Published:Updated:

`அரசியல் ஆசை இருந்தால் முதல்வர் ஆவீர்கள்!'- சாமித்தோப்பில் நயன்தாரா சொன்ன பதில் என்ன?

நேற்று மாலை 4 மணியளவில் சாமித்தோப்பிலுள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்குச் சென்றவர், கோயிலின் வழக்கப்படி சுருள் வைத்து வழிபட்டார்.

சாமித்தோப்பில் நயன்தாரா
சாமித்தோப்பில் நயன்தாரா

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகும் `மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துவருகிறார். இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்புக்காகச் சென்றவர் அப்பகுதியிலுள்ள கோயில்களில் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றிருந்த நயன்தாராவைச் சந்தித்த பா.ஜ.க நிர்வாகி நரசிம்மன், கட்சியில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்குச் சென்ற நயன்தாராவுக்கு, அக்கோயிலின் அரசியல் பின்புலம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிட்டதாம்.

சாமித்தோப்பில் நயன்தாரா
சாமித்தோப்பில் நயன்தாரா

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோயில் ஊழியர்கள், ``அம்மன் படத்தில் நடிப்பதால் மிகவும் பயபக்தியுடன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்கிறார். இதற்காக தென்மாவட்டங்களிலுள்ள பிரபலமான கோயில்களில் சாமி தரிசனம் செய்துவருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் சாமித்தோப்பிலுள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்குச் சென்றவர், கோயிலின் வழக்கப்படி சுருள் வைத்து வழிபட்டார். அக்கோயிலுக்கு வந்து அரசியலில் உயர்ந்தவர்கள் பற்றி அங்குள்ளவர்கள் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

‘சந்திரசேகர், தேவகவுடா போன்றவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்த பின்னர்தான் பிரதமர் பதவியில் அமர்ந்தார்கள். அடுத்தடுத்த ஊழல் வழக்குகளால் நொடிந்து போயிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2001-ல் இக்கோயிலுக்கு வந்து காணிக்கை அளித்த பின்னர் மீண்டும் முதல்வரானார். இதன்பின்னர், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் பி.ஹெச்.பாண்டியன் மூலமாக காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். உங்களுக்கும் அரசியல் ஆசைகள் இருந்தால் வேண்டிக்கொள்ளுங்கள், நிச்சயம் முதல்வர் ஆவீர்கள்’ என்று வாழ்த்தியுள்ளனர்.

சாமித்தோப்பில் நயன்தாரா
சாமித்தோப்பில் நயன்தாரா

இதற்குப் பதில் கொடுத்த நயன்தாரா, `எனக்கு அரசியல் ஆசையெல்லாம் ஏதுமில்லை. திருமணத்துக்கு முன்னதாக எனக்கு விருப்பமான கோயில்களுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நானே எதிர்பாராதவிதமாக அம்மன் வேடத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் நான் போக நினைத்த கோயில்களுக்கு அருகிலேயே ஷூட்டிங்கும் நடைபெறுவதால் கோயிலுக்கு வருகிறேன். மற்றபடி அரசியல் எண்ணம் ஏதுமில்லை’ என்று சிரித்தபடி கூறிவிட்டார்.

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு முடிவதற்குள் இன்னும் பல கோயில்களுக்கு ரவுண்ட் அடிக்க நயன்தாரா முடிவெடுத்துள்ளார்” என்றனர்.