Published:Updated:

ஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?! #BiggBossTamil

ஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?! #BiggBossTamil
ஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?! #BiggBossTamil

ஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?! #BiggBossTamil

'பிக் பாஸ்' தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் மக்களிடம் பரபரப்பு எகிறிவருகிறது. கதிராமங்கலம், நீட், விவசாயிகள் போராட்டம், வளர்மதி, திருமுருகன் காந்தி என எல்லாம் பின்னுக்குச் செல்லும் அளவுக்கு 'பிக் பாஸ்' என்ற மகுடி, மக்களை எலிகளாக்கி பின்னால் ஓடவைத்துக்கொண்டிருக்கிறது. அட.... அரசியல்வாதிகளே ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்து தீயணைப்பு வண்டிக்கு போன் போட்டிருக்கிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாவற்றிலும் 'பிக் பாஸ்' வைரஸ் சுழன்று அடிக்கிறது. ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஓவியா ஆர்மியில் இணைந்து போராடி வருகின்றனர். 'என் தலைவி', 'செல்லம்', 'டார்லிங்', 'பச்ச மண்ணுடா' என விதவிதமான குரல்கள். அட... இந்தச் சமூகம் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு நேசிக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது. சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். அதே பெண் குலத்தைச் சேர்ந்த ஜூலி, காயத்ரி, ரைசா, நமீதா எல்லாம் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? 

ஸ்கிரிப்ட் இல்லை எல்லாமே உண்மைதான் என்றே இருக்கட்டும். இவர்களை ஓவியா ரசிகர்கள் பார்ப்பதற்கும், காயத்ரி போன்றோர் ஓவியாவைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி பேசுவதைவிட நீங்கள் ஆபாசமாகப் பேசுகிறீர்கள், காயத்ரி நடந்துகொள்வதைவிட மிகவும் ஆதிக்க மனோபாவத்துடன் நடந்துகொள்கிறீர்கள். வீடியோ ஆதாரங்களைக் காட்டியும், 'தாங்கள் செய்ததில் என்ன தவறு? தங்கள் வார்த்தைகள் அவ்வளவு ஆபாசமா?' என ஒப்புக்கொள்ளாத காயத்ரி அண்ட் கோ. ஓவியாவுக்கு எதிராக காயத்ரி, ஜூலி, நமீதா, ரைசா எனக் குழு மனப்பான்மையோடு இயங்குவது போலத்தான், நீங்கள் இங்கு அந்த காயத்ரி குழுவுக்கு எதிராக இயங்குகிறீர்கள்.

சினிமா, சின்னத்திரை காட்சிகளை நிஜ சம்பவத்துடன் தொடர்புபடுத்தி அங்கதம் செய்யும் மீம்ஸ் என்பது கற்பனைத்திறனின் நவீன உச்சம். பார்த்ததும் சிரிக்கவோ, சிந்திக்கவோ செய்யும் மீம்ஸ்களில் வலம் வரும் ஜாலி கேலிகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. ஆனால், அவற்றில் வன்மத்தைப் புதைப்பது எவ்வளவு அநீதி..? ஜுலி, காயத்ரி போன்றோரின் அந்தரங்கம், தனிப்பட்ட குணங்களை விமர்சிக்கும் கருத்துகளைப் பரப்புவது நியாயமா? எத்தனை ஆபாச மீம்ஸ்கள், எத்தனை எத்தனை வக்கிர வசவுகள்! இவ்வளவு வக்கிரமான நாம்தான் காயத்ரியின் வார்த்தைகளில் ஒழுக்கம் வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

21-ம் நூற்றாண்டில் ’தேவடியா’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொள்ளவேண்டும் என்பது பெரும் விவாதத்துக்குரியது. ஆனால், அதை சகட்டுமேனிக்கு பெண்கள் மீது பிரயோகிப்பது என்ன மனநிலை? ஆண் போட்டியாளர்களான ஷக்தி, ஆரவ், கணேஷ், சினேகன் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கில்லைதான். அவர்களும் மகா மட்டமாகவே பேசப்படுகின்றனர். ஆனால், இந்த வசைபாடல்களில் ஆண்களுக்கான பாதிப்புகள் சொற்பமே! ஆண் போட்டியாளர்கள் 'பிக் பாஸ்' முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால், அவர்களுக்கான வாழ்க்கை எப்போதுபோலவே இருக்கும். ஆனால், பெண்களுக்குச் சூழலும் சுற்றமும் அப்படியா இருக்கிறது? பெண்களை எடுத்த எடுப்பிலேயே அவளுடைய கேரக்டர் மற்றும் குடும்பத்தை நடுத் தெருவுக்கு இழுப்பதே கலாசாரமாக காலம்காலமாக தொடர்கிறது. 

சற்றே யோசியுங்கள்.... சமூக, பொதுவெளிகளில் கொட்டப்படும் அத்தனை வார்த்தைகளையும் வக்கிரங்களையும், 'பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியில் வரும் அந்தப் பெண்கள் சந்திக்க நேரிடும். இப்போதே அந்தப் பெண்களின் குடும்பத்தினர் சங்கடங்களை எதிர்கொண்டும் மனம் புழுங்கிக்கொண்டும்தான் இருப்பார்கள். 'பிக் பாஸ்' முடிந்து வீடு திரும்பும் ஜுலியின் ஒரு நாள் எப்படி இருக்கும்? அவருடைய வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் என அவருடைய நாள்கள் இனி எப்படி இருக்கும்? பொது இடங்களில் ஜுலியைப் பார்க்கிறவர்களின் அணுகுமுறை எவ்வாறாக இருக்கும்? நாளை ஜூலிக்கு ஏற்படும் சிக்கல்களில் முக்கியமானவை அவருடைய திருமண வாழ்க்கை. அவருடைய காதலன்/கணவன் இந்த அழுத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்வாரா? 'பிக் பாஸ்' தடயங்கள் பின்னாள்களில் ஜுலியின் மணவாழ்க்கையில் எங்குமே பிரதிபலிக்காதா? 

நம்முடைய ஒருநாள் கேளிக்கைக்கும் 100 நாள் 'பிக் பாஸ்' கூத்துகளுக்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதுமே மன அழுத்தமாக மாறக்கூடிய அபாயம் சரியா? கோடி கோடியாக கொள்ளை அடித்தவன், கொலை செய்தவன் எல்லாம் பதவி, பந்தா எனத் திரிவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுவான கோபம், பொறாமை போன்ற அடிப்படை மனிதக் குணங்களை ஒரு செயற்கை சூழலில் வெளிப்படுத்துபவரை மாநிலமே வரிந்துகட்டி வசைபாடுவது சரியா? இதற்கு முன்பு எந்த மோசடிப் பேர்வழியை, ஊழல் அரசியல்வாதியை, குற்றம்புரிந்த நபர்களை இப்படி ஒருங்கிணைந்து விமர்சித்திருக்கிறோம்? இதற்கு முன்பு எவருக்கும் காட்டாத இப்படியொரு கடுமை இந்தச் சில பெண்கள் மீது கொட்டப்படுவது ஏன்? 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் என நம்முடைய உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும் சூழலில், அவற்றை எதிர்த்துப் பேசாமல், 'பிக் பாஸே' வாழ்க்கை என ஒட்டுமொத்த சமூகமும் விவாதிப்பது, இன்னுமொரு அடிமைத்தனம் ஆகாதா? 'பிக் பாஸ்' போட்டியாளர்களை விரோதியாகப் பாவித்து, வன்மத்தை வளர்த்தபடி இருக்கும் நீங்கள், நாளை நேரில் அவர்களைச் சந்திக்க நேர்கையில் அதையே அவர்களிடம் கொட்ட நேரிடும். பொது எதிரியாக்கிய பிறகு எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்; அதில் தவறே இல்லை என்பது இன்று சகஜமாகிவிட்டது. அது பெண்ணாக இருந்தால் இன்னும் மோசம். ஃபேஸ்புக், ட்விட்டர், மீம்கள், வீடியோக்கள் எனப் பொதுத்தளங்களில் பெண்களை மட்டமாகப் பேசுவது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். மனவக்கிரங்களைப் பொதுத்தளங்களில் கொட்டித்தீர்க்க யாருக்கும் உரிமை இல்லை; அது சட்டப்படி குற்றமும்கூட. 

ஏற்கெனவே, பொதுத்தளங்களில் இருக்கும் பெண்களை இம்மாதிரியாகப் பேசும் சூழல் உள்ள சமூகமே இது. இதனை எதிர்த்துப் பலர் போராடி வருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த வீரியம் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியை அசைத்துப் பார்க்க போதுமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் பல பெண்களுக்குப் பாலியல் மிரட்டல் விடுக்கும் சூழல் உள்ள சமூகத்தில்தான் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

காயத்ரி, ஜூலி, ரைசா, நமீதா ஆகியோரை வசைபாடி பெண் மீதான இந்தச் சமூகம்கொண்ட மனவக்கிரத்தையே தீர்த்துக்கொள்கிறது. இந்த வசைப் பாடல்கள் அனைத்துமே தொடரும் பெண் மீதான காழ்ப்புணர்வே. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியால் போட்டியாளர்கள் மட்டும் அம்பலமாகவில்லை, நாமும் நம் வக்கிரமும்தான் மக்களே...! நாம்தான் காயத்ரி ரகுராம்... நாம்தான் ஜூலியானா. ஆனால், நாம் விரும்பி வியந்து கொண்டாடும் ஓவியாவாக நாம் ஒருபோதும் நடந்துகொள்வதில்லை என்பதே கசப்பான நிதர்சனம்! 

அடுத்த கட்டுரைக்கு