என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

தேவை தேசமெங்கும் அண்ணா!

சமஸ்

##~##

ண்ணாவின் நிபந்தனைகளை ஏற்று வலுவான 'லோக்பால்’ அமைப்புக்கு உத்தரவாதம் அளித்து, இந்திய நாடாளுமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய மறு நாள். அண்ணா தன்னுடைய 290 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வென்றது இந்தியா’ என்ற தலைப்புச் செய்திகள் ஊடகங்களை அலங்கரிக்கின்றன. கூடவே, 'நான் அண்ணா’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட பட்டியை நெற்றியில் அணிந்து தேசியக் கொடியுடன் ஆர்ப்பரிக்கும் போராட்டக்காரர்களின் படங்கள்.

அண்ணா, ''இது அரை வெற்றிதான்'' என்றார். உண்மைதான். அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருப்பது... 'அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இடம்பெறும்; மாநிலங் களில் லோக் ஆயுக்தா உருவாக்குவது குறித்த சட்டப் பிரிவு 'லோக்பால்’ சட்டத்தில் இடம்பெறும்; கீழ்நிலை அரசு ஊழியர்களும் 'லோக்பால்’ வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்’ என்கிற மூன்று கோரிக்கைகளுக்குத்தான். அரசுத் தரப்பில் நிறைய வாக்குறுதிகள்; அண்ணா தரப்பில் நிறைய விட்டுக்கொடுத்தல்கள்... பிரதமரை 'லோக்பால்’ வரம்புக்குள் கொண்டுவரும் அண்ணாவின் பிரதான கோரிக்கை எந்த வகையில் நிறைவேற்றப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீதித் துறையை எந்த அமைப்பின் வரம்புக்குள் கொண்டுவருவார்கள் என்பதும் அப்படித்தான்!

தேவை தேசமெங்கும் அண்ணா!

இதுவும் குறிப்பிடத்தக்க வெற்றிதான். ஆனால், அதனாலேயே நாம் ஊழலை வென்றுவிட்டதாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமா?

அண்ணா போராடிக்கொண்டு இருந்தபோது, ஆசியாவிலேயே மிகப் பெரியதான சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்த கதை இது. திண்டிவனத்தில் இருந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த தன்னுடைய குழந்தையைச் சிகிச்சைக்காகக் கொண்டுவந்து இருந்த ஏழை விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிக்கொண்டு இருந்தனர் இரு ஊழியர்கள். கொடுமை என்னவென்றால், அதற்குச் சற்று முன்புதான் பத்திரிகையில், அண்ணாவின் போராட்டச் செய்திகளைப் படித்துவிட்டு, அரசின் ஊழல்களைக் கடுமையாகச் சாடிக்கொண்டு இருந்தார்கள் அவர்கள். 'ஊழலுக்கு எதிரான இந்தியா’வின் பொதுவான முகம் இப்படித்தான் இருக்கிறது. அதாவது, இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஊழல் என்பது பெரிய அளவில் நடப்பது; தனக்குச் சம்பந்தம் இல்லாதது என்று நினைக்கிறார்கள். தன்னளவில் நடக்கும் முறைகேடுகளை ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.

இந்த நாட்டில் ஒரு வியாபாரி தன் குடும்பத்துக்கு மட்டும் நல்ல பொருள்களைக் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார். ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர், தன் குழந்தை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும்

தேவை தேசமெங்கும் அண்ணா!

என்று நினைக்கிறார். ஒரு மருத்துவர் 60 சதவிகித நோயாளிகளுக்குத் தேவையற்ற மருந்துகளையே பரிந்துரைக்கிறார். ஒரு நடிகர் தன்னுடைய 90 சதவிகித சம்பளத்தைக் கறுப்புப் பணமாகவே வாங்குகிறார். ஆனால், ஊழலுக்கு எதிராகப்பேசும் போது... எல்லோருமே கூடுகிறார்கள். ஆள்வோரைக் கடுமையாக விமர்சிக் கிறார்கள்.

ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு கூடி இருந்த மக்களைப் பார்த்து கை அசைக்கிறார் அண்ணா. அரசாங்கம் அந்தக் கைக்குப் பயப்படுகிறது. ஏனென்றால், அந்தக் கை சுத்தமாக இருக்கிறது. நம்முடைய கைகள்? ஊழலற்ற இந்தியா எனும் கனவு அற்புதமானது. ஆனால், ஊழல்வாதிகள் வெளியே மட்டும் இல்லை என்பதை இந்தியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!

கிழிந்து பறக்கும் முகமூடி!

ண்ணாவின் ஆகஸ்ட் கிளர்ச்சியில் அரசு எடுத்த மோசமான இரு முடிவுகள்... நீதிக்குப் புறம்பாக, போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, அண்ணாவைக் கைதுசெய்து, ஊழல் பேர்வழிகளோடு திஹார் சிறையில் அடைத்தது. தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அண்ணாவைச் சட்ட நடைமுறைகளுக்கு முரணாக உடனே விடுவிக்க ஆணை பிறப்பித்து, அவர் வெளியேற மறுத்த பின் போராட்டத்துக்கு அனுமதி அளித்து வெளியேற்றியது. சரித்திரப் புகழ் பெற்ற இந்த இரு முடிவுகளுக்கும் சொந்தக்காரர் 'இளவரசர்’ ராகுல் காந்தி!

தேவை தேசமெங்கும் அண்ணா!

சோனியாவின் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்த ராகுல், அண்ணாவை எதிர்கொள்ளும் வியூகத்துடனேயே இந்தியா திரும்பினார். சுதந்திர தினத்தன்று கொடியேற்றி முடித்ததும் ராகுலைச் சந்தித்தார் மன்மோகன். அது தொடங்கி அண்ணா போராட்டத்தை அரசு எதிர்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் ராகுலுடன் ஆலோசித்த பின்னரே எடுக்கப்பட்டன. போராட்டக்காரர்களிடம் முதலில் முறுக்குவதும் அப்புறம் ஒரு படி இறங்குவதும் பிறகு மீண்டும் முறுக்கு காட்டுவதும் கடைசியில் தடாலடியாக விழுவதுமாக அரசின் கையாலாகாதத்தனம் வெளிப்பட்டதற்கு, வழக்கம்போல மன்மோகன் மட்டும் இந்த முறை காரணமாக இருக்கவில்லை. டெல்லியின் அரசியல் அதிகாரங்கள் ராம் லீலா மைதானத்தின் மையத்தில் இருந்த அந்த நாட்களில் ராகுலிடம் இருந்து ஒரு வார்த்தையும் வெளியே வரவில்லை. போராட்டம்பற்றி நிருபர்கள் கருத்து கேட்டபோது, புரியாத மொழியில் கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டது மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்.  'நாடாளுமன்றத்தின் மாட்சிமையைத் தனி நபர்கள் போராட்டம் குலைத்துவிடக் கூடாது!’ என்று எல்லாம் முடிந்த பின் அவர் பேசியபோது 'இவ்வளவுதானா ராகுல்ஜி?’ என்று அவருடைய கட்சி எம்.பி-க்களே கொட்டாவிவிட்டனர். ஆனாலும், காங்கிரஸ்காரர்கள் சளைத்துவிடுவார்களா என்ன? பிரியங்கா வதேராவைப் பொறுப்பேற்க வரவேற்கும் சுவரொட்டிகள் கட்சி அலுவலகத்தை இப்போது வரவேற்கின்றன!