Published:Updated:

`தரமான உணவு... அன்பான உபசரிப்பு... மகனுடன் சமையல்!' -நடிகை ஜெயஶ்ரீயின் அமெரிக்கா வீக் எண்ட் அனுபவம்

actress jayashree
actress jayashree

``சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கும். அதைப் பயன்படுத்தி, வீட்டிலும் ஸ்டார் ஹோட்டலிலும் தயாரிக்கிற மாதிரி மிகவும் நேர்த்தியாகவும் சுகாதாரமான முறையிலும் உணவு சமைக்கணும்." 

`தென்றலே என்னைத் தொடு', `விடிஞ்சா கல்யாணம்' உட்பட பல வெற்றிப் படங்களின் நாயகி, ஜெயஶ்ரீ. 80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. திருமணமாகி 30 ஆண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். 

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

அந்த நாட்டில் எம்.எஸ் டிகிரி முடித்தவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். தற்போது புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்துவருகிறார். ஆதரவற்ற மக்களுக்காக அமெரிக்க அரசு நடத்திவரும் காப்பகத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் பலரும் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்கள். இவர்களால், தனியார் நட்சத்திர உணவகத்துக்கு இணையான தரத்தில் அந்தக் காப்பகத்தில் உணவு சமைத்து அன்புடன் பரிமாறப்படுவது கூடுதல் சிறப்பு. பல ஆண்டுகளாக ஜெயஶ்ரீயும் அங்கு தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``வீடு இல்லாத, ஆதரவற்ற மக்களுக்கு கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்கா அரசால் காப்பகம் நடத்தப்படுகிறது. இதேபோல சில தனிப்பட்ட முறையிலும் சில காப்பகங்கள் செயல்படுகின்றன. அதில் வசிக்கும் மக்களுக்குத் தரமான உணவு சமைத்துக் கொடுக்க விருப்பமுள்ளவர்கள் வாலன்டியராகச் செல்லலாம். அங்கு சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கும். அதைப் பயன்படுத்தி, வீட்டிலும் ஸ்டார் ஹோட்டலிலும் தயாரிக்கிற மாதிரி மிகவும் நேர்த்தியாகவும் சுகாதாரமான முறையிலும் உணவு சமைக்கணும். 

மகன் அர்ஜூனுடன் ஜெயஸ்ரீ
மகன் அர்ஜூனுடன் ஜெயஸ்ரீ

வார இறுதி விடுமுறை நாள்களில்தான் நாங்கள் செல்வோம். அப்போது எங்களுக்குச் சொல்லப்படும் உணவுப் பட்டியலைப் பொறுத்து சமைப்போம். அதற்காக, வாலன்டியராகச் செல்லும் நாங்கள் அனைவருமே சமையலில் நல்ல அனுபவம் கொண்டிருக்கிறோம். அரசுக் காப்பகம் தவிர, நாதன் கணேசன் என்பவர் நடத்திவரும் காப்பகத்திலும் உணவு சமைப்பேன். ஒவ்வொரு காப்பகத்திலும் சராசரியா ஒருவேளைக்கு 200 பேர் சாப்பிடும் அளவில் நண்பர்கள் குழுவுடன் இணைந்து உணவு சமைப்போம்.

சமைச்சு முடிச்சதும் காப்பகத்தில் வசிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கு, அன்பாகவும் மரியாதையுடனும் உணவுகளைப் பரிமாறணும். பிறகு, அவர்கள் மகிழ்ச்சியுடன் எங்களை வழியனுப்பி வைப்பார்கள். இதுதான் அந்தக் காப்பகத்தில் நடைபெறும் வழக்கமான நடைமுறை. பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களும், உயர்கல்வி கற்போரும்தாம் இந்தப் பணியில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். 

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

`நாம் எந்த நிலையில் இருந்தாலும், சமூகத்தில் எல்லோரும் ஒன்றுதான். யாருக்கும் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இருக்கக் கூடாது. இருப்போர், இல்லாதோருக்கு முடிந்தவரையில் உதவி செய்ய வேண்டும்' என்பதுபோன்ற விஷயங்களை மையப்படுத்தித்தான் இதுபோன்ற காப்பகங்களில் வாலண்டியர்களாகப் பணியாற்றுகிறோம். 

உணவு
உணவு

இந்தப் பணியைப் பல வருடங்களாகச் செய்றேன். இதனால் அளவில்லா மனநிறைவு கிடைக்குது. என் மூத்த பையன் அர்ஜூனும் விடுமுறை தினங்கள்ல என்னுடன் ஆர்வமுடன் காப்பகத்துக்கு வருவான். காய்கறிகள் நறுக்கித் தருவது, வெஜிடபிள் ஃப்ரை உள்ளிட்ட அவனுக்குத் தெரிஞ்ச உணவுகளைச் சமைப்பான். நாங்க இருவரும் இணைந்து சமைக்கிறது மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், ஜெயஶ்ரீ.

அடுத்த கட்டுரைக்கு