எல்லோரையும் சிரிக்க வைத்த வைகைப்புயல் வடிவேலுவை அவர் தாயார் சரோஜினி அழ வைத்துச் சென்றுள்ளார்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் 87 வயதான தாயார் சரோஜினி உடல்நலக் குறைவு காரணமாக நான்கு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணமடைந்தார்.
இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 5 ஆண், 2 பெண் என மொத்தம் 7 பிள்ளைகள். வடிவேலு மீது மிகவும் பாசம் வைத்தவர், அவர் கலைத்துறையில் வெற்றிபெற நம்பிக்கை ஊட்டியவர்.


இவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
மு.க.அழகிரி நேரில் வந்து ஆறுதல் கூறினார். அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பி. மூர்த்தி, "முதலமைச்சர் ஸ்டாலினும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போனில் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நேரில் வந்து மரியாதைச் செலுத்தினோம்" என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வடிவேலுவிடம் ஆறுதல் தெரிவித்தனர்.

ஆறுதல் கூறிய நம்மிடம் பேசிய வடிவேலு, "நல்லா இருந்தாங்க. வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. இடையில மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுத்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து சிகிச்சை அளித்தோம். நேத்து இறந்துட்டாங்க. சென்னையில என் கூடவே இருங்கம்மான்னு எத்தனையோ தடவை நான் கூப்பிட்டும் வர மாட்டேன்னுட்டாங்க. அவங்களுக்குச் சொந்த ஊரைவிட்டு வர இஷ்டமில்லை. இதுதான் புடிக்கும்" என்றார் தழுதழுத்த குரலில்.

மதியம் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட அழுதபடியே இறுதிச் சடங்குகளைச் செய்தார் வடிவேலு.
அவரின் தாயார் சரோஜினியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.