பாலிவுட் நடிகை ரவீணா தண்டன் கடந்த கடந்த மாதம் 22ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சத்புர புலிகள் சரணாலயத்தில் புலிகளை வாகனத்தில் சென்று பார்வையிடச் சென்றார். புலிகளைப் பார்வையிட வனத்துறையினரின் வாகனத்தில் சென்றதாகத் தெரிகிறது. வனத்துறையினர் தான் வாகனத்தை ஓட்டினர். ஆனால் வாகனம் ஒரு புலியின் அருகில் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை புலி ஆக்ரோஷம் அடைந்திருந்தால் சிக்கலாகி இருக்கும். ரவீணா தண்டன் புலிகள் அருகில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கு ரவீணா தண்டன் விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``புலிகள் எப்போது என்ன செய்யும் என்று யாராலும் கணிக்க முடியாது.

அதிர்ஷ்டவசமாக நாங்கள் அங்கு இருந்தபோது புலி எந்தவித செயலிலும் ஈடுபடவில்லை. புலியின் எந்தவித செயல்பாடும் எங்களைத் திடுக்கிட வைத்திருக்கும். வனத்துறையின் லைசென்ஸ் பெற்ற வாகனத்தில் பயிற்சி பெற்ற டிரைவர்களுடன் புலிகளை பார்வையிட சென்றோம். அவர்களுக்கு எங்கு வரை செல்லவேண்டும் என்று தெரியும். நானும் மற்ற சுற்றுலா பயணிகளும் புலியின் செயல்பாட்டை மிகவும் அமைதியாக கண்டுகளித்தோம். புலிகள் அடிக்கடி கடந்து செல்லும் சுற்றுலா பாதையில்தான் நாங்கள் சென்றோம். பொதுவாக வாகனங்கள் அருகில் புலிகள் வருவது வழக்கம்தான்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் வாகனத்தைப் புலிகளுக்கு மிகவும் அருகில் கொண்டு சென்றது தொடர்பாக வாகனத்தின் டிரைவர் மற்றும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.