இரா.சரவணன்
##~## |
''முதல் தூக்கு யாருக்கு?''
- குலை நடுங்கவைக்கும் இந்தக் கேள்வி தான் வேலூர் சிறை அதிகாரிகளின் வெகு சீரியஸ் விவாதம்!
குற்றப் பட்டியலின் வரிசைப்படி தூக்குப் போடலாம்... வயது அடிப்படையில் தூக்குப் போடலாம் என விவாதங்கள் நடத்தப்பட்டு, இறுதியாக சீட்டு குலுக்கிப் போட்டு, அதன் வரிசைப்படி தூக்குப் போடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. சிறை அதிகாரிகள் இதுபற்றி தயங்கியபடியே முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் சொல்ல, 'குலுக்கல் முறையில் நாங்கள் கொலையாகப்போகிறோமா?’ என வலி படர்ந்த சிரிப்புடன் கேட்டனர் மூவரும்.
மனிதநேயம், இன உணர்வு, ஆதங்கம், அழுகை அனைத்தையும் வென்று மூன்று உயிர்களைக் குடிக்க முன்னேறி வருகிறது தூக்குக் கயிறு. செப்டம்பர் 9-ம் தேதி மூவருடைய தூக்குக்கும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது!

இதற்கு முன்னர் 1983-ல் மாம்பலம் சேட்டு என்பவர்தான் வேலூர் சிறையில் கடைசியாகத் தூக்குப் போடப்பட்டவர். 28 வருட இடைவெளியில் தூக்கு மேடையைச் சுற்றி செடி கொடிகள்படர்ந்து விட்டன. அவற்றை அகற்ற வெளி ஆட்களை அழைத்தபோது, யாரும் வர மறுத்துவிட்டார்கள். அதனால், வார்டன் கள் பலரும் சேர்ந்தே அந்தப் பகுதி யைச்சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். தூக்கு மேடையின் அசைவுக் கம்பிகளுக்கு க்ரீஸ் அடிக்கப்பட்டு இருக்கிறது. தூக்கு மேடை யின் கீழ்ப் பகுதியில் சுண்ணாம்பும், பிற பகுதிகளுக்கு கறுப்பு நிற பெயின்ட்டும் பூசப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தரம் வாய்ந்த மணிலா கயிறுகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.
குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரிடமும் 26-ம் தேதி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்கள் சிறைத் துறை அதிகாரிகள். அடுத்த சில மணி நேரங்களிலேயே மூவரும் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டார்கள். மூவருக்குமான உணவு மிகுந்த பரிசோதனைகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. இது காலம் வரை தினசரிகள் படிக்கவும் தொலைக்காட்சி பார்க்கவும் வழங்கப்பட்ட அனுமதியும் நிறுத்தப்பட்டுவிட்டது. ''எங்க ளுக்காக மக்கள் எந்த அளவுக்குப் போராடுறாங்க என்பதைக்கூட நாங்க பார்க்கக் கூடாதா சார்?'' என முருகன் தயங்கியபடியே கேட்க, அதிகாரிகளிடத்தில் பதில் இல்லை. இத்தனை வருட காலத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருடன் சிறைத் துறை அதிகாரிகள் மிகுந்த அன்போடு பழகி இருக்கிறார்கள். அதனால், அவர் களின் முகங்களிலும் ஏக வாட்டம்.
மிகுந்த அன்போடு பழகும் வார்டன் ஒருவரிடம், ''எங்கே சார் உங்களை நேத்து ஆளையே காணோம்... எங்களுக்கான நாள் நெருங்குறதைப் பார்த்து லீவு போட்டுட்டீங்களா?'' எனக் கேட்டாராம் சாந்தன். தூக்குத் தண்டனையை எப்படிக் கச்சிதமாக நிறை வேற்றுவது என்ற பயிற்சிக்காகத் தான் சென்னை போய் வந்ததைச் சொல்ல முடியா மல் தவித்திருக்கிறார் அந்த வார்டன். இதர கைதிகளுக்கும் சோகம் தாளவில்லை. மூவருக்கும் மிக நெருக்கமான ஆயுள் தண்டனைக் கைதி ராபர்ட் பயாஸ்தான், ''நிச்சயம் நீதிமன்றத்தில் தடை கிடைத்துவிடும்'' எனச் சொல்லி எல்லோரையும் ஆறுதல்படுத்தி வருகிறார்.

மனைவி நளினிக்கும் மகள் ஆரித்ராவுக்கும் கடிதம் எழுத அனுமதி கேட்டு இருக்கிறார் முருகன். 'அதிகாரிகளிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்’ எனத் தகவல் சொல்லிஇருக்கி றார்கள். 'விகடனிடம் அவசியம் சொல்லுங் கள்!’ என முருகன் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் நெஞ்சை நொறுக்குகின்றன.
''மரண மேகம் எங்களை முழுமையாகச் சூழ்ந்துவிட்டது. ஆனாலும், நேற்றைய மன நிலையிலேயே தைரியத்தைச் சுமந்து நிற்கிறோம். எங்களுக்காகப் போராடும் தமிழ்நாட்டு மக்களின் முயற்சிகள் வெற்றி பெறும் என நம்புகிறோம். தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது இதுதான்... 'எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அப்பாவிகள்.’ நான் இயல்பிலேயே தைரியமான ஆள். விசாரணைக்காக போலீஸின் கைகளில் சிக்குண்ட முதல் நாளை நான் நினைத் துப் பார்க்கிறேன். நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. அந்த தைரியத்தில் வருவது வரட்டும் என நேர்மையோடு விசாரணையை எதிர்கொண்டதுதான் தவறாகிவிட்டது. அது என்னை மரண மேடை வரை நிறுத்தும் எனக் கொஞ்ச மும் நினைக்கவில்லை. உறவுகளை நினைக்கையில் தைரியம் தவிடுபொடி ஆகிறது. வாய்விட்டுக் கதறத் தோன்று கிறது. ஆனாலும், கடைசி நிமிடத்திலா வது, எங்கிருந்தாவது நல்ல செய்தி வந்துவிடும் என நம்புகிறோம்!'' எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார் முருகன்.
வெளியே நடக்கும் சட்டப் போராட்டங்களை ரொம்பவே நம்பி இருக்கும் பேரறிவாளன், சகஜமான மனநிலையில் இருக்கிறார். ஆறுதல் சொல்லப்போன வழக்கறிஞர்களிடம், ''நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். எந்தத் தவறும் செய்யாமல் இத்தனை வருடங்கள் அல்லாடிய எங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும்!'' எனச் சொல்லி இருக்கிறார். தன் தாயுடன் நாள் முழுக் கப் பேச வேண்டும் என்பதுதான் அறிவின் ஆசை. ஆனால், அதிகாரிகள் அரை மணி நேரத்திலேயே அறிவின் தாயை அனுப்பிவிட்டனர்.
இதில் சாந்தனின் நிலைதான் மிகுந்த கவலைக்கிடம். 42 வயதாகும் அவருக்கு 60 வயது முதியவரைப்போல் தோற்றம். இத்தனை வருட சிறை வாழ்க்கையில் ரத்த உறவுகளாக யாருமே வந்து சாந்தனைச் சந்திக்கவில்லை. கனடாவில் இருக்கும் சகோதரர் எழுதுகிற கடிதங்கள் மட்டுமே அவருக்கான ஆறுதல்... கூடவே எழுத்துக்களும்!

சிறைக்குள் இருந்தபடியே 'சிறைப்பூக்கள்’ என்னும் இதழை நடத்தி, இதர கைதி களையும் எழுதவைத்திருக்கிறார். 'கன வொன்று நனவான வேளை’ என்ற தலைப் பில் சிறுகதைத் தொகுப்பும், 'சிறை அறை சின்ன ஜன்னல்’ என்ற தலைப்பில்ஹைக்கூ தொகுப்பும் வெளியிட்டு இருக்கிறார். சிங்கள வரலாற்று நூலான மகா வம்சத்தை ஆராய்ச்சி செய்து, ஈழத் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து 300 பக்க நூல் ஒன்றையும் எழுதி இருக் கிறார். இதர கைதிகளின் நிலை யைக் கேட்டு, 'கம்பிகள் சொன்ன கதைகள்’ என்ற தலைப்பில் சாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு விழிப்புணர்வு பதிப்பகத்தில் தயாராகி வருகிறது.
தூக்குக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் தன்னைச் சந்திக்க வந்த வழக்கறிஞர் காமரா ஜிடம், ''தொகுப்பு தயாராகிவிட்டதா? 8-ம் தேதிக்குள் கிடைத்தால், என் இறுதிப் படைப்பைப் பார்த்துவிட்டு என் பயணத்தை முடித்துக்கொள்வேன்!'' எனச் சொல்லிக் கலங்கி இருக்கிறார் சாந்தன்.
பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மூலமாக உணர்வாளர்கள் நடத்தும் சட்டப் போராட்டம் நிச்சயம் தங்களைக் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறார்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும். அதேவேளை, 'ஒருவேளை சட்டப் போராட்டம் தோற்றுவிட்டால்?’ எனச் சொல்லி சிறைத் துறை அதிகாரிகளிடம் இவர்கள் வைத்திருக்கும் கோரிக்கை...
''எங்களைத் தனித் தனி சிறைகளில் தூக்குப் போடாதீர்கள். 21 ஆண்டுகள் இணைந்திருந்த நாங்கள்... சாகும்போதும் ஒன்றாகவே சாகிறோம்!''
''இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?'' என சாந்தனிடம் கேட்டபோது, வழக்கறிஞர் காமராஜ் கையில் முகம்மது பஷீரின் இந்தக் கவிதையைத் திணித்து, ''இதுவே என் பதில்!'' எனச் சொல்லி இருக்கிறார்.
அந்தக் கவிதை...
அவனது வாயில் துணிகளை அடைத்தனர்
கைகளைப் பிணைத்து
மரணப் பாறையுடன் இறுகக் கட்டினர்
பின்னர் கூறினர்
நீ ஒரு கொலைகாரன் என்று
அவனது உணவையும் உடைகளையும்
கொடிகளையும் கவர்ந்து சென்றனர்
மரணக் கூடத்தினுள் அவனை வீசி எறிந்தனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு அயோக்கியன் என்று
அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்
துரத்தப்பட்டான்
அவனது அன்புக்குரியவளையும்
அவர்கள் தூக்கிச் சென்றனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று
தீப்பொறி கனலும் விழிகளும்
ரத்தம் படிந்த கரங்களும் உடையவனே
இரவு குறுகியது
சிறைச்சாலைகள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்றும் இறக்கவில்லை
அவன் தன் கண்களாலேயே
இன்னும் போரிடுகிறான்
காய்ந்துபோன
ஒரு கோதுமைக் கதிரின் விதைகள்
கோடிக்கணக்கில் பசிய கதிர்களால்
சமவெளியை நிரப்பவே செய்யும்!