என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

##~##

வி.மலர், தேனி.

 ''பாலா, ஷங்கர், மணிரத்னம் - ஒவ்வொருவரின் வொர்க் நேச்சர் பத்தி சொல்லுங்களேன்?''  

''இவங்க இல்லாம, இந்த விக்ரம் இல்லை. இந்த மூணு பேரும் எனக்குள் வித்தியாசமான கலர், ரசனையான ஃப்ளேவர் சேர்த்தாங்க.

பாலா என்னோட பிதாமகன். நான் வேற... பாலா வேற இல்லை. அடுத்து நாங்க சேர்ந்து பண்ணப்போற படத்துல என் கேரக்டர் எப்படி இருக்கணும்னு எங்க ரெண்டு பேர்கிட்டயும் தனித்தனியாக கேளுங்க. சொல்லிவெச்ச மாதிரி ஒரே பதில் தான் வரும். அந்த அளவுக்கு எங்களுக்குள் வேவ்லெங்த் செட் ஆகியிருக்கும். பாலா வோட செட்ல நான் நடிகன் மட்டும் கிடையாது. அசிஸ்டென்ட் டைரக்டரும்கூட!

விகடன் மேடை - விக்ரம்

'பிதாமகன்’ல நான் பார்த்த வேலைகளைப் பார்த்துட்டு 'என்ன, உன் பேரை கோ டைரக்டர்னு போட்ரலாமா?’னு கேட்டார். அந்த அளவுக்கு அவர் யூனிட்ல எனக்கு சர்வ சுதந்திரம் இருக்கும்.

ஷங்கரோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமரை யாராலும் பீட் பண்ண முடியாது. பேசிட்டே இருக்கிறப்ப, சடார்னு ஒரு ஜோக் அடிப்பார். சிரிச்சு முடிச்சதும் யோசிச்சா, அதுல பயங்கரமா ஒரு ட்விஸ்ட் வெச்சிருப்பார். ஒரு நாமம் போடுற ஸீன் எடுக்கணும்னா... பெர்ஃபெக்டா நாமம் போடுற ஆளை வரவெச்சு, நாமக்கட்டி எங்கே பெஸ்ட்டா இருக்குமோ அங்கே இருந்து வரவெச்சுனு எல்லாமே ரியல் லைஃப் பிரதிபலிப்புகளா இருக்கும். ஒரு ராம்ப் வாக்னு யோசிச்சா, அதுக்கான ஸ்டேஜ், லைட்டிங், காஸ்ட்யூம், மாடல்ஸ்னு எல்லாமே இந்தியாவிலேயே பெஸ்ட்டா இருக்கணும்னு மெனக்கெடுவார். 'அதெல்லாம் செட்தான்... ஷூட்டிங் முடிஞ்ச தும் கலைச்சுருவாங்க’ங்கிற நினைப்பே அவருக்கு இருக்காதோனு தோணும். அந்த அளவு பெர்ஃபெக்ஷனுக்கு மெனக் கெடுவார். ரெண்டு வருஷம் படம் எடுக்கிறார்னா, அதுக்கு மூணு வருஷம் ஹோம் வொர்க் பண்ணி இருப்பார். ஒரு ஷாட் சம்பந்தமான எல்லா விஷயத்திலும் அட்வான்ஸ்டு லெவல் அறிவோட இருப்பார். அவர்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. அவரை அவ்வளவு சாமான்யத்தில் திருப்திப் படுத்தவும் முடியாது!

மணி சார்... ஒரு டைரக்டர்கூட கணக்கு வழக்கே இல்லாமல் எத்தனை படமும் நடிக்கலாம்னு மணி சார்கிட்டதான் தோணும். ஜீனியஸ் இயக்குநர். 'ராவணன்’ ஷூட்டிங். நட்டநடுக் காடு... 'சோ...’னு கொட்டுது மழை. கேமராமேன்கிட்ட மணி சார் ஸீன் சொல்றார். கேமரா எங்கெல்லாம் ட்ராவல் பண்ணணும், எந்த இலையோட ஈரத்தை எல்லாம் கவர் பண்ணணும், எப்படி ஐஸ்வர்யா முகத்தோட ஒரு பாதி, என் முகத்துல மறு பாதி ஃபோகஸ் பண்ணணும்னு அவர் டீடெய்ல் பண்ற ஸ்டைலே அவ்வளவு பொயட்டிக்கா இருக்கும். அவர் ஷாட் சொல்றப்ப, அங்கே இங்கே சுத்திட்டு இருக்கிற அசிஸ்டென்ட் டைரக்டர்ஸை, 'யேய்! அங்கே போப்பா... டைரக்டர் ஷாட் சொல்றதை மிஸ் பண்ணிட்டு, நீ வேற என்ன கத்துக்கப்போற இந்த யூனிட்ல?’னு விரட்டுவேன்.

விகடன் மேடை - விக்ரம்

இவங்க எல்லார்கூடவும் படம் பண்ண முடிஞ்சது நான் செஞ்ச அதிர்ஷ்டம். காலேஜ் லைஃப்ல செமஸ்டர் லீவு சமயம்தான் ரொம்ப போர் அடிக்கும். 'எப்படா காலேஜ் திறக்கும். பசங்களோட ஆட்டம் போடலாம்’னு காத்துட்டே இருப்போமே... அப்படித்தான், எப்படா திரும்ப இவங்க ஷூட்டிங்ல கலந்துக்குவோம்னு காத்துட்டே இருக்கேன்!''  

எஸ்.குமுதா, திருச்சி-14.

''என்னதான் பெர்ஃபெக்ட்டா செய்துஇருந்தாலும் 'I AM SAM’ படத்தைத் தழுவித் தான் 'தெய்வத் திருமகள்’ படம் செய்ய வேண்டுமா? நம்மிடம் சொந்தச் சரக்கே இல்லையா?''

''தழுவல்னு சொல்றீங்க நீங்க! 'inspiration’னு சொல்றேன் நான். ஒரு பாப்பாவோட அப்பாவும் பாப்பாவா இருந்தா எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எவ்வளவு லல்வி லைன். அப்பா - பொண்ணு, அப்பா - மகன் ஏற்கெனவே தமிழில் பல ப்ளாட்களில் சினிமா வந்திருந்தாலும், இது ரொம்பவே புதுசா இருந்தது. 'I AM SAM’ படம் தந்த பாதிப்பில் உருவான சினிமா 'தெய்வத் திருமகள்’. அந்தப் படத்தின் பலூன் ஷாட்டும், ஷூ வாங்கும் காட்சிகளும் மட்டும்தான் தெய்வத் திருமகளில் ரிப்பீட் ஆகி இருக்கும். அந்த அழகான ஸீன்களுக்கு ரீ-ப்ளேஸ்மென்ட் கிடைக்கலை. மத்தபடி, எல்லாமே தமிழுக்காகவே செஞ்ச ஸீன்கள்.  

விகடன் மேடை - விக்ரம்

பூசான் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஸ்க்ரீன் பண்ண 'தெய்வத் திருமகள்’ செலெக்ட் ஆகியிருக்கு. தேர்வுக் குழு உறுப்பினரான கிம் படம் பார்த்துட்டு, நெகிழ்ந்து போய் வந்திருக்கார். போன்ல பேசினார். 'I AM SAM’ படத்தோட இன்ஸ்பிரேஷன்னு சொன்னாங்க. கொஞ்சம் யோசனையோடுதான் நான் படம் பார்த்தேன். ஆனா, இந்தப் படம் மொத்தமே வித்தியாசமா இருக்கு. அந்தப் படத்தோட சென்ட்டிமென்ட் லெவலை 'தெய்வத் திருமகள்’ அடுத்த லெவலுக்குக் கொண்டுபோயிருச்சு. நான் ஆசிய சினிமாக்களின் பிரிவில் படத்தை பிளேஸ் பண்ணலாம்னு ஐடியா வெச்சிருந்தேன். ஆனா, இப்போ ஓப்பன் கேட்டகிரியில் உலக சினிமாக்களுக்கான வரிசையில் பிளேஸ் பண்ணி இருக்கேன். ஹாட்ஸ் ஆஃப் டு த டீம்’னு பாராட்டினார். எல்லாப் பெருமையும் டைரக்டர் விஜய்க்குத்தான் போய்ச் சேரும். இப்படி ஒரு கேரக்டரை நான் மிஸ் பண்ணியிருந்தால் தான் வருந்தியிருப்பேன்.

உலகம் முழுக்க இந்த இன்ஸ்பிரேஷன் ட்ரெண்ட் இருக்கத்தான் செய்யுது. நீங்க இதுக்கே இப்படிச் சொல்றீங்க. ஆனா, தமிழ் சினிமாவின் கிளாஸிக் படங்களை அப்படியே ஸீன் பை ஸீன் உட்டாலக்கடி பண்ற இயக்குநர்களும் இருக்காங்களே... அவங்களை என்ன பண்ணப்போறீங்க? சொந்தச் சரக்குல நம்மை யாரும் அடிச்சுக்க முடியாது பாஸ்!''  

என்.காளிதாஸ், சிதம்பரம்.

''உண்மையைச் சொல்லுங்கள்... உங்க ஒரிஜினல் வயசு என்ன?''

''ஆ...ஆங்... ஒண்ணு, ரெண்டு, மூணு, பத்து, ட்வெல்வ், டொன்ட்டி ஃபோர்... ஆங்... ஆங்... ஸாரி காளிதாஸ்... முப்பது வயசுக்கு மேல ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிடும்னு சொல்வாங்கள்ல. எனக்கும் என் வயசு மறந்துபோச்சு ஹரி!''  

பி.கீர்த்தனா, கரியாப்பட்டி.

''நீங்கள் படம் இயக்கினால், யார் ஹீரோ?''

''பாலா!

ஏன்னா, அவரோட முதல் படத்துல நான் தான் ஹீரோ. அப்போ என்னோட முதல் படத்துல அவர்தானே ஹீரோவா இருக்க முடியும்!

ஓ.கே... ஓ.கே. ஏமாத்தாமப் பதில் சொல்லவா? 'THE DIRTY DOZEN’னு ஒரு படம். படம் முழுக்க‌ 12 பேர் ஹீரோயிஸம் பண்ணு வாங்க. அந்த மாதிரி கோலிவுட்டின் 12 ஹீரோக்களை நடிக்கவெச்சு, ஒரு படம் இயக்கினா... எப்பிடி இருக்கும்!''

லட்சுமி மகன், கும்பகோணம்.

 ''நீங்க நடிச்சதில் 'இந்தப் படம் நிச்சயம் ஓடும்’னு நீங்க எதிர்பார்த்து ஏமாந்த படம் (அ) படங்கள் என்னென்ன விக்ரம்?''

''ம்ம்ம்... நிச்சயமா 'படங்கள்’தான்! 'சாமுராய்’, 'கிங்’, 'பீமா’, 'மஜா’... இந்தப் படங்கள் ஏன் ஹிட் அடிக்கலைனு இப்ப வரை எனக்குப் புரியவே இல்லை. இந்தப் படங்களை இப்பவும் டி.வி-யில் டெலிகாஸ்ட் பண்ணா, எல்லாரும் ரசிச்சுப் பார்க்கிறாங்க. ஆனா, அது ரிலீஸான சமயம் ஏன் அந்த ரிசப்ஷன் இல்லை? 'சாமுராய்’ படத்தில் அவ்வளவு ஈடுபாட்டோடு நடிச்சேன். அப்போ அந்த டீமுக்கே அந்தப் படம்பெரிய நம்பிக்கை. ஆனா, ஒரே சமயத்தில் ரிலீஸான 'சிட்டிசன்’, 'சாமுராய்’ ரெண்டு படங்களும் கிளாஷ் ஆயிருச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு, பாலாஜி சக்திவேல் 'காதல்’னு ஒரு கிளாஸிக் ஹிட் கொடுத்தார்.

'கிங்’ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். அவ்வளவு லைஃப் இருக்கும் அந்தப் படத்தில். இப்போ எல்லாரும் கொண்டாடுற சென்ட்டிமென்ட் மெலோடிராமாவை அப்பவே டிரை பண்ணி இருப்போம். அதே பிரபு சாலமன் அப்புறம் 'மைனா’னு பிரமாதப்படுத்திட்டார்.

'பீமா’ ரிசல்ட்டை இப்பவும் என்னால் டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியலை. அவ்வளவு டெம்போ ஏத்திட்டு, கிளைமேக்ஸ் சரியா செட் ஆகாம, காலை வாரிருச்சு.

ஸோ, சாஃப்ட் ரொமான்டிக் காமெடி 'மஜா’. ஆரம்பிச்சதுல இருந்து கலகலனு பாஸ் ஆகி கிளைமேக்ஸுக்கு வந்திரும். படத்துல நான் ரொம்ப அண்டர்ப்ளே பண்ணி இருப்பேன். சில வசனங்களை நான் பேசினா நல்லா இருக்காதுனு சொல்லி, பசுபதியைப் பேசவெச்சிருப்பேன். அந்தப் படத்துக்கு அதுதான் சரினு அப்படி நடிச்சு இருந்தேன். அதுவும் க்ளிக் ஆகலை.

ஒவ்வொரு கேரக்டருக்கும் அதே இன்வால்வ்மென்ட், உழைப்பு, சின்சியா ரிட்டினு எல்லாமே ஒரே டிகிரிதான். ஆனா,  சில கேரக்டர்கள் மட்டும் ரீச் ஆகாத மேஜிக் என்னன்னு எனக்கு இப்பவும் புரியலை. உங்களுக்குத் தெரிஞ்சா, எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்!''    

கோ.விஜயராஜன், விழுப்புரம்.

''மக்கள் திலகம், நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களுள் நீங்கள் ரீ-மேக் செய்ய விரும்பும் படங்கள் என்ன?''

''எம்.ஜி.ஆர். படம்னா யோசிக்கவே வேண்டாம்.. 'எங்க வீட்டுப் பிள்ளை’தான். நடிகர் திலகம் படம்னா... ஹ்ம்ம்.... 'நவராத்திரி’. குட் சாய்ஸ்!''

சி.மணி, மதுரை-4.

''இதுவரை செய்யாத, செய்ய நினைக்கும் கேரக்டர் என்ன?''

''டெரரா ஒரு வில்லன் ரோல் பண்ணனும் நண்பா. அவன் பயங்கர ஸ்டைலிஷா இருக்கணும், செம இன்டெலி ஜென்ட்டா இருக்கணும், கடைசி வரை ஹீரோவை ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். ஏதோ ஒரு வீக் பாயின்ட்ல ஹீரோ அவனை ஜெயிக்கிறப்போ, படம் முடிஞ்சிடணும். ஆனா, நான் வில்லனா நடிக்க ஒரு கண்டிஷன். கிளைமேக்ஸ்ல அந்த ஹீரோயின் பொண்ணு என்கூடத்தான் சேரணும். அப்படியே சூரியன் மறையுற பேக் ட்ராப்ல நானும் அந்தப் பொண்ணும் கைபிடிச்சுட்டு ஓடுற மாதிரி படம் முடியணும். இதுக்காக நான் ஹீரோகிட்ட எக்ஸ்ட்ரா நாலஞ்சு அடி கூட வாங்கிக்குறேன்.

என்ன டைரக்டர்ஸ்.... டீல் ஓ.கே-வா?''

- அடுத்த வாரம்...

 ''அரசியல்வாதிகளைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

 ''கமலுடன் உங்களுக்கு உள்ள ரிலேஷன்ஷிப் என்ன? அடிக்கடி பேசிக் கொள்வீர்களா... அல்லது விழா மேடையில் மட்டும்தானா?''

''கென்னி - விக்ரம் - சீயான்... வித்தியாசம் சொல்லுங்க?''

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - விக்ரம்