் தவறுகளுக்கான பொறுப்பை - குழந்தைகள் தலையில் சுமத்தக் கூடாது!'' என்கிறார் அ.மார்க்ஸ்.

''1966-ல் வெளியான கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை, சுதந்திர இந்தியாவில் கல்வித் துறையில் ஒரு முக்கியமான வழிகாட்டும் ஆவணம். அதன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். 'ஏழைக் குழந்தைகளையும் வசதி படைத்த குழந்தைகளையும் பிரித்துவைப்பது, வசதி படைத்த குழந்தைகளுக்கும்கூடத் தீங்கானது. ஏனெனில், முன்னேறிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள், தமது பிள்ளைகளை ஏழைக் குழந்தைகளின் வாழ்வையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதில் இருந்தும், யதார்த்த வாழ்வைப் புரிந்துகொள்வதில் இருந்தும் தடுக்கின்றனர்’ என்கிறது அந்த அறிக்கை. எனவே, இந்தப் பொதுப் பாடத்திட்டம் என்பதை முதல்படியாகக்கொண்டு படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். 1:20 என்கிற விகிதத்தில் ஆசிரியர் நியமனம், 85 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே படிப்பதால், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஸ்மார்ட் போர்டு, எல்.சி.டி புரொஜெக்டர் போன்ற துணைக் கருவிகளை அரசுப் பள்ளிகளிலும் கொண்டுவருவது ஆகியவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!'' என்கிறார் முன்னாள் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் சிவக்குமார்.

மேலும், மாற்றுக் கல்வி, விடுதலைக் கல்வி போன்ற கருத்துக்கள் கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகக் கல்வியாளர்களால் வலியுறுத்தப்படுபவை. உதாரணமாக, ஒரு குடிசைப் பகுதியில் இருந்து வரும் குழந்தைக்குச் சடங்குத்தனமாக 'ஆனா... ஆவன்னா’ கற்றுக் கொடுக்காமல், அந்தக் குழந்தைக்குக் 'குடிசை’ என்பது தெரிந்த வார்த்தை என்றால், அதில் இருந்தே எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம். கல்வி என்பதை வெளியில் இருக்கும் பாடப் புத்தகத்தில் இருந்து தொடங்காமல், தன்னிடம் இருந்தும் தன்னைச் சுற்றியுள்ள சூழலில் இருந்தும் கற்றுக்கொள்வது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அதிகார உறவுகளை மாற்றியமைப்பது, கற்றல்-கற்பித்தல் என்பது எப்போதும் ஒரு வழிப் பாதையாக இல்லாமல் பகிர்ந்துகொள்ளலாக மாறுவது ஆகியவை மாற்றுக் கல்வியின் முக்கியமான அம்சங்கள். இவற்றின் ஒரு தொடக்கப் புள்ளியாகக் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையைச் சொல்லலாம். ஆனால், இந்த செயல் வழிக் கற்றல் முறை அரசுப் பள்ளிகளில் உள்ளதே தவிர, தனியார் பள்ளிகளில் இல்லை. அதைத் தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது, பாடப் புத்தகங்களின் சுமையைக் குறைப்பது போன்றவை சிறந்த வழிகள்.

'கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியம் எல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத்  தகுதிப்படுத்துவது என்பதே ஆகும்’ என்றார் பெரியார். அத்தகைய விடுதலை உணர்வை அளிக்காவிட்டால், கல்வி என்பது வெறுமனே வேலைவாய்ப்புக்கான காகிதங்களை உற்பத்தி செய்யும் வெற்று வேலையாகவே இருக்கும்!