Published:Updated:

``முரண்டு பிடிச்சா சம்பளம்... காத்திருந்தா ஏமாளியா?'' - 2019ன் `பிக்பாஸ்' அனுபவம் சொல்லும் சரவணன்

சரவணன்
சரவணன்

`செகண்டு இன்னிங்ஸ்'ங்கிற பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளே வந்தோம்; இப்படி ஒரு அவப்பெயருடன் அவுட் ஆக்கி அனுப்பிட்டாங்களே'னு அன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை.

`` `முதல் பந்தில் சிக்சர்; அடுத்த பந்தில் அவுட்'னா எப்படி இருக்கும்... 2019 எனக்கு அந்த மாதிரிதான் இருந்தது'' என ஆரம்பிக்கிறார் `சித்தப்பு' சரவணன்.

ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் பிறகு `நந்தா', `பருத்தி வீரன்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாரத்திரங்களிலும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அப்படி `சிவனே' என்று இருந்தவரைச் சின்னத்திரை நிகழ்ச்சியான `பிக் பாஸ்' வீட்டுக்குள் தள்ளிவிட்டது விஜய் டிவி. அந்த நிகழ்ச்சியின் வடிவத்தைப் புரிந்துகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை, மனிதர் வெகு வெள்ளந்தியாக அந்த வீட்டுக்குள் வலம் வந்தார்.

சரவணன் குடும்பம்
சரவணன் குடும்பம்

`காலேஜ் போறப்போ பஸ்ல போனதெல்லாம் எதுக்குன்னு நினைச்சீங்க. கூட்டத்துல நின்னிட்டிருக்கிற பொண்ணுங்களை உரசத்தான்' எனக் கமல் முன்னிலையிலேயே ஒருநாள் ஓபன் ஸ்டேட்மென்ட் விட, ஆடிப்போனது ஆடியன்ஸ் மட்டுமல்ல... சேனலும்தான்.

அப்படிப் பேசியதற்காகப் பிறகு மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். `மறைத்துப் பேசத் தெரியாம உண்மையை அப்படியே பேசினார்ங்க... அவரை வெளியில அனுப்பியிருக்கக் கூடாது' எனப் பிற்பாடு அவருக்கு ஆதரவும் கிடைத்தது. அந்த ஆதரவு சினிமா வாய்ப்புகளாகவும் மாறியது. சந்தோஷத்துடன் தேனிப்பக்கம் ஷூட்டிங் கிளம்பிவிட்டார். கூடவே சொந்த ஊரில் கோயில் ஒன்றைக் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டார்.

பிக் பாஸ் நிறைவு பெற்றபோது, அந்த ஃபினாலி விழாவுக்குக்கூட சேனல், சரவணனை அழைக்கவில்லை.

`2019 எப்படிப் போனது' என்றேன் சரவணனிடம்.

``நான் உண்டு என்னுடைய வேலை உண்டுனு இருந்தவனை `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முந்தைய வருஷங்கள்ல அந்த ஷோ சிலருக்கு நல்ல வாழ்க்கை கொடுத்தது கேள்விப்பட்டிருந்ததால சரினு போயிட்டேன். ஆனா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுக்கப்புறம்தான் அது போங்காட்டம்னு தெரிய வந்தது. எனக்கு இயல்புக்கு மீறி நடக்கத் தெரியலை. `செகண்டு இன்னிங்ஸ்'ங்கிற பெரிய நம்பிக்கையோட உள்ள வந்தோம். இப்படி அவப்பெயருடன் அவுட் பண்ணி அனுப்பிட்டாங்களேனு அன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூக்கம் வரலை. ஆனா, அடுத்த கொஞ்ச நாள்லேயே மக்கள் என்னைப் புரிஞ்சிகிட்டாங்கனு தகவல் வந்தது. `இது போதும்'னு திருப்திபட்டுக்கிட்டேன். நான் நினைச்ச அளவுக்கு கேரியர்ல மாற்றம் இல்லாதபோதும் ஓகேனு சொல்வேன். அதேபோல மக்கள் மறந்த சரவணனை, மறுபடியும் லைம்லைட்டுக்குக் கொண்டு வந்ததுக்காக, அந்த ஷோவுக்கு தேங்க்ஸ் சொல்லவும் மறக்க மாட்டேன்'' என்றவரிடம்,

பிக் பாஸ் போட்டியாளர்கள்ல மதுமிதாவுக்கும் உங்களுக்கும்தான் சேனல்கூட சண்டை. மதுமிதா தன்னுடைய ஊதியத்தைப் பெற்றுவிட்டார். உங்களுக்கான ஊதியம் கிடைத்துவிட்டதா'' எனக் கேட்டேன்.

சரவணன்
சரவணன்

``நிகழ்ச்சியில இருந்து என்னை வெளியேத்துனதுல எனக்கு வருத்தம் இருக்கு. ஆனாலும், சேனலுடைய அக்ரிமென்ட்ல அவங்க போட்டிருந்த எந்த நிபந்தனையையும் நான் மீறவே இல்லை. நூறு நாள் வெயிட் பண்ணி அதக்கப்புறம்தான் சம்பளம் கேட்டேன். அப்போகூட சில நாள்கள் அலைய வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி, அது இதுன்னு என்னென்னவோ காரணம் சொன்னாங்க. கடைசியா ஒரு வழியா வாங்கிட்டேன். ஆனா, கடந்த சீசன்லேயும் சரி, முந்தைய சீசன்லேயும் சரி, சிலர் அடம்பிடிச்சு வெளியில வந்த மறுநாளே சம்பளம் வாங்கிட்டுப் போனது தெரிய வந்தது. இந்த இடத்துலதான் எனக்கு வருத்தம். அப்படின்னா அக்ரிமென்ட்னு ஒண்ணு எதுக்குங்க. முரண்டு பிடிக்கிறவனுக்கு உடனே செட்டில்மென்ட் போகுது, பேசாம இருக்கிறவன் காத்திருக்கணும்னா என்னங்க நியாயம்.

இனி வர்ற காலத்துலயாச்சும் இந்த மாதிரி நடந்துக்காதீங்கனு சேனலை இந்த நேரத்துல கேட்டுக்க விரும்புறேன்" என்கிறார் சரவணன்.

``ரஜினி, கமல் சரித்திரத்தில் என் பெயர் தவிர்க்க முடியாதது, ஏனெனில்..."- பின்புலம் பகிரும் ஸ்ரீப்ரியா
அடுத்த கட்டுரைக்கு