Published:Updated:

`த்ரில் கதைக்களம்.. மாஸ் ரோல்.. இதுபோதும் எனக்கு!' - உற்சாகத்தில் சரண்யா

சரண்யா, கிருஷ்ணா
சரண்யா, கிருஷ்ணா ( ரன் சீரியல் )

"பொதுவா சீரியல்களில் மாமியாரை மருமகள் எதிர்த்துப் போராடுவதைத்தான் 'empowerment'னு காட்டுறாங்க. ஆனா, இந்த சீரியலில் அப்படி இருக்காது.''

செய்தியாளராக இருந்து சின்னத்திரைக்கு வந்து சில மாதங்களிலேயே 'ஆர்மி' ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களைப் பெற்றவர், சரண்யா. அழகான தமிழ் உச்சரிப்பு, கலையான முகம், இயல்பான நடிப்பு. ரசிகர்கள் மனதில் இடம்பெற இதைத் தவிர வேறென்ன வேண்டும். இவர் தற்போது, 'ரன்' சீரியலில் பிஸி.

சரண்யா
சரண்யா

விகடன் தயாரிப்பில் உருவாகிவரும் பிரமாண்ட சீரியல், 'ரன்’. ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இந்த சீரியலில் ’தெய்வமகள்’ புகழ் கிருஷ்ணா, 'நெஞ்சம் மறப்பதில்லை’ புகழ் சரண்யா, 'வாணி ராணி' புகழ் நவ்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரியலின் புரோமோக்கள் ஒவ்வொன்றும் மாஸ் ரகம். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரியலின் கதாநாயகி சரண்யாவைச் சந்தித்து உரையாடினோம்.

சின்னத்திரை, செய்தித் துறை... உங்களுக்குப் பிடித்த வேலை எது?

சரண்யா
சரண்யா

"சின்னத்திரைக்கு வர்றதுக்கு முன்னாடி கேட்டிருந்தான், செய்தியாளர் வேலைதான் பிடிச்ச வேலைனு பதில் சொல்லியிருப்பேன். ஏன்னா, செய்தி வாசிக்கும்போது, மக்கள் என் மூலமா நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறாங்கனு பெருமிதமா இருக்கும், நானும் தினமும் புதுப் புது விஷயங்களைத் தெரிஞ்சுப்பேன். தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் வந்த சமயத்துல, எனக்கும் கொஞ்சம் பிரேக் தேவைன்னு தோணுச்சு. ஆறு மாதம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணப்போதான், 'நெஞ்சம் மறப்பதில்லை' வாய்ப்பு வந்தது. சின்னத்திரை எனக்குப் புது அடையாளத்தைக் கொடுத்துச்சு. மக்கள் என்னை அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்குறாங்க, அன்பைப் பொழியிறாங்க. 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் முடியும்போது, நிறைய ரசிகர்கள் 'ஏன் இவ்வளவு சீக்கிரமா சீரியலை முடிச்சிட்டாங்க'னு ஃபீல் பண்ணாங்க. அதுவே எனக்குக் கிடைத்த பெரிய வெற்றி. அதனால, ரெண்டு துறையும் எனக்கு சமமா பிடிக்கும்."

'ரன்' சீரியல் வாய்ப்பு பற்றிச் சொல்லுங்க?

நடிகையா என் பயணத்தைத் தொடங்குனப்போ, அந்த வேலை ரொம்பப் பிடிச்சது. போகப் போக கொஞ்சம் சலிப்பாகிடுச்சு. லைஃப் எந்தவொரு சவாலும், சுவாரஸ்யமும் இல்லாம ஒரேமாதிரி போறமாதிரி தோணுச்சு. மறுபடியும் செய்தி வாசிக்கப் போயிடலாமானுகூட யோசிச்சேன். அப்போதான், 'ரன்' வாய்ப்பு வந்தது. 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்ல 'ரன்' கதையைக் கேட்டேன். உடனே ஓகே சொல்லி, அக்ரீமென்ட்ல கையெழுத்து போட்டுட்டேன். ஏன்னா, கதை அவ்ளோ அருமையா இருந்தது. சுருக்கமா சொன்னா, 'ரன்' சீரியல்ல நடிக்கத்தான் நான் சின்னத்திரைக்கே வந்தேன்னு நினைக்கிற அளவுக்கு ஃபீல் ஆகிட்டேன். தவிர, சின்ன வயசுல இருந்தே எனக்கு 'ஆனந்த விகடன்', 'ஜூனியர் விகடன்' இதழ்களைப் படிக்கிற பழக்கம் இருக்கு. நான் பார்த்து வியந்த ஒரு நிறுவனத்தோடு சேர்ந்து வொர்க் பண்ணப்போறேன். அந்த சந்தோஷத்துலதான், 'ரன்' வாய்ப்புக்குப் பிறகு எனக்கு வந்த ஒரு சினிமா வாய்ப்பையும், ஒரு சீரியல் வாய்ப்பையும் வேணாம்னு சொல்லிட்டேன்.

சரண்யா
சரண்யா

நான் என்னென்ன எதிர்பார்த்தேனோ, அதெல்லாம் 'ரன்' சீரியலில் இருந்தது. ஒரு சீரியலில் என்னென்ன விஷயங்களைப் புதுசா பண்ணமுடியும்னு 'ரன்' சீரியலைப் பார்க்கும்போது தெரிஞ்சுப்பீங்க. போனோம்; வசனம் பேசுனோம்னு இல்லாம, 'ரன்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரொம்ப உற்சாகமா கிளம்பிப் போறேன். ரசிச்சு நடிக்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா, ஒரு புத்தகம் எழுதுற அளவுக்கு இங்கே புது அனுபவங்கள் கிடைக்குது.

"ரொம்ப உற்சாகமா கிளம்பிப் போறேன். ரசிச்சு நடிக்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா, ஒரு புத்தகம் எழுதுற அளவுக்கு இங்கே புது அனுபவங்கள் கிடைக்குது."

மேடை நாடகத்தில் நடிக்கிற கலை உணர்வோடுதான், இந்த சீரியல்ல நடிக்கிறேன். ஒரு சினிமா மாதிரி இந்த சீரியலை எடுக்குறாங்க. இயக்குநர், கேமராமேன்... இப்படி ஒட்டுமொத்த யூனிட்டுக்குமே வெள்ளித்திரை அனுபவம் இருக்கிறதால, ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்குறாங்க."

'ரன்' சீரியலில் உங்க கேரக்டர் எப்படி?

சரண்யா
சரண்யா

"என் கேரக்டர் பெயர், திவ்யா. அப்பாவோட பிசினஸை நிர்வகிக்கிற 'Empowering women' கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். ஒரு 'லேடி பாஸ்' கேரக்டர்னு சொல்லலாம். பொதுவா சீரியல்களில் மாமியாரை மருமகள் எதிர்த்துப் போராடுவதைத்தான் 'empowerment'னு காட்டுறாங்க. ஆனா, இந்த சீரியலில் அப்படி இருக்காது. இந்த சீரியலுக்காக என்னோட ஆடை தேர்வுகளும், புது டிரெண்டை உருவாக்கணும்னு பார்த்துப் பார்த்து செலக்ட் பண்றேன். கெத்தா, மாடர்னா இருக்கணும். அதேசமயம் பார்க்க கண்ணியமாகவும் தெரியணும். அப்படியான ஆடைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறேன்."

நடிப்பைத் தவிர பிடித்த விஷயங்கள்?

சரண்யா
சரண்யா

"புத்தகங்கள் நிறைய படிப்பேன். அரசியலைக் கவனிக்கிறது, அரசியலைப் படிக்கிறதும் ரொம்பப் பிடிக்கும். தவிர, எப்போவும் கடைப்பிடிக்கிற இரண்டு விஷயம், பழைய பாடல்களைக் கேட்பதும், தினமும் இரவு செய்திகளைப் படிப்பது. எங்க வீட்டுல நான் இருக்கும்போது எப்போவும் பழைய பாடல்கள் ஒலிக்கும் சேனலும், நியூஸ் சேனலும்தான் மாறி மாறி ஓடும். தவிர, என் அண்ணன் குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும், நீச்சலும் ரொம்பப் பிடிக்கும்."

மறக்க முடியாத ஃபேன் மொமன்ட்?

" 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலுக்குப் பிறகு எனக்கு 'ஆர்மி'யெல்லாம் ஆரம்பிச்சாங்க. ஏதோ விளையாட்டா பண்றாங்க, சீரியல் முடிஞ்சதும் எல்லோரும் கலைஞ்சிடுவாங்கனு நினைச்சேன். ஆனா, சீரியல் முடிஞ்ச பிறகும் 'ஆர்மி' அப்படியேதான் இருக்கு. சிங்கப்பூர், மலேசியாவுல இருக்கிறவங்கெல்லாம்கூட அட்மினா இருக்காங்க. 'நெஞ்சம் மறப்பதில்லை' 100-வது எபிசோடுக்கு மதுரையில் பேனர் வெச்சு அசத்தியிருந்தாங்க. இப்போ சமீபத்துல ஒரு ரத்ததான முகாம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அப்போ நான் ஹைதராபாத்ல இருந்தேன். அதனால, அதில் பங்கேற்க முடியல. அந்த ரசிகர்களுக்கு, ’உங்களுக்காக என்னால என்ன பண்ண முடியும்னு தெரியல. நான் இந்த ஃபீல்டுல இருந்தாலும், இல்லைன்னாலும் நீங்க தொடர்ந்து இதுமாதிரியான விஷயங்களைச் செய்யணும். அதேசமயம் இதை பப்ளிசிட்டிக்காக நினைச்சுப் பண்ணக்கூடாது’னு சொன்னேன்.

சரண்யா
சரண்யா

அப்புறம் ஒருமுறை என்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குக் கூட்டிக்கிட்டு போய், என் கையால குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தாங்க. இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு 'சரண்யா ஆர்மி' ஒரு மையப்புள்ளியா இருக்குனு நினைக்கிறப்போ, நெகிழ்வா இருக்கு. இவங்க ரசிகர்கள் மட்டும் கிடையாது; அதுக்கும்மேல! என் பலமும் இவங்கதான். இதுக்குப் பிரதிபலனா நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல!"

அடுத்த கட்டுரைக்கு