Published:Updated:

``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை!'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.

``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை!'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.
``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை!'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.

``நான் சின்ன வயசுல வக்கீல் ஆகணும், எல்லார்கூடவும் வாக்குவாதம் பண்ணணும், சண்டை போடணும்னு ஆசைப்பட்டுதான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். படிக்கப் படிக்கதான் தெரிஞ்சது, சட்டப் படிப்புமேல எனக்கு பெரிய ஆர்வம் இல்லைங்கிறது. அப்பதான் தியேட்டர் ஆர்டிஸ்டா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருந்துதான் என் லைஃப் மாறுச்சு'' என ஆர்வமாகப் பேசுகிறார் நடிகர் அமித் பார்கவ். அண்மையில் `பிக் பாஸ்' பரணிக்கு ஆதரவாகப் பேசி கவனிக்கவைத்தார். இவரிடம் நடிப்பு, சினிமா, சீரியல், `பிக் பாஸ்' பரணியுடனான நட்பு என   விரிவாகப் பேசியதிலிருந்து. 

``முதல்ல எந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது?''

``நடிக்க எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்த சமயத்துலேயே சீரியலில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஆனா, நான் தேர்ந்தெடுத்தது ராமராக நடிக்க. ஆமாங்க, `இராமாயணம்' சீரியலில் ராமரா நடிக்கக் கூப்பிட்டாங்க. நடிச்சேன். இனிமே என் கரியர் நடிப்புதான்னு அப்பதான் முடிவுபண்ணேன். அடுத்து தமிழ் சினிமாவுக்கு வரணும்னுதான் ஆசைப்படுதான் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்தேன்.''

``தமிழ் சினிமாவில் நடிக்க வரணும்னு ஏன் முடிவுபண்ணீங்க?''

``ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானில் தொடங்கி இளையராஜா, மணிரத்னம், ஷங்கர், கமல் போன்ற பெரிய மனிதர்களும் இங்கேதானே இருக்காங்க. அப்படி இந்த உலகத்துக்கு நிறைய கலைஞர்களைக் கொடுத்தது தமிழ் சினிமாதான். இதுல நானும் இருக்கணும்; சேவையும் செய்யணும்னு நினைச்சுதான் இங்கே வந்தேன்.''

``யாரைப்போல வர ஆசை?''

``என் நோக்கம் ஒண்ணுதான். அது நடிக்கணும்னு என்பது. மற்றபடி நான் விஜய் மாதிரி ஆகணும். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஐ லவ் ஆக்டிங். ஐ லவ் சினிமா. எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு ஆசை. பிரகாஷ்ராஜ் சார் எல்லாவிதமான கேரக்டர்கள்லயும் நடிப்பார். அவருக்கு ஒரு எல்லையே இல்லை. அதே மாதிரி நானும் வரணும். அமித்தால் எல்லாவிதமான பரிமாணங்கள்லயும் நடிக்க முடியும்கிற நம்பிக்கையைக் கொண்டுவரணும். அதுதான் என் ஆசை.''

``உங்க ஃபேமிலி பற்றி?''

``நான் சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டதும் `நீ சினிமாவுக்கு எல்லாம் போகாத'னு யாரும் சொல்லலை. `நீ சினிமாவுக்குப் போய் சப்போர்ட் பண்ணு'னு சொன்னது மிகப்பெரிய விஷயம். என் ஃபேமிலிக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். என் மனைவி ஶ்ரீரஞ்சனியின் சப்போர்ட்டும் எனக்கு எப்பவும் இருக்கு. எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் முதல்ல என் மனைவிகிட்டதான் சொல்வேன். இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்.'' 

``நீங்கதான் கன்னடத்தில் வந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சியில், `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க...''
`` `பிக் பாஸ்' கன்னடா சீஸன்2-ல நான்தான் `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'. `பிக் பாஸ்' தமிழுக்கு வந்ததுக்கு அப்புறம்தான், அதெல்லாமே எனக்கு ஞாபகம் வருது. வாய்ஸ் ஆஃப் `பிக் பாஸ்' ரொம்ப சுவாரஸ்யமான வேலைங்க.''

`` `பிக் பாஸ்' தமிழில் எப்படியிருக்கு?''

``இந்தியிலும் கன்னடத்திலும் இந்த நிகழ்ச்சி பெரிய சக்சஸ். ஆனா, தமிழ்நாட்டில் `பிக் பாஸ்' நிகழ்ச்சி `Atom bomb'போல வெடிச்சிருக்கு. எங்கே திரும்பினாலும் அதைப் பற்றியே பேசிட்டிருக்காங்க. இந்த மாதிரி வரவேற்பு இருக்கும்னு நான் நினைச்சுப்பார்க்கலை. இது, ஆச்சர்யமாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.''

``இந்த நிகழ்ச்சியின் மீது அதிகமான விமர்சனம் வைக்கப்படுகிறதே?''

``கமல் சார் இதுக்கெல்லாம் தெளிவாவே பதில் சொல்லியிருக்கார். இது ஒரு சோஷியல் எக்ஸ்பிரிமென்ட். இந்த நிகழ்ச்சி, சமூகத்தின் கண்ணாடி மாதிரி. அந்தக் கண்ணாடியில் என்ன தெரியுமோ, அதுதான் உண்மை. நாமும் அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்வோம். அவங்க முதுகுக்குப் பின்னாடி பேசுவோம். இதை எல்லாம் நாம பண்ணக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதே உணரலாம். நமக்கு பாடம் கற்றுத்தர மாதிரிதான் இந்த நிகழ்ச்சி இருக்கு. சர்ச்சையா எடுத்துக்காம, பாடம் கற்றுக்கொள்வது மாதிரி எடுத்துக்கிட்டா நல்லதுதான் என்பது என் தாழ்மையான கருத்து.''

``சரி, இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவாங்க?''

``ம்ம்... என் நண்பர் கணேஷ் வெங்கட்ராம்தான். எல்லாருடைய ஆதரவும் அவருக்குத்தான் இருக்குனு தோணுது. இதுவரைக்கும் அவரைப் பற்றி எந்தவிதமான தப்பான பேச்சும் வரலை. என்ன... ரொம்ப யோகா பண்றார்னு கலாய்க்கிறாங்க. வேற எதுவும் இல்லை. உள்ளே இருப்பவர்களும் அவரை ஒரு நல்ல லீடர்னுதான் சொல்றாங்க. அது உண்மைதான். இந்த நிகழ்ச்சிக்காகவே அவர் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. அவர் இயல்புடன் இருக்கிறார். அவர் எப்பவுமே இப்படித்தான்.''

``நீங்களும் பரணியும் நெருங்கிய நண்பர்களா?''

``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்பு, பாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது. நானும் அவரும் ஒரு ஷோவில் கலந்துக்கிட்டோம். அப்பதான் பழக்கம் ஏற்படுச்சு. அப்படிப் பழகும்போதுதான் இவர் `ரொம்ப சிம்பிளான மனுஷன்; யாருக்கும் எந்தவிதமான கெடுதலும் பண்ண மாட்டார்; தப்பான ஆளு இல்லை'னு தோணுச்சு. அவரால் பொண்ணுங்களுக்கு எந்தக் காலத்திலும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அதைத்தான் நான் அந்த வீடியோவில் சொல்லியிருக்கேன்.''

``wild card என்டரியில் பரணி திரும்பவும் உள்ளே செல்வாரா?'' 

``இந்த ஷோவில் என்ன வேணாலும் நடக்கலாம். அவர் திரும்பவும் வரலாம்... வராமல்கூட இருக்கலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு அவர் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ள போக மாட்டார்னு நினைக்கிறேன். இதனால் அவருக்கு மன உளைச்சல், சில பிரச்னைகள் எல்லாம் வந்திருக்கு. திரும்பவும்  அங்கே சென்றால் அதை அவர் எப்படி எடுத்துப்பார்னு தெரியலை.''

``சரி, உங்களை அழைத்தால் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா?''

``ஹா... ஹா... நிறைய சவால்களும் நிறைய கஷ்டங்களும் இருக்கு. அந்தக் கஷ்டத்தை எல்லாம் என்னால் தாங்கிக்க முடியுமான்னு தெரியலை. நான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றால், என்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு சண்டை வரும்னு தோணுது. அதனால், நான் போகாமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது. முக்கியமா என் குடும்பத்துக்கு நல்லது.''

``இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் எனச் சொல்கிறார்களே!''

``இந்தக் கேள்வியை என்கிட்டயே நிறையபேர் கேட்டாங்க. நியாயமான கேள்விதான். ஆனா, இது 100 சதவிகிதம் ரியாலிட்டி ஷோ. ஸ்க்ரிப்ட் இல்லை. இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவது `எண்டமால்' என்ற நெதர்லாந்து நிறுவனம். அமெரிக்கா, யூரோப், இந்தியானு பல இடங்கள்ல இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்காங்க. அதோட கன்செப்ட்டே 100 சதவிகிதம் ரியாலிட்டிதான். 14 பேரை உள்ள தள்ளிடு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு நீ வேடிக்கை மட்டும் பாரு. அதுதான் இந்த ஷோவின் சுவாரஸ்யமே... ஆனா, இது அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இதை நீங்க ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக்க வேணாம்; ரொம்ப லேசாவும் எடுத்துக்க வேணாம். நாட்டுல நிறைய பிரச்னைகள் இருக்கு. நமக்கே பல பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் மறைக்கிற மாதிரி `பிக் பாஸ்' இருக்கக் கூடாது. அதுதான் முக்கியம்.''