Published:Updated:

அமீர் கானின் எதிர்காலம் விஜய் சேதுபதி கையிலா?! எப்படியிருக்கும் `லால் சிங் சத்தா?'

Lal Singh Chadda - Forrest Gump
Lal Singh Chadda - Forrest Gump

கடந்த 1994-ம் ஆண்டு வெளியான `ஃபாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது உருவாகிவருகிறது. அதுல் குல்கர்னி திரைக்கதை எழுதி அமீர் கான் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு, `லால் சிங் சத்தா' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

``சாக்லேட்டுகள் நிறைந்த ஒரு பெட்டகம் போலத்தான் வாழ்க்கை... அதில் யாருக்கு என்ன கிடைக்கும் என்பதே எவருக்கும் தெரியாது." இப்படி வாழ்க்கை அடுத்த நொடிக்குள் ஒளித்துவைத்திருக்கும் வியப்புகளையெல்லாம் சாக்லேட்டைப் போலவே இனிமையான ஒரு பயணத்தின் வாயிலாக உலகத்துக்கு எடுத்துச் சொன்ன படம்தான், `ஃபாரஸ்ட் கம்ப்'. `மிராக்கிள்ஸ் ஹேப்பன்ட் எவ்ரி டே' (அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் நிகழும்) என்ற ஒரு தத்துவத்தை ஃபாரஸ்ட் கம்ப் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின்மீது ஏற்றி, அவனது வாழ்க்கை வரலாற்றை ஒரு அழகிய கவிதையாக இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

Forrest Gump
Forrest Gump

அதோடு விட்டுவிடாமல், எளிய மனிதனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், ஒட்டுமொத்த அரசாங்கத்தையே புரட்டிப்போடும் வல்லமைகொண்டவை என்பதையும் படத்தின் திரைக்கதை ஓட்டத்தின் மேல்பரப்பில் இழையோடவிட்டிருப்பார்கள். அப்படி, கம்ப்பின் சின்னச்சின்ன செயல்பாடுகள்தான், அமெரிக்காவின் நிகழ்கால அரசியலில் ஏற்படுத்தும் மிகப்பெரிய தாக்கமாக இருக்கும். இதுதான் இப்படத்தின் சுவாரஸ்யத்துக்கு மேலும் வலுசேர்க்கும் அம்சம்.

டாம் ஹாங்ஸ் நடித்து, கடந்த 1994-ல் வெளியான இந்தப் படத்தின் இந்தி ரீமேக், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகிவருகிறது. அதுல் குல்கர்னி திரைக்கதை எழுதி, அமீர் கான் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு, `லால் சிங் சத்தா' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்துக்கான எதிர்ப்பார்ப்பும் உச்சாணிக்கொம்பில் ஏறிக்கொண்டது. காரணம், `ஃபாரஸ்ட் கம்ப்' வெளியான பின் அரசியல்ரீதியிலும், சமூகரீதியிலும் கிளப்பிய சர்ச்சைகள்தாம்.

Lal Singh Chadda - Forrest Gump
Lal Singh Chadda - Forrest Gump

அமெரிக்காவின் மறுமலர்ச்சி யுக வரலாற்றின் மிகப் பெரிய ஊழலான வாட்டர்கேட் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனை கம்ப்தான் தன்னை அறியாமல் காட்டிக்கொடுப்பான். அதேபோல, வியட்நாம் நாட்டில் போர் மூண்ட சமயத்தில், அமெரிக்காவின் பங்கு அதில் என்னவாக இருந்தது என்றும் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும். இதுபோக, `ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை இடதுசாரி சிந்தனைகொண்டவர்கள், வலதுசாரி படமாகத்தான் பார்ப்பார்கள். அதேவேளை, வலதுசாரியினருக்கு இது இடதுசாரிப் படமாகத் தெரியும். இப்படி படம் முழுக்க அரசியல் கொட்டிக்கிடக்கும்.

Vikatan

இத்தகைய அரசியல் சூழல் நிறைந்த திரைக்கதையை இப்போது அப்படியே இந்தியப்படுத்த வேண்டியதே அதுல் குல்கர்னியின் முதல் கடமையாக இருக்கும். அப்படியென்றால், இந்தியாவின் பல அரசியல் நிகழ்வுகளை `லால் சிங் சத்தா' கிளறும் என்பதில் சந்தேகமில்லை. போஃபர்ஸ் ஊழலில் தொடங்கி ரஃபேல் வரை இந்தியப் பிரதமர்களின் பெயர்கள் அடிபட்ட ஊழல் குற்றச்சாட்டுகளே இங்கு ஏராளமாக உள்ளன. வாட்டர்கேட்டுக்கு நிகராக ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு குறித்த காட்சி நிச்சயம் இந்தப் படத்தில் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Forrest Gump
Forrest Gump

வியட்நாம் பிரிவினையில், அமெரிக்காவின் தலையீட்டுக்கு இணையான வரலாற்று நிகழ்வுகள் இந்தியாவிலும் உண்டு. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பரப்பை பங்களாதேஷாக மாற்ற இந்தியா மேற்கொண்ட போர் தந்திரங்கள் குறித்தோ, இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேர்ந்த போரில் இந்திய அமைதிப்படையின் பங்கு குறித்தோ இந்தப் படம் பேசலாம்.

அதனால் நிச்சயம் தேவைக்கு அதிகமாகவே இந்தப் படம் சர்ச்சைகளைச் சுமந்துவருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போரின் கொடூரங்களை ஒரு புறம் காட்சிப்படுத்திவிட்டு, அதை எதிர்த்துக் குரல் எழுப்பும் ஹிப்பி கலாசாரத்தை மறுபுறம் விமர்சிக்கும் ஃபாரஸ்ட் கம்ப். இப்படி, இடதா வலதா எனத் தெளிவான சித்தாந்தம் ஒன்றைக் குறிப்பிடாமல் நகரும் இந்தப் படத்தின் ஓட்டம், எந்த அளவுக்கு இந்திய சமூகத்தின் மீதும் பொருந்தும் என்பது சிக்கலான கேள்வி.

Forrest Gump
Forrest Gump

வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையே நிலவவேண்டிய ஒற்றுமை குறித்தும், `ஃபாரஸ்ட் கம்ப்' மிக ஆழமாக அலசியிருக்கும். கம்ப், போரின் சமயத்தில் சந்திக்கும் தன் நண்பரான பெஞ்சமின் புஃபோர்டு பப்பா ப்ளூ என்ற கறுப்பின வீரனுடனான நட்புதான், அவனுடைய எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். அதை இந்தியச் சமூகத்தோடு ஒப்பிட்டால் சிலவற்றை இப்போதே டீகோட் செய்யலாம். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு அதிகமாக இருக்கும். அவர்களைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தில் மதராஸ் ரெஜிமென்ட் பெயர்போன ஒன்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொட்டு மதராஸ் ரெஜிமென்ட் இயங்கிவருகிறது. இந்திய இராணுவத்தின் மிகப் பழைய பிரிவும் இதுதான். பெரும்பான்மைத் தமிழர்களாலான இந்த ரெஜிமென்ட், கார்கில் போர், பங்களாதேஷ் விடுதலைப்போர் எனப் பல போர்களில் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

`ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து யோகி பாபு?

அப்படியென்றால், சீக்கியரான லால் சிங், போரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தி மொழி எதிர்ப்பு தொடங்கி, மதச்சார்பு, அரசியல் நிலைப்பாடு எனப் பலவற்றில் பிளவுபட்டு இருக்கும் வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையே ஒரு இணக்கம் ஏற்படும் வகையில் அமீர் கான்-விஜய் சேதுபதி நட்புக் காட்சிகள் இந்தப் படத்தில் காட்டப்படும் வாய்ப்பும் இருக்கிறது. லால் சிங்கின் எதிர்காலமும் விஜய் சேதுபதி ஏற்கும் பப்பா கதாபாத்திரத்தின் கையில்தான் என்பதுபோன்றும் காட்சிகள் இருக்கலாம்.

Forrest Gump
Forrest Gump

என்றாலும், தனிமனித மாரத்தான் ஓட்டம், பப்பா-கம்ப் கடம்பா நிறுவனத்தின் உருவாக்கம், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறக்கும் அளவுக்கான திறமை எனப் பல ஃபீல்குட் அம்சங்களும் கம்ப் கதையில் ஏராளம். அந்த ஃபீல் குட் தன்மையே ஃபாரஸ்ட் கம்ப்பை இன்றும் ஒரு கிளாசிக்காக வைத்திருக்கிறது. சரியான அரசியல் நிலைப்பாடு, ஃபீல்குட்டான திரைக்கதை அமைப்பு என `லால் சிங் சத்தா'வும் அதே அளவு மெனக்கெடல்களுடன் உருவாகுமாயின், இந்தப் படமும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த கட்டுரைக்கு