Published:Updated:

``ரஜினி, கமல் சரித்திரத்தில் என் பெயர் தவிர்க்க முடியாதது, ஏனெனில்..."- பின்புலம் பகிரும் ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா

நான், கமல், ரஜினி மூவரும் சினிமாவில் ஒரே காலகட்டத்துல ஒண்ணாவே வளர்ந்தோம். மூவரும் ஓர் இடத்தில் இருந்தால் செம ரகளை, கிண்டல்தான். 'பில்லா', 'அன்னை ஓர் ஆலயம்' உட்பட ஏறத்தாழ 30 படங்களில் ரஜினியுடன் நடிச்சேன்

ஸ்ரீப்ரியா... தமிழ் சினிமாவின் 'டாம்' கேரக்டர் நாயகி. துடிப்பான, சவாலான ரோல்களில் அதிகம் நடித்து புகழ்பெற்றவர். தன் வெற்றிப் பயணம் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

"ஆங்கிலவழிப் பள்ளியில படிச்சதால, ஆரம்பகால சினிமா நடிப்பில் தமிழ்ல சரளமா பேச, எழுத வராது. அதற்காகப் பிற்காலத்துல வெட்கப்பட்டேன். எதற்கெடுத்தாலும் கமல் சாரைதான் பாலசந்தர் சார் உதாரணமா சொல்வார். நடிப்பில் அவருக்கு இணையா வருவது கடினம்னு உணர்ந்து தமிழ் உச்சரிப்பு, டான்ஸ், நடிப்புன்னு பல விஷயங்களைக் கூச்சம் பார்க்காம கமல் சாரிடம் கத்துக்கிட்டேன். நண்பர் என்பதைவிடவும் ஆசிரியராகவே அவர்மீது அதிக மதிப்பு வெச்சிருக்கேன். பல்வேறு படங்கள்ல நடிச்சிருந்த நிலையில், 'ஆண் பிள்ளை சிங்கம்' படத்துல சிவகுமார் சாருக்கு ஜோடியா ஹீரோயினானேன். அப்போதெல்லாம் எனக்கு வெட்கப்படவே தெரியாது.

தேவர் ஃபிலிம்ஸுக்கு அப்போதைய சில படங்கள் சரியா போகலை. அதனால, 'இந்தப் படமும் ஹிட்டாகலைனா, இனி படமே எடுக்க மாட்டேன்'னு தேவர் முடிவு பண்ணி, 'ஆட்டுக்கார அலமேலு' படத்துல என்னை நடிக்க வெச்சார். அதன் தெலுங்கு வெர்ஷன் 'பொட்டேலு புண்ணம்மா'விலும் நான்தான் ஹீரோயின். ரெண்டு படமும் பெரிய ஹிட்! அதன்பிறகு முன்னணி ஹீரோயின் ஆனதுடன், என் சம்பளமும் கணிசமா உயர்ந்துச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் ஃபிலிம்ஸ்ல நான் நடிச்ச படங்கள்ல ரஜினி, கமல் உட்பட யார் ஹீரோவா நடிச் சாலும், சென்டிமென்ட்டா முதல் காட்சியில என்னைத்தான் நடிக்கவைப்பாங்க.

இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் சாரோட புகழ் தெரியாமலேயே அவருடைய, 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்துல நடிச்சேன். 'அவள் அப்படித்தான்' படத்துல நடிக்க முதலில் எனக்கு விருப்பமே கிடையாது. அந்தக் கதையை தீர்க்கதரிசனத்துடன் உள்வாங்கின கமல் சார்தான் என்னை வலியுறுத்தி நடிக்க வெச்சார். அந்தப் படம் மூலம்தான் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது எனக்குக் கிடைச்சுது. விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2F0vzVa

``ரஜினி, கமல் சரித்திரத்தில் என் பெயர் தவிர்க்க முடியாதது, ஏனெனில்..."- பின்புலம் பகிரும் ஸ்ரீப்ரியா

ஆரம்பக் காலத்துல பெரிசா ஆர்வம் இல்லாம நடிச்ச நிலையில, பின்னர் பொறுப்புணர்வு டனும் அர்ப்பணிப்புடனும் நடிச்சேன். சினிமாவை என் கரியராக ஏத்துக்கிட்டேன். நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சு குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். அப்போதைய என் அமைதியான குணம், சினிமா தொழிலுக்கு சரிவராதுன்னு உணர்ந்தேன். என் பாதுகாப்புக்காக போல்டான பெண்ணாக என்னை மாத்திக் கிட்டேன். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் தெலுங்கு ரீ-மேக் 'அந்துலேனி கதா' படத்துல என் அண்ணனாக நடிச்சார், ரஜினி. பல படங்களுக்குப் பிறகு, 'பைரவி' படத்துல அவர் ஹீரோ ஆனார். அப்போ முன்னணி நடிகையா இருந்த என்னிடம், 'நீ கால்ஷீட் கொடுத்தால்தான் இந்தப் படத்தைத் தயாரிப்பேன்'னு கலைஞானம் சார் சொன்னார். ரஜினிக்காக வேறு சில படங் களின் கால்ஷீட்டை மாத்திக்கிட்டு அவருக்கு ஜோடியா அந்தப் படத்துல நடிச்சேன்.

நான் நடிக்கவந்தப்போ, பிரபலமா இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் என்னுடன் ஜோடியா நடிக்கமாட்டேன்னு சொல்லியிருந்தார்னா, 'முருகன் காட்டிய வழி' படத்தின் மூலம் நான் நடிகையாகியிருப்பேனான்னு தெரியாது. அதனால, யாருடன் நடிக்கிறோம் என்பதைவிட, என் கேரக்டர் பேசப்படக்கூடியதா இருக்கணும் என்பதில்தான் கவனமா இருந்தேன். எங்களுக்கு ஸ்கிரிப்ட் படிச்சுக்காட்டுறப்போ, ரஜினியை கவனிக்கவிடாம சேட்டை பண்ணுவேன். அவருக்கு காபி கொடுக்கிற காட்சிகள்ல உப்பு கலந்து கொடுத்துடுவேன். சமாளிச்சு நடிச்சு முடிச்சுட்டு என்னிடம் செல்லமா சண்டை போடுவார். பெற்றோரைப் பிரிஞ்சு நான் தனியா வசிப்பதாக ஒருமுறை பத்திரிகை ஒன்றில் பொய்யான செய்தி வெளியாச்சு. அதைப் படிச்சுட்டு ஸ்கூட்டர்ல என் வீட்டுக்கு வந்த ரஜினி, நீண்டநேரம் ஆலோசனை கொடுத்துட்டுப் போனார். இப்படி எங்க நட்புக்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

நான், கமல், ரஜினி மூவரும் சினிமாவில் ஒரே காலகட்டத்துல ஒண்ணாவே வளர்ந்தோம். மூவரும் ஓர் இடத்தில் இருந்தால் செம ரகளை, கிண்டல்தான். 'பில்லா', 'அன்னை ஓர் ஆலயம்' உட்பட ஏறத்தாழ 30 படங்களில் ரஜினியுடன் நடிச்சேன். 'ராம் லட்சுமண்', 'சட்டம் என் கையில்' உட்பட 25-க்கும் அதிகமான படங்கள்ல கமல்கூட நடிச்சேன். ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்கள்ல நடிச்ச நடிகை நான்தான்!

ஒருமுறை ஒரு பத்திரிகைக்காக ரஜினியைப் பேட்டி எடுத்தேன். அவருடைய திரைப்பயணத்துல முக்கிய பங்காற்றிய பெண்ணாக என்னைக் குறிப்பிட்டார். அதேபோல, சமீபத்துல கமல்ஹாசன் சாரின் 60 ஆண்டுக்கால சினிமா பயண பாராட்டு விழா நடந்துச்சு. அதில் அவர் திரைப்பயணத்தில் முக்கியமான 60 பேரில், உடன் நடித்த நடிகைகள் என்ற முறையில் இரண்டு பெண்களாக சாவித்ரி அம்மாவையும் என்னையும் மட்டுமே குறிப்பிட்டார். ரஜினி, கமலின் வெற்றிச் சரித்திரத்தை என் பெயர் இல்லாமல் எழுதவும் முடியாது; முடிக்கவும் முடியாது. இந்தப் பெருமையே எனக்குப் போதும்!

பாலு மகேந்திரா சார் பலமுறை வலியுறுத்தியும், நேரமின்மையால் 'மூன்றாம் பிறை' படத்துல ஸ்ரீதேவி நடிச்ச ரோல்ல என்னால நடிக்க முடியலை. பிற்காலத்துல நான் இயக்கிய 'சாரதா', ‘மறக்க முடியுமா?' சீரியல்களின் ஒவ்வொரு எபிசோடையும் பார்த்துட்டு அவர் என்னை மனதாரப் பாராட்டினார்.

கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, வாலி, கமல்ஹாசன் ஆகியோர் மூலம்தான் தமிழ் கத்துகிட்டேன். 'தன் வசனங்களைச் சிறப்பாகப் பேசும் நடிகைகள்'னு ஐவரில் என் பெயரையும் குறிப்பிட்டார் கலைஞர். அது எனக்குப் பெரிய பெருமை! தமிழில் எனக்கு எந்த சந்தேகம்னாலும், முன்பு கவிஞர் நா.முத்துக்குமார்கிட்ட கேட்பேன். அவர் மறைவுக்குப் பிறகு, எப்ப வேண்டுமானாலும் கமல் சார்கிட்ட சந்தேகம் கேட்பேன்.

``ரஜினி, கமல் சரித்திரத்தில் என் பெயர் தவிர்க்க முடியாதது, ஏனெனில்..."- பின்புலம் பகிரும் ஸ்ரீப்ரியா

'அண்ணாமலை' பட ப்ரிவியூ ஷோ. அரங்கத்தில் ரஜினி நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்னாங்க. நான் எழுந்திரிக்கலை! நேரா என் பக்கத்துல வந்தார். நான் எழுந்தேன். என்னிடம் நலம் விசாரிச்சுட்டு நகர்ந்தார். 'நீ மட்டும் ஏன் எழுந்திரிக்கலை'னு என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆச்சி மனோரமா கேட்டாங்க. 'சீனியர் நடிகையான நீங்க ஏன் எழுந்திரிச்சீங்க? ரஜினி என் நெருங்கிய நண்பர். நான் உட்பட இங்க இருக்கிற யாருமே தான் வர்றப்போ எழுந்திரிச்சு நிற்கணும்னு அவர் எதிர்பார்க்கமாட்டார்'னு சொன்னேன். இப்படி, என் மனசுக்குச் சரின்னுபட்டதை வெளிப்படையா பேசுவேன்; செய்வேன். அது பிறருக்குத் திமிராகத் தெரியலாம். நான் யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க மாட்டேன்.

'அவள் அப்படித்தான்' படத்தின் ரீமேக் உரிமையை எனக்குத் தர்றீங்களா'ன்னு இயக்குநர் ருத்ரய்யாகிட்ட கேட்டேன். 'ரஜினி, கமல் ரோல்ல யார் நடிப்பாங்க'ன்னு கேட்டவர், உரிமையைத் தர மறுத்துட்டார். ஆனா, அவர் மறைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி கொடுத்தார். அப்போ 'த்ரிஷ்யம்' (தெலுங்கு) படத்தை இயக்கிட்டிருந்ததால, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்க முடியலை. கமல் சார் ரோல்ல சூர்யாவையும், ரஜினி சார் ரோல்ல தனுஷையும், நான் நடிச்ச ரோல்ல நயன்தாரா அல்லது த்ரிஷாவையும் நடிக்கவைக்க இப்போதும் எனக்குள் யோசனை இருக்கு... பார்ப்போம்!"

- தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80'ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் அவள் விகடன் தொடரில் ஸ்ரீப்ரியா பகிர்ந்தவற்றின் சிறு பகுதி இது. அவர் பகிர்ந்த ஏராளமான பர்சனல் - திரை அனுபவங்களை முழுமையாக வாசிக்க > 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25 - என் பெயர் இல்லாமல் ரஜினி, கமல் சரித்திரத்தை எழுத முடியாது! https://cinema.vikatan.com/celebrity/1980s-evergreen-heroins-actress-sripriya

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு