Published:Updated:

``15 வயசுல கல்யாணம்; 3 குழந்தைகளுடன் தனி மனுஷியா என் கஷ்டங்கள்..!” - செளகார் ஜானகி ஷேரிங்ஸ்

செளகார் ஜானகி

திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் அறிமுகமாகி கிளாஸிக் காலகட்ட தென்னிந்திய சினிமாவில் கோலோச்சியவர் செளகார் ஜானகி. பத்மஸ்ரீ விருது குறித்த செய்தியால் மீடியாவில் பேசுபொருளாகியிருப்பவரின் பர்சனல் பக்கங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்தவை. அதுகுறித்து புன்னகையுடன் பகிர்கிறார்.

``15 வயசுல கல்யாணம்; 3 குழந்தைகளுடன் தனி மனுஷியா என் கஷ்டங்கள்..!” - செளகார் ஜானகி ஷேரிங்ஸ்

திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் அறிமுகமாகி கிளாஸிக் காலகட்ட தென்னிந்திய சினிமாவில் கோலோச்சியவர் செளகார் ஜானகி. பத்மஸ்ரீ விருது குறித்த செய்தியால் மீடியாவில் பேசுபொருளாகியிருப்பவரின் பர்சனல் பக்கங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்தவை. அதுகுறித்து புன்னகையுடன் பகிர்கிறார்.

Published:Updated:
செளகார் ஜானகி

நூற்றாண்டு கண்ட சினிமாத்துறையில் நாயகர்களின் ஆதிக்கமே இன்றுவரை ஓங்கிக்கொண்டிருக்கும் நிலையில், திருமணமானதும் நாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைவது எழுதப்படாத விதி. அதற்கு விதிவிலக்கான செளகார் ஜானகி, திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் அறிமுகமாகி கிளாசிக் காலகட்ட தென்னிந்திய சினிமாவில் கோலோச்சியவர்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் உட்பட அப்போதைய உச்ச நாயகர்களுடன் இணைந்து நடித்தவர், பொதுவெளியில் மக்களுடன் மக்களாகக் கலந்த, படாடோபம் இல்லாத வாழ்க்கையையே இப்போதும் கடைப்பிடிக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவான `தம்பி’ படத்தில் நடித்தவர், வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது குறித்த செய்தியால், கடந்த ஒரு வாரமாகவே மீடியாவில் பேசுபொருளாகியிருப்பவரின் பர்சனல் பக்கங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்தவை. அதுகுறித்து புன்னகையுடன் பகிர்கிறார் செளகார் ஜானகி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் பூர்வீகம் ஆந்திரா. குடும்பத்துல அப்பா உட்பட பலரும் படிச்சவங்க. 15 வயசுலேயே எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. என்னால ஸ்கூல் படிப்பை முழுசா முடிக்க முடியலை. அப்பாவின் வேலை விஷயமா எங்க குடும்பம் அஸ்ஸாமில் இருந்தப்போ, நானும் என் கணவரும் அங்கே சில காலம் தங்கினோம். அப்போ கவுஹாத்தி யுனிவர்சிட்டியில படிப்பை முடிச்சேன். என் கணவருக்குச் சரியான வேலை அமையாததால, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுச்சு. முதல் குழந்தை பிறந்த பிறகு, என் கணவருடன் போய் சினிமாவுல வாய்ப்பு கேட்டேன். அதிர்ஷ்டவசமா `செளகார்’ங்கிற தெலுங்குப் படத்துல வாய்ப்பு கிடைச்சு, தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சேன்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

சென்னையிலேயே வீடு எடுத்துத் தங்கினோம். சினிமா தவிர, டைரக்டர் கே.பாலசந்தர் சார் உட்பட பலரின் மேடை நாடகங்கள்லயும் நடிச்சேன். சினிமாவுல நான் பேரும் புகழும் வாங்கினாலும், என் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமா அமையல. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளோடு, தென்னிந்திய சினிமாவுல பிரபலமான நடிகையா உயர்ந்தபோதும், சிங்கிள் பேரன்ட்டா யாருடைய ஆதரவும் கிடைக்காம தனிப்பட்ட வாழ்க்கையில நான் எதிர்கொண்ட போராட்டங்கள் சொல்லி மாளாது.

அதுக்காக யாரையும் நான் குறைபட்டுக்கிட்டதில்லை. சினிமாவுல கிடைக்கிற பேரும் புகழும் நிரந்தரம் இல்லைங்கிறதாலதான், ஆரம்பத்திலிருந்தே எல்லோரையும்போல இயல்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கிறேன். இந்தக் குணத்தால, பட வாய்ப்புகள் இல்லாதபோதும் எனக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை” என்கிறார் மென்சிரிப்புடன்.

ஜெயலலிதாவுடன் செளகார் ஜானகி
ஜெயலலிதாவுடன் செளகார் ஜானகி

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய `மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலும், `நீரோடும் வைகையிலே’, `கண் போன போக்கிலே கால் போகலாமா’, `புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்’ போன்று இவர் தோன்றிய பாடல்கள் பலவும் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

சுவாரஸ்யமான சில அனுபவங்களைப் பகிர்ந்தவர், ``எனக்குப் பல படங்கள்ல வாய்ப்பு கொடுத்த கே.பாலசந்தரின் `தில்லு முல்லு’ படத்துல நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்துல பைப் வழியே வீட்டுக்குள்ள நான் வரும் காட்சியைப் பத்தி சொன்ன பாலசந்தர், `உங்களால பண்ண முடியுமா?’ன்னு கேட்டார். `ரிகர்சல் வேணாம். நீங்க ஆக்ஷன் சொல்லுங்க’ன்னு சொல்லி, அந்தக் காட்சியை ஒரே டேக்ல நடிச்சு முடிச்சேன். பாலசந்தர் உட்பட படக்குழுவினர் பலரும் கைதட்டி என்னைப் பாராட்டினாங்க. பல படங்கள்ல மாடிப்படியிலேருந்து உருண்டு கீழே விழுற மாதிரியான காட்சிகள்ல டூப் இல்லாம நானே நடிச்சிருக்கேன். சம்பளம் உட்பட பல வகையிலயும் ஏமாற்றங்களைச் சந்திச்சிருந்தாலும், உழைப்புல மட்டும் யாருக்கும் நான் குறை வெச்சதில்லை. தயாரிப்பாளர்களுக்கும் எந்த வகையிலும் சிரமம் கொடுத்ததில்லை.

Sowcar Janaki
Sowcar Janaki

தமாஷான ஒரு விஷயம் சொல்றேன். ஒரே காலகட்டத்துல நானும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியும் சினிமாத்துறையில வேலை செஞ்சதால, ரசிகர்கள் எனக்கு அனுப்பும் லெட்டர்ஸ் பலவும் அவங்க வீட்டுக்கும், அவங்களுக்கு வர வேண்டிய லெட்டர்ஸ் எனக்கும் வந்திடும். இதே மாதிரி போன் அழைப்பிலும் குளறுபடிகள் நடக்கும். ஒருகட்டத்துல பல ஆவணங்கள்லயும் `செளகார் ஜானகி’னு என் பெயரை மாத்திக்கிட்டேன்.

பலரும் என் சிகையலங்காரம் பத்தி கேட்பாங்க. என் உடலுக்கு `ஹேர் டை’ ஒத்துக்காதுனு தெரிஞ்சு, ஷூட்டிங் தவிர்த்து, தனிப்பட்ட முறையில அதைப் பயன்படுத்தவே மாட்டேன். நீளமான நரைமுடியுடன் இருக்கிறதுலயும், நரைமுடியில ஜடை பின்னிக்கிறதுலயும் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் `பாப் கட்’ ஸ்டைலுக்கு மாறினேன். பராமரிப்புக்குச் சுலபமா இருக்கிறதால பல வருஷமாவே இதே ஸ்டைல்ல சிகையலங்காரம் பண்ணிக்கிறேன்” என்பவர், ஆங்கிலத்தில் புலமை கொண்டவர். டிவி, செய்தித்தாள், யூடியூப் வாயிலாக உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

பர்சனல் பக்கங்கள் குறித்துப் பேசியவர், ``என் அம்மாவுக்குச் சமையல் மற்றும் ஆன்மிகத்துல அதிக நாட்டம். இந்த ரெண்டு விஷயத்துலயும் எனக்கும் ஆர்வம் அதிகம். சமையல், பாத்திரங்களைக் கழுவுறது, துணிகளைத் துவைச்சுக்கிறதுனு எனக்கான வேலைகளை நானே செஞ்சுப்பேன். என் மூத்த பொண்ணு சென்னையில இருக்கா. இளைய மகளும் மகனும் பேரப்பிள்ளைகளும் அமெரிக்காவுல இருக்காங்க. குடும்பத்தினர் ஒண்ணு கூடினா திருவிழா கணக்கா இருக்கும். அவங்க எல்லோருக்கும் நானே சமைச்சுப்போடுற அளவுக்கு மனசுலயும் உடம்புலயும் இன்னும் எனக்குத் தெம்பு இருக்கு.

எனக்கு 90 வயசு முடிஞ்சதால, கடந்த டிசம்பர்ல குடும்பத்தினர் என்னை சர்ப்ரைஸா சென்னைக்கு வர வெச்சாங்க. எல்லோரும் சேர்ந்து எளிமையான முறையில என் பிறந்தநாளைக் கொண்டாடினாங்க. கொரோனா அதிகமானதால இன்னும் சென்னையிலேதான் இருக்கேன். எப்பவும்போல, சென்னையிலிருக்கும் இப்போதுகூட எனக்கான சமையல் வேலைகளை நானேதான் செஞ்சுக்கிறேன். சமீபத்துல தெலுங்குல ஒரு படம் நடிச்சேன்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

கொரோனா பிரச்னை ஓரளவுக்குக் குறைஞ்சதுக்குப் பிறகு, நல்ல வாய்ப்புகள் வந்தா மட்டும் நடிப்பேன். நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததா சந்தோஷம் ஏற்பட்டிருக்கு. என்ன நடந்தாலும் நமக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கிறது நம்ம கையிலதான் இருக்கு. எல்லாத்துக்குமே மனசுதான் காரணம்” என்று நிறைவுடன் கூறி முடித்தார்.