என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மகளா நினைச்சு மனசு இரங்குங்கள் தாயே..!

முதல்வரிடம் கெஞ்சம் முருகன் மகள்இரா.சரவணன், ஓவியம் : பாரதிராஜா

##~##

''அப்பா இறக்கப்போகும் நாள் தெரிஞ்சா, ஒரு மகளோட மனசு என்ன பாடுபடும்? அப்பாவோட கருணை மனுவை நிராகரிச்சிட்டாங்கனு தெரிஞ்ச நாள்ல இருந்து இங்கே தவியாத் தவிச்சுக்கிடக்குறோம். சித்தப்பா, அத்தை, பாட்டி எல்லாம் கதறுறாங்க. சிறைக்குள் பிறந்து இந்தியா, இலங்கைனு அல்லாடி, இன்னிக்கு லண்டன்ல படிச்சுக்கிட்டு இருக்கேன். என் அப்பா - அம்மாவைப் பார்க்க முடியலைன்னாலும், அவங்க உயிரோட இருக்கிறாங்கங்கிறது மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருந்துச்சு. ஆனா, அப்பாவோட உயிருக்கு நாள் குறிக்கப்பட்ட கொடுமையை என்னால தாங்கவே முடியலை. எனக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை?'' - 19 வயது ஆரித்ராவின் பரிதாபக் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.

வரும் 9-ம் தேதி தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கும் முருகனின் மகள் ஆரித்ரா... எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் தேற்ற முடியாத அளவுக்குத் தேம்பித் தேம்பி அழுகிறார். ''ஒரு நிமிஷம் அண்ணா...'' என அவகாசம் கேட்டு மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

மகளா நினைச்சு மனசு இரங்குங்கள் தாயே..!

''அப்பாவுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை வரும் என நினைத்தீர்களா?''

''இல்லவே இல்லையே அண்ணா. என் அப்பா சிறையில வாடுற ஒவ்வொரு நிமிஷமுமே சோகமானதுதான். ஆனாலும், அப்பா என்றைக்காவது ஒருநாள் என்னைச் சந்திப்பார்ங்கிற நம்பிக்கையே எனக்கு ஆறுதலாக இருந்தது. பாசம் நிறைஞ்ச தகப்பனாக, கடிதங்கள் மூலமே என்னை அவர் வழிநடத்திட்டு இருக்கார். அவர் எழுதும் ஒவ்வொரு வரியிலும் பாசமும் அக்கறை யும் நிரம்பி இருக்கும். அப்பாவோட ஞாபகம் வர்றப்ப எல்லாம் அவர் எழுதிய கடிதங் களையும் அவரோட ஓவியங்களையும் எடுத்துப் பார்த்துதான் மனசைத் தேத்திக்குவேன். '9-ம் தேதி தூக்கு’னு தெரிஞ்ச உடனேயே கதறிட்டேன். என் அப்பாவை இப்பவே பார்க்கணும்னு மனசு துடிக்குது. யாருக்கு யார் ஆறுதல் சொல்றதுனு தெரியாமல், பாட்டி, சித்தப்பா, அத்தைனு அத்தனை பேரும் தவிக்கிறோம்!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அப்பா கடிதம் எழுதினாரா?''

''வாராவாரம் அப்பாவோட கடிதம் தவறா மல் வந்துடும். ஒவ்வொரு கடிதத்திலும் 'அடுத்த வருஷம் நிச்சயம் நான் உங்களோட இருப் பேன்’னு எழுதி இருப்பார். சில மாதங்களுக்கு முன்னால்தான், 'அப்பா, அடுத்த வருஷம் வருவேன்னு நீங்க என்னை ஆறுதல்படுத்துற துக்காக எழுதுறீங்களோ என்னவோ... ஆனா, நான் அந்த வரிகளை 10 வருஷமா நம்பிட்டு இருக்கேன். இனிமேல் அப்படி எழுதாதீங்க’னு பதில் எழுதினேன். எங்களைப் பார்க்க ணும்கிற தவிப்பில்தான், ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்பா அப்படி எழுதுவார். ஆனாலும், அந்த எதிர்பார்ப்பு வருஷா வருஷம் பொய்யாகிறப்ப, என்னால தாங்கிக்க முடியலை. கருணை மனு நிராகரிச்ச விஷயம் தெரிஞ்சு, நான்தான் அப்பாவுக்குக் கடிதம் எழுதினேன். தைரியமா இருக்கச் சொல்லி இருக்கேன். 'இந்த நேரத்தில் என்ன எழுதினாலும் மகள் அழுவா’னு நினைச்சு அப்பா ஏதும் எழுதலை!''

''அப்பா, அம்மாவைப் பிரிஞ்சு வாழுறது ரொம்பக் கொடுமையானது. எப்படிச் சமாளிக்கிறீங்க ஆரித்ரா?''

''பிறந்த நாள் தொடங்கி இன்னிக்கு வரைக்கும் மனசார நான் வாய்விட்டுச் சிரிச்சதே இல்லை. சிறைக்குள் பிறந்து, இலங்கைக்குப் போய் ஆரம்பப் படிப்பு முடிச்சு, இப்போ லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். சாதாரண விழாக்களுக்குக்கூட நான் போக மாட்டேன். காரணம், அங்கே குழந்தைகள் அம்மா-அப்பாவோட விளையாடுறதைப் பார்க்கிற சக்திகூட எனக்குக் கிடையாது. நளினிம்மா எப்போதாவதுதான் கடிதம் எழுதுவாங்க. அவங்களோட சிரமத்தைப்பற்றி ஒரு வரிகூட எழுத மாட்டாங்க. எனக்கு நிறைய அறிவுரை சொல்வாங்க. சிறைக்குள் நளினிம்மா ரொம்ப சிரமப்படுறாங்கனு எனக்குத் தெரியும். என் மனசு கஷ்டப்படும்னு நினைச்சு, அம்மா அதைக் காட்டிக்கவே மாட்டாங்க!''

''அப்பா, அம்மா மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்குறீங்க?''

மகளா நினைச்சு மனசு இரங்குங்கள் தாயே..!

''எனக்கு விவரம் தெரிஞ்சு 12 வயசுலதான், அப்பா-அம்மா இரண்டு பேரையும் சிறையில் முதல் முறையாப் பார்த்தேன். 12 வயசில் பெத்தவங்களோட முகத்தைப் பார்க்கிறது எவ்வளவு பெரிய கொடுமைனு நினைச்சுப் பாருங்க. அப்பா என்னைக் கட்டிப் பிடிச்சு அழுதார். அப்போ நான், 'ஏம்பா இப்படிப் பண்ணினீங்க?’னு கேட்டேன். காரணம், சின்ன வயசில் என் மனசில் அப்படி ஒரு வலியைப் பலரும் ஏற்படுத்திட்டாங்க. ஆனால், நான் அப்படிக் கேட்டதை அப்பாவால் தாங்கிக்க முடியலை. 'என் பொண்ணு எப்படிப் பேசுவானு பார்க்க இத்தனை வருஷம் காத்திருந்தேன். ஆனா, அவகூட என்னை நம்பலையே’னு கதறி அழுதார். 'நானோ உன்னோட அம்மாவோ தப்புப் பண்ணலைங்கிறதுக்கு நீதான் சாட்சி. 1991-ல் நீ ஒரு மாசக் கருவா அம்மா வயித்தில் இருந்தப்பதான், அந்தச் சம்பவம் நடந்துச்சு. வயித்துல கருவைச் சுமக்கிறவள் கொலை நடக்கும்னு தெரிஞ்சிருந்தா... அந்த இடத்துக்குப் போயிருப்பாளா?’னு கேட்டார். 'ஊர் உலகம் எங்களை நம்ப வேண்டாம். ஆனா, எங்களோட பொண்ணும்மா நீ!’னு சொல்லி மறுபடியும் அழுதார். அங்கே இருந்த அரை மணி நேரம்தான் என் வாழ்க்கையில் நான் நிம்மதியா இருந்த நேரம். நான் கேட்ட கேள்வி அவங்களை எப்படி வருத்தி இருக்கும்னு அப்போ எனக்குத் தெரியாது. ஆனா, இன்னிக்கும் அப்படிக் கேட்டதை நினைச்சு நான் அழுவுறேன்.

நல்லா விவரம் தெரிஞ்ச உடனேயே அந்தச் சம்பவம் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் நான் படிச்சேன். நிறையப் புத்தகங்களை அப்பா கொடுத்து அனுப்பினார். விசாரணை, வாக்குமூலம்னு எக்கச்சக்கமான ஜோடிப்புகளை அதிகாரிகள் பண்ணி இருப்பதை என்னால் உணர முடிஞ்சது. அவங்களோட மகள்ங்கிறதுக்காகச் சொல்லலை... அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை விவரங்களை யார் படிச்சாலும், இப்போ சிக்கி இருக்கிறவங்க அப்பாவிகள்னு நிச்சயமாத் தெரிஞ்சுக்க முடியும். நான் என் அப்பா-அம்மாவைச் சத்தியமா நம்புறேன்!''

''தூக்கில் இருந்து காப்பாற்ற தமிழகத்தில் நடக்கும் முயற்சிகள் உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து இருக்கின்றனவா?''

''எங்களுக்காகப் போராடுறவங்களுக்கு நாங்க எப்படி நன்றி சொல்லப்போறோம்னு தெரியலை. இப்பவும் தமிழ்நாட்டு முதல்வர் அம்மாவை மலை மாதிரி நம்பி இருக்கோம். விஷயம் தெரிஞ்ச உடனேயே அழுகையோட முதல்வர் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது இந்நேரம் அவங்க கையில் கிடைச்சிருக்கும். அம்மா, உங்க மகளா நினைச்சு மனசு வையுங்க... யாரையும் தூக்கில் போடாமல் காப்பாத்துங்க!

சட்டரீதியாகவும், உணர்வு வழியாகவும் நடக்கிற போராட்டங்கள் நிச்சயம் மூணு பேரையும் காப்பாத்தும்னு நம்புறேன்!''

''இப்போ யாருடைய பராமரிப்பில் இருக்கீங்க?''

''இந்த நேரத்தில் சில விஷயங்களை நான் மறைக்க விரும்பலை. அப்பாவோட அண்ணன் இயக்கத்தில் இருந்தவர். ஒரு விபத்தில் அவர் இறந்துட்டார். மூத்த பையனைப் பறிகொடுத்ததில் குடும்பமே நிலைகுலைஞ்சிடுச்சு. குடும்பத்துக்காகத்தான் அப்பா வெளிநாடு போக விரும்பினார். ஆனா, அதுவே வினையாகி மொத்த கனவுகளையும் நாசமாக்கிவிட்டது. அப்பாவுக்கு மூன்று தம்பி, தங்கைகள். அவங்களோட பராமரிப்பில்தான் நான் இருக்கேன். ஒரு நிமிஷம்கூட நான் தவிச்சிடக் கூடாதுனு ரொம்பப் பாசமாப் பார்த்துக்கிறாங்க. ஆனாலும், அப்பா-அம்மா பாசம் கிடைக்காமல் போனதை என்னால் தாங்கிக்கவே முடியலை!

என்னை டாக்டராக்கிப் பார்க்கணும்னு எல்லோருக்கும் ஆசை. அதனால், என்னதான் சோகம்னாலும் மனசைத் தைரியப்படுத்தி நல்லாப் படிச்சுக்கிட்டு இருக்கேன்!''

''தமிழக மக்களிடம் என்ன சொல்ல விரும்புறீங்க?''

''என் அப்பா-அம்மா தப்பு பண்ணலைன்னு நான் நிச்சயமா நம்புறேன். என்னோட நிலையை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க. பிறந்ததில் இருந்தே ஒரு நிமிஷம்கூட நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். நான் என்ன பாவம் பண்ணினேன்னு தெரியலை. அங்கே இருக்கிற எல்லோரையும் என்னோட உறவுகளா நினைச்சுக் கேட்கிறேன்... தயவுபண்ணி எங்க அப்பாவையும் இன்னும் இரண்டு பேரையும் காப்பாத்துங்க. அப்பாவைப் பார்த்துப் பேசி, ஒண்ணா சேர்ந்து வாழுற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை... ஏதோ ஒரு மூலையில் எங்க அப்பா உயிரோட இருக்கிறார்ங்கிற ஆறுதலே எனக்குப் போதும். அதே நேரம், அப்பாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லணும். அறியாத வயசில் உங்ககிட்ட அப்படி ஒரு கேள்வி கேட்டது தப்புதான்பா... இந்த மகளை மன்னிச்சிடுங்கப்பா!''