Published:Updated:

"குப்பைக் கீரை கடைஞ்சா ஆசையா சாப்பிடும்!" - மனோரமா பற்றி பார்வதி

மனோரமா
மனோரமா

என்னை பார்வதின்னு ஒருநாளும் முழுப் பெயரைச் சொல்லி அக்கா கூப்பிட்டதேயில்லை. செல்லமா `பாரு'ன்னுதான் கூப்பிடுவாங்க. ஜாலி மூடுல இருந்தா, `பாரு என்னைக் கொஞ்சம் பாரு'ன்னு கேலியா கூப்பிடுவாங்க.

மறைந்த நடிகை மனோரமாவின் 82-வது பிறந்த நாள் விழா 27 ம் தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை எஸ்.என். பார்வதி, மேடையிலேயே மனோரமாவின் நினைவில் கண்கலங்கி விட்டார். அவரிடம் மனோரமாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்.

"மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை!" - 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு #HBDManorama
பார்வதி
பார்வதி
naren

அவங்க நடிகை, ஆச்சிங்கிறதெல்லாம் மத்தவங்களுக்குத்தாங்க. எனக்கு அவங்க அக்கா. `திருமலை தென்குமரி'ன்னு ஒரு படம். அந்தப்பட ஷூட்டிங்காக நானும் அக்காவும் ஒரு மாசம் ஒண்ணா இருந்தோம். சீனியர், பெரிய நடிகைங்கிற பந்தா இல்லாம, சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம எல்லார்கிட்டேயும் நல்லா பழகும். அக்கா வந்தா... அந்த இடமே சிரிப்பும் காமெடியுமா ஆகிடும்.

அக்கா குப்பைக் கீரை கடைஞ்சி வைச்சா ஆசையா சாப்பிடும். அங்கங்கே முளைச்சுக் கிடக்கிற பல கீரைகளைத்தான் குப்பைக்கீரைனு சொல்லுவோம். அக்காவோட அசிஸ்டென்ட் ஒருத்தங்க கூடவே இருப்பாங்க. அவங்ககிட்டே சொல்லி யூனிட்ல இருக்கிற எல்லோருக்குமே இந்தக் கீரை மசியலை செய்யச் சொல்லிடுவாங்க. அவங்களும் ஷூட்டிங் எடுக்கிற இடத்துல இருக்கிற கீரைகளையெல்லாம் பறிச்சு, அங்கே இருக்கிற யார் வீட்டு ஆட்டுக்கல்லிலாவது அரைச்சு உப்பு, மிளகாய் சேர்த்து வேக வைச்சு கடைஞ்சிடுவாங்க. தாளிப்புகூட கிடையாது. அது அக்கா சொல்லிக் கொடுத்த கைப்பக்குவம். மொத்த யூனிட்டும் சப்புக்கொட்டிச் சாப்பிடும்.

மனோரமா
மனோரமா

அவங்க சீனியாரிட்டிக்கு தனியா உட்கார்ந்து கெத்தா சாப்பிடலாம். ஆனா, அக்கா அப்படிச் செய்ய மாட்டாங்க. திருமலை தென்குமரி படத்தோட ஷூட்டிங்கப்போ, சாயந்திரமானா எல்லோரும் விளையாட ஆரம்பிப்போம். ஓடிப் பிடிக்கிறது, உட்கார்ந்தா பிடிக்கணும்; நின்னா பிடிக்கணும்னு நிறைய விளையாடுவோம். அக்கா எங்க எல்லார்கூடவும் சந்தோஷமா விளையாடுவாங்க. அக்கா அப்போ ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட். காலையில இருந்து நைட் வரைக்கும் கால்ல சக்கரம் கட்டிட்டுப் பறந்துட்டு இருந்த காலம் அது. `திருமலை தென்குமரி' ஷூட்டிங் நடந்த அந்த ஒரு மாசமும் எங்ககூட நடிப்பு, ஓய்வு, விளையாட்டுன்னு சந்தோஷமா இருந்தாங்க'' என்கிற பார்வதியின் குரலில் கறுப்பு வெள்ளை ஞாபகங்கள் விரிகின்றன.

`நாப்பது, நாப்பதைஞ்சு வருஷ நட்பு எங்களோடது. என்னை பார்வதின்னு ஒருநாளும் முழுப் பெயரைச் சொல்லி அக்கா கூப்பிடதேயில்லை. செல்லமா `பாரு'ன்னுதான் கூப்பிடுவாங்க. ஜாலி மூடுல இருந்தா, `பாரு என்னைக் கொஞ்சம் பாரு'ன்னு கேலியா கூப்பிடுவாங்க.

`பிள்ளைங்களை நல்லா படிக்க வை, அவங்க விருப்பப்பட்டதை செஞ்சு வை, உனக்கு தனிப்பட்ட முறையில கொஞ்சம் சேர்த்து வைச்சுக்க'ன்னு ஒரு கூடப் பொறந்த அக்கா எப்படி அட்வைஸ் பண்ணுவாங்களோ, அப்படித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் பையனைக் கூப்புட்டுக்கிட்டுப் போனா, அவனை ஆசையா தூக்கி மடியில வைச்சிப்பாங்க. `அம்மா, உனக்காகத்தான் கஷ்டப்படுறா. நீ பெரிய பையனா ஆனதுக்கப்புறம் அம்மாவை நல்லாப் பார்த்துக்கணும்'னு சொல்வாங்க. அக்காவோட பிறந்த நாள் விழாவுல கலந்துக்குறப்போ இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்து, மேடையிலேயே அழுதுட்டேன்'' என்றவர் ஈரக் குரலுடன் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

அக்கா கின்னஸ் சாதனை செஞ்ச நடிகைன்னாலும் அது சில நேரங்கள்ல குழந்தை மாதிரிதான். ஒரு தடவை முட்டியில ஆபரேஷன் செஞ்சுக்கிட்டு வீட்ல இருந்தப்போ நேர்ல போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் `வலி தாங்க முடியலேடி பாரு'ன்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. நான் உடனே அக்காவோட காலைத் தடவிக்கொடுத்து, கை விரல்கள்ல சொடக்கு எடுத்துவிட்டு ஒரு குழந்தையைச் சமாதானப்படுத்துற மாதிரி, அக்காவைத் தேத்திட்டு வந்தேன். உலகத்தை விட்டு கிளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, ஒரு விழாவுல பார்த்தேன்.

பார்வதி
பார்வதி

`இன்னும் கொஞ்ச நேரம் என்கூட இருடி. போகாதேடி அப்படின்னு அவங்ககூடவே இருக்கச் சொன்னாங்க. கிளம்பறப்போ கன்னத்துல முத்தம் கொடுத்து `நல்லா இருப்பேடி'ன்னு வாழ்த்தி வழியனுப்பினாங்க. அப்போ எடுத்த போட்டோவை என் போனில்தான் வைச்சிருந்தேன். அந்த போன் தொலைஞ்சு போச்சு. பச்... வாழ்க்கையில நான் பொக்கிஷமா நினைச்ச போட்டோ அது. முத்தம் கொடுத்து வழியனுப்பின நாள்தான் கடைசியா அக்காவை நான் பார்த்தது. அக்கா உடம்பைப் பார்க்கப் போனப்போ, சிவாஜி அண்ணன் வீட்ல அக்கா விரக்தியா உட்கார்ந்தா மாதிரியேதான், நானும் உட்கார்ந்தேன். அப்பதான் அக்காவோட வலி எனக்குத் தெரிஞ்சது. தமிழ் சினிமாவுல ஒரு சிவாஜி, ஒரு எம்.ஜி.ஆர். மாதிரி ஒரு மனோரமா தாங்க'' நடிகை பார்வதியின் குரல் தன் அக்கா மனோரமாவின் மீதான பாசத்தில் தேய்ந்து ஒலிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு