Published:Updated:

``அசோசியேஷன்ல இருக்கிற பெரிய ஆளுங்களே அநாகரிகமா நடந்துக்கிட்டா எப்படி?!" - ராஜசேகர் மனைவி தாரா

தாரா ராஜசேகர்
தாரா ராஜசேகர்

`எல்லோரும் சேர்ந்து அசோசியேஷன் ஃபார்ம் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த அசோசியேஷன்ல பொறுப்புல இருக்கிற சில பெரிய ஆளுங்களே இந்த மாதிரியான அநாகரிகச் செயல்ல ஈடுபட்டாங்கன்னு எனக்குத் தெரியவந்தது.’

``ஆறிலிருந்து அறுபது வரைக்கும் வயசு வித்தியாசமெல்லாம் கிடையாதுங்க... இந்த மாதிரி ஆளுங்களுக்கு பொம்பளை தனியா இருந்தான்னாளே போதும். அதுவும் சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவன்னா, இன்னும் இளக்காரமா போயிடுது. என் புருஷன் ஆசையா வாங்கின வீடு அது. ராத்திரி என்னால அங்க சரியாகூட தூங்க முடியலை. அதனாலதான் வேற வழியில்லாம தனி மனுஷியா போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சு புகார் தந்தேன்."

- சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகார் குறித்து, மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா சொன்ன வார்த்தைகள் இவை.

நடிகர் ராஜசேகர்
நடிகர் ராஜசேகர்

ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பல முகம் காட்டிய ராஜசேகர், கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தது நினைவிருக்கலாம். இறக்கும் தறுவாயில் சென்னை வடபழனியில் சொந்தமாக ஒரு ஃபிளாட் வாங்கியிருந்தார். அந்த வீட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ராஜசேகர் மறைவுக்குப் பிறகு அவரின் மனைவி தாரா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்துவருகிறார். இந்தத் தம்பதிக்குப் பிள்ளைகள் இல்லை.

ராஜசேகர் மறைந்த அடுத்த சில தினங்களிலேயே, வீடு வாங்க கடன் தந்த வங்கியிலிருந்து தவணை கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளதாகவும், தனக்கு எவ்வித வருமானமும் இல்லையென்பதால் என்ன செய்வதென தெரியவில்லை என்றும் முன்பே நம்மிடம் பேசியிருந்தார் தாரா.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைத் தந்துள்ளார் தாரா.

தாராவின் புகார்
தாராவின் புகார்

அந்தப் புகார் குறித்து தாராவிடம் பேசினேன்.

``பேங்க்ல இருந்து தினமும் வந்துகிட்டே இருந்தாங்க. வீட்டை வித்துக் கட்டலாம்னா ரெண்டு விஷயம் என்னைத் தடுத்தது. இது அவர் ஆசையா வாங்கின வீடு. இதை விற்கணுமாங்கிற யோசனை இருந்தது. அடுத்ததா, இந்த வீட்டை அவசரத்துக்கு விற்குறாங்கன்னு தெரிஞ்சா நியாயமான தொகைக்கு கேட்க மாட்டாங்க. அதனால பேங்க்காரங்ககிட்ட கொஞ்ச அவகாசம் கேட்டுட்டு, இந்தப் பிரச்னையில இருந்து வெளியில வர்றதுக்கான முயற்சிகள்ல இருந்தேன். இந்தப் பிரச்னை அப்பார்ட்மென்ட்ல இருக்கிற அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்கள்ல ஒருசிலராலதான் இப்போ பிரச்னையே.

`என்ன ஆச்சு'னு பிரச்னையை விசாரிக்கிற மாதிரியும், இதுல உதவுற மாதிரியும் வந்து பேசினாங்க. ஆனா, போகப்போக அவங்க நோக்கம் இது இல்லைனு எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. திடீர்னு சாயங்காலம் ஏழு மணிக்கு மேல வீட்டுக்கு வரத் தொடங்கினாங்க. அப்போவே அவங்களை நான் புறக்கணிக்கத் தொடங்கிட்டேன். அதுக்குப் பிறகு ஒரு நாள் ராத்திரியில வந்து கதவைத் தட்டத் தொடங்கினாங்க. கொடுமை என்னன்னா, அந்த அப்பார்ட்மென்ட்ல நூற்றுக்கும் மேல வீடுகள் இருக்கு. எல்லோரும் சேர்ந்து அசோசியேஷன் ஃபார்ம் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த அசோசியேஷன்ல பொறுப்புல இருக்கிற சில பெரிய ஆளுங்களே இந்த மாதிரியான அநாகரிகச் செயல்ல ஈடுபட்டாங்கன்னு எனக்குத் தெரியவந்தது.

இன்னொரு பெரிய கொடுமை அக்கம்பக்கத்துல இருக்குற சிலர்கிட்ட இதைப் பத்தி நான் சொன்னப்போ, அவங்கள்ல சிலர், `அவங்க அப்படித்தான், அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போகப் பாருங்க; உங்க பிரச்னையும் சரியாகிடும்’னு சொல்றாங்க. இப்படிச் சொன்னதுல சில பெண்களும் அடக்கம். என்னங்க ஒரு வயசு வரம்பு வேண்டாமா. இவங்கெல்லாம் என்ன மாதிரியான ஆளுங்க."

"ஒரு வேளை மட்டுமே சாப்பாடு... இதில் இ.எம்.ஐ கட்ட நான் எங்க போவேன்?" - மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி

``இவங்களால ராத்திரியில வீட்டுல தங்குறதையே விட்டுட்டு பக்கத்துத் தெருவுல இருக்கிற அக்கா வீட்டுக்குப் போய் தங்குறேன். ஆனா, எத்தனை நாளைக்கு இப்படியே போயிட்டிருக்க முடியும். அதனாலதான் போலீஸ்ல புகார் தந்தேன். ஸ்டேஷன்ல இருந்து அவங்களைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க’’ என்கிறார் தாரா.

அடுத்த கட்டுரைக்கு